துடைப்பானின் குறிப்புக்கள்

அசோக்

ஒருவர்மீது செலுத்தப்படும் வன்செயல் வடிவங்களில் உச்சநிலை எதுவென நீ கருதுகின்றாய்?
நீ இப்படி ஒரேயடியாகக் கேட்க முயலின் இக்கேள்விக்கான என் பதில் சிரமமானதே. ஆனால் இப்படிச் சொல்லலாம். உடலின் உயிர் பிரித்தலையே கடுமை என்பேன். வன்கொடுமைகளின் பல்வேறுவகைப்பட்ட பிரயோகங்களும் முடிவுகளும் உயிர் பறித்தலின் நிலையைவிட அகோரம் மிக்கதாயினும் கொலை என்ற அடையாளமே உடலின் இயங்குநிலை என்ற பௌதிகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் உச்சநிலையை அடைகின்றது. அதற்காக உயிர்க்கொலைகளிலும் கொடுமைமிக்க உளவியல் கொலைகளை நான் நிராகரிக்கின்றேன் என்பதல்ல.

உளவியல்கொலை என்பதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை?

நான் கொலை எனும் செயற்பாட்டை இரண்டாய் இனம் காண்பேன். ஒன்று உடல் சார்ந்த கொலை. மற்றையது உளவியல் கொலை. இவ் உளவியல் கொலை இரண்டு மையங்களில் தன் செயற்பாட்டைக் கொண்டு இயங்கும். அநேகமாய் கடந்த காலங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் என சொல்லப்பட்டவற்றின்பால் நாம் நம் கவனத்தைச் செலுத்துவோமானால் இதனை நடைமுறைகளில் இருந்து விளங்கிக்கொள்ளமுடியும். ஒவ்வொரு கொலையின் உயிர் அழிப்புக்கு முன்னாலும், பின்னாலும் கொலையாளிகளின் மதிநுட்பமான செயற்பாடு உயிர்பறித்தலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் மீதான குற்றச் சாட்டுகளை, வதந்திகளை, பொய்மைகளை தங்களின் வர்க்கநலன்களுக்கேற்ப சமூகமக்கள் திரள்மீது பக்குவமாய் மூளைச்சலவை செய்வதும், அவர்களின் மனோநிலையை உளவியலை இக்கொலையின் சார்பு நிலைக்குத் தள்ளுவதும்தான். அதாவது இம்மனிதன்பற்றிய நல்எண்ணங்களை, அர்த்தங்களை அவர்களாகவே தங்கள் மனத்தில் இருந்து அகலச் செய்யத் தூண்டுதல். இதன்மூலம் இக்கொலையை நியாயம் மிக்கதாய் மனதில் கற்பித்தல். மற்றைய உளவியல் கொலையின் மையச் செயற்பாடு குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் மனிதனின் மன உணர்வுகளினூடாகக் கட்டியமைக்கப்படுகின்றது. இயக்கங்களினால் கைது செய்யப்படும் மனிதன்மீது இவ் இயக்க நபர்கள் கைக்கொள்ளும் உடல்ஃவார்த்தை சித்திரவதைகள், பாலியல் மனோவிகார குரூர துன்புறுத்தல்கள். இவைகள் ஒரு மனிதனின் உளவியலை, ஆரோக்கியமான மனஉணர்வுகளைக் கொன்று அவனை நடைப்பிணமாக்கி விடுகின்றது. கடந்தகாலங்களில் ஒவ்வொரு இயக்கங்களும் தங்கள் தங்கள் உறுப்பினர்களை இங்ஙனம் கொலை புரிந்து நடைப்பிணமாக்கி நடுத்தெருவில் அரசியல் அநாதைகளாக்கி நடமாட விட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை நாம் அறியமுடியும். உடலின்மீதான வன்முறையைவிட உள்ளத்தின் மீதான இக் குரூரவன்முறை மிகமிகக் கொடியது. எமது தேசிய விடுதலை இயக்கங்களின் தோற்றுவாய்க் காலங்களிலிருந்து இன்றுவரை உடல் சார்ந்த, உளம் சார்ந்த இவ்வன்முறை அணுகுமுறைகள் இயக்கத்தலைமைகளின் அதிகாரத்துவ சுயநலப்போக்கிற்கு மிகவும் ~அழகாய்| கொடியமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சக போராளியின் ஆக்கபூர்வ விமர்சனங்களைக்கூட மறுக்கும் அதிகாரத்துவம்பற்றி இன்றுகூட நாம் மௌனமானவர்களாகவே இருக்கின்றோம்.

இதை நினைக்கும்போது ~இட்|(விலங்கு வன்உணர்ச்சி) நம் எல்லோர் உள்ளத்திலும் இருக்கின்றது என்ற சிக்மண்ட் பிராய்டின் கூற்றே நினைவுக்கு வருகின்றது. ~இட்| எனும் விலங்கு வன்உணர்ச்சிக்கும் இனவாத உணர்வுகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளதை நாம் பார்க்கவேண்டியுள்ளது. இந்த ~இட்| செயற்பாடுபற்றி சிக்மண்ட் பிராய்டை ஆராயத் தூண்டியதே முதலாவது உலக மகாயுத்த அழிவுகள்தான். எழுபது இலட்சம் இளைஞர்கள் போர்வீரர்களாக இறந்தனர். நூற்றிஐம்பது இலட்சம் போர்வீரர்கள் அங்கம் இழந்தனர். 1923ம் ஆண்டில் சிக்மண்ட் பிராய்டினால் ~ஈத்தும் ஈகோவும்| என்ற ஆய்வுநூல் வெளியிடப்பட்டது. ஆனால் இன்றுவரை அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் விலங்கு வன்உணர்ச்சி கொண்ட கொலைகளும், அழிவுகளும், சித்திரவதைகளும், பயங்கரங்களும் முடியவில்லை.

தேசியவாத உணர்வுகளின் வெளிப்பாடு தேசியவெறியாகி விலங்கு வன்உணர்ச்சியோடு தம் சக தேசிய மக்களை முற்றுமுழுதாக எதிரிகளாகப் பார்க்க முனையும் போக்கை, அவர்களை அழிக்க நினைக்கும் நிலையை உருவாக்கி வருகின்றது. சிங்களத் தேசியத் தலைமைகளிலிருந்து தமிழ்த் தேசியத் தலைமைகள்வரை இந்நிலைகளை மக்கள் மனங்களில் உருவாக்கும் சக்திகளாக இருந்துவந்துள்ளன. காலத்திற்குக்காலம் மிகவும் கொடூரமான முறையில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கொலைசெய்யப்படும் சிங்கள பொதுமக்களின் மரணம், முஸ்லிம் மக்களின்மீது நடத்தப்படும் படுகொலைகள் இவற்றிலிருந்து தேசியவாதத்தின் போக்கு எவ்வாறு எதிர் தேசிய இனங்களின்மீது விலங்கு வன்உணர்ச்சியாக கொடூரமனநிலை உணர்வுகளோடு கட்டியமைக்கப்படுகின்றது என்பதை அறியமுடியும்.

அதேநேரம் தங்களின் இனத்துக்குள் தங்களின் தலைமைகளை, தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியாத, மாறுபட்ட கருத்துக்கொண்ட மனிதர்களையெல்லாம் தங்களின் துரோகிகளாக பார்க்க முனையும் போக்கையும், மக்களின் விரோதிகளாகக் காட்ட விழையும் நிலையையும் நாம் அவதானிக்க முடியும். இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை, சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் எல்லோரையும் துரோகிகளாகப் பார்க்கும் உளவியல் கலாச்சார பாரம்பரியத்தின் தோற்றுவாய் தமிழரசுக்கட்சி என்றே கூறுவேன். 1972இல் தமிழரசுக்கட்சிக் கூட்டம் ஒன்றில் அன்றைய உணர்ச்சிக்கவிஞரும் இன்றைய தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகருமான காசிஆனந்தன் என்னும் நபர் இப்படிக் கூறுகின்றார், '....... ஆகியோர் தமிழினத்தின் எதிரிகள். அவர்கள் இயற்கை மரணத்திற்கோ அல்லது விபத்தான மரணத்திற்கோ தகுதியானவர் அல்லர். தமிழ்மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அவர்கள் எப்படி மரணிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்."

இந்த நபர் போன்றவர்களின் பிரச்சாரவாடை உணர்ச்சி ஊட்டல் என்பவற்றின் பிழைகளை நாம் கடந்த காலங்களில் பல்வேறு இயக்கங்களின் ஊடாக அறுவடை செய்துள்ளோம். இதற்கு பல்வேறு கொலைகளை நாம் உதாரணம் காட்டமுடியும். 1985ம் ஆண்டில் யாழ் பிரஜைகள் குழுவின் முக்கிய உறுப்பினரும், யாழ்ஃபரியோவான் கல்லூரி அதிபருமான திரு. ஆனந்தராஜா அவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். இவர் படுகொலை செய்யப்படுவதற்கு புலிகளினால் வைக்கப்பட்ட பிரச்சாரம் இவர் இராணுவ அதிகாரிகளோடு நட்பு வைத்திருந்தார் என்பதே. இக்கொலை நடந்து 15 மாதங்களின் பின்னர் ஸ்ரீலங்கா தொலைக்காட்சிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளுடன் உறவுபூண்டு காட்சியளித்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் தேசிய சந்தர்ப்பவாத அரசியல். இதை விளங்கிக்கொள்ள முனையும் ஒவ்வொரு மனிதனின்மீதும் தேசிய சந்தர்ப்பவாதிகளின் ~வெகுஜன புனைவுகள்| துரோகி என்ற பட்டத்தோடு மரணத்தை நோக்கிய ~கதைகட்டல்களாகவே| அமைந்திருக்கின்றன.

தேசியவாத உணர்வுகள் எப்படி கட்டியமைக்கப்படுகின்றது என்பதுபற்றி நீ எவ்வாறு விளங்கிக்கொள்ள முயலுகின்றாய்?

தேசியம் தொடர்பாய் நம்முன் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் என் பார்வை இது என்பேன். ஒரு தேசியஇனத்தின் இனப்பிரச்சினை எந்த அரசியல் கருத்தியல்கூறுகளை தன்னகத்தே கொண்டு வழி நடாத்தப்படுகின்றது என்பதே ஆதார பிரச்சினையாகும். தேசியம் என்பது ஒரு தேசியஇனம் உருவாக்கும் உளவியல் - கருத்தியல் சார்ந்த அரசியல் செயற்பாட்டு இயக்கம். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நியாயம் மிக்க உரிமைகளுக்கு அப்பால் ஒடுக்கப்பட்ட தேசியத்தலைமைகள் ஏனைய தேசியஇனங்களின்பால் விரோதங்களையும் வெறுப்புக்களையும் குரோதங்களையும் ஒடுக்கப்பட்ட தேசியஇன மக்களின் உளவியலில் ஏற்படுத்தி அதன் தாக்கமாக தேசியமாக, தேசியவெறியாக கட்டியமைக்கும் செயலையே தேசியவாத உணர்வுநிலை உச்சமாக நான் கருதுகின்றேன். இந்த உளவியலில் ஏற்படும் தேசியவெறித் தாக்கமே தமிழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்படும் அப்பாவி சிங்கள பொதுமக்களின் மரணங்களை ஏற்றுக்கொள்வதும் முஸ்லிம் மக்கள் அடித்து விரட்டப்படும்போது, கொலைசெய்யப்படும்போது மௌனமாய் பார்த்துக்கொண்டிருப்பதுமாகும். தேசியவாதம் எப்பொழுதும் நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்தோ, முற்போக்குத் தன்மையிலிருந்தோ எங்கேயும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்னும் கசப்பான உண்மையை நாம் ஜீரணித்துத்தான் ஆகவேண்டியுள்ளது.

அப்படியானால் எமது போராட்டத்தை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா?

எமது ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்டத்தை நான் என்றுமே நிராகரித்தது கிடையாது. எமது போராட்டத்தில் உயிரை ஈயும் ஒவ்வொரு சக மனிதனையும் நான் எப்பொழுதும் நேசிப்பவனாகவும் அவன்பால் மரியாதை கொண்டவனாகவுமே இருக்கின்றேன். நான் பேசுவதெல்லாம் இந்த நல் மனிதர்களின் உயிர்த்தியாகங்கள்மீது சவாரிசெய்யும் பிற்போக்குவாத இராணுவத்தலைமைகள்பற்றியும் அவர்களின் அரசியல்பற்றியுமே. நானும் ஓர் தேசியவிடுதலைஇயக்கம் ஒன்றில் இருந்தவன் என்ற உணர்வும், அதன் யதார்த்த நிலையும்தான் என்னை தேசியவாதம் தொடர்பாய் ஆராயத் தூண்டுகின்றது. இந் நேரத்தில் டாம் நாய்ரனின் கருத்துக்களை பார்ப்பது அவசியமாகின்றது. அவர் கூறுகின்றார்:

'நவீனத்துவம் மற்றும் உலகமுதலாளித்துவத்தின் விளைவான சமச்சீரற்ற வளர்ச்சி தர்க்க விரோதமான ஒரு கண்ணோட்டத்தை பின்தங்கிய பகுதி மக்கள் சமூகங்களின் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றது. நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புக்கள், உரிமைகள் இவைகள் அம்மக்களில் ஆத்திரம் வெறுப்புக்களாய் மாறி உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது பின்னர் தேசியக்கருத்தியலாகவும், தேசியஇயக்கங்களாகவும் வெளிப்படுகின்றது. பின்தங்கிய பகுதிகளிலுள்ள மேல்தட்டினரே இத்தகைய உணர்வுகளுக்கு முதன்முதலில் ஆளாகுவதோடு அவர்களே தேசியஇயக்கங்களை முன்னெடுத்தும் செல்கின்றனர்."

அத்தோடு கிராம்ஷி சொல்வதையும் கேட்போம், 'மேலாண்மை செலுத்தக்கூடிய வர்க்கமாக உருவாக விரும்பும் எந்த வர்க்கமும் தன்னைத் தேசியமயமாக்கிக் கொள்ளும்"

சரி, அப்படியாயின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிதான் என்ன?

ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் தேசியவாத உணர்வை மையப்படுத்தி உணர்ச்சி ஊட்டி கொதிக்க வைக்க முயலும் பிற்போக்குவாத அரசியல் தலைமைத்துவம் தொடர்பாய் விழிப்பாய் இருப்பதும், தேசியஇனப்பிரச்சினைகளை மார்க்சீய வழிப்பட்ட அணுகுமுறையில் இருந்து ஆராய்வதும், தலைமை கொடுப்பதும், முன்னெடுப்பதுவுமே இத்தேசியவாத பெரும் சேற்றிலிருந்து நாம் விடுபட ஏதுவாக இருக்கும் என்பதே என் கருத்தாகின்றது. இல்லாவிடின் ஆபிரிக்கப் புரட்சி எழுத்தாளன் பிரான்ஸ் பனான் சொல்வது போல 'தேசியம் நம்மை குருட்டுச் சந்திக்கே இட்டுச் செல்லும்"