சதுரங்கம்
தயாநிதி
வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற நாள் இன்று, இரண்டு நாட்களாக எனக்கு வழமையான நாளாந்த வேலைகளில் கவனம் செலுத்தமுடியவில்லை. இன்னது என்று பிரித்தறிய முடியாத குமைச்சல். நான் திணறிக் கொண்டிருக்கிற நேரமாய்ப் பார்த்து சிந்துவுக்கும் ஏதோ போல் இருக்கிறது. காச்சல் இல்லை. பல்லும் வந்துவிட்டது. இனிவருவதற்கு ஒன்றும் இல்லை. நேற்று சிணுங்கியவள் இன்று அழத்தொடங்கிவிட்டாள்.
வசந்தனுக்கு இன்று லீவு போடச் சரிவராது. வாரத்தில் முதல் நாள் என்று சொல்லுவார். சாப்பாட்டு மேசையில் ஏதோ குழப்பம் போல. யாருடைய சாப்பாட்டுப் பெட்டி என்பதில் தொடங்கியிருக்கலாம் அல்லது யாருடன் யார் போவது என்பதில் கூட ஆரம்பித்திருக்கலாம். காலைத் தினப்பத்திரிகையில் மூழ்கியிருக்கும் வசந்தனும் அந்த மேசையில் தான் இருக்கிறார். பக்கத்துவீட்டு அனித்தாவுடன் சிந்துபற்றி கதைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சத்தம் இடையூறாக நான் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். என்ன விடயம் சர்ச்சையை கிளப்பியிருக்கும் என்பதை அறிய ஆவல் ஏற்பட்ட போதிலும் கவனம் குலையாது பத்திரிகை படிக்கும் வசந்தனைப் பார்க்கிறேன். என்னுடைய பார்வை ஏதோ ஒரு விதத்தில் அவரை சென்றடைந்திருக்க வேண்டும். தலையுயர்த்திப் பார்த்த வசந்தன்,
'என்ன சாப்பிட்டாச்சே, கைவாய கழுவிப் போட்டு வெளிக்கிடுங்கோ"
'நான் அப்பாவோட"
'நீங்கதானே போனகிழமை முழுக்க போனனீங்க"
'ரெண்டு பேரும் பஸ்ஸில போங்கோ எனக்கு வேலையிருக்கு"
சத்தம் குறைய நான் சிந்துவைப்பற்றி கூறுகிறேன்.
'டொக்டரிட்ட காட்டுமன், நான் 9க்கு நிக்க வேணும்" என அவசரப்பட்டார்.
சிணுங்கும் சிந்துவை கதிரையில் தூக்கி இருத்திவிட்டு பாண், பாணுக்கு பூசுவதை பொலித்தீனில் சுற்றி பிரிஷில் வைக்கிற போதும் மனசுமட்டும் முடிவு எடுக்கப்பட வேண்டிய விடயம் பற்றி சிலாகித்துக் கொள்கிறது. அந்த மனிதனின் அறிக்கையின் முன் பக்கம் படமாகிறது.
'பெயர்:- .........................
பிறந்ததிகதியும் இடமும்:- ......... அகதிமுகாம்.
தாயின் முழுப்பெயர்:- தகவலாளருக்குத் தெரியாது.
தந்தையின் முழுப்பெயர்:- தெரியாது.
கல்வி:- முகாம் பாடசாலை.
லத்தீன் எழுத்துக்கள் அறிமுகமற்ற இவர் பல மொழிகளைப் பேசக் கூடியவர். 1994ல் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது."
நான் தாய்-சேய் நலன் பேணும் மருத்துவருடன் தொடர்பு கொள்கிறேன். தொலைபேசிப்பிரிவில் பணிபுரியும் பெண் அறிகுறிகளை வினாவுகிறாள்.
'நீங்கள் ~பரசிற்| குடுத்துப் பாக்கிறீங்களா அல்லது கட்டாயம் டொக்டரை சந்திக்க விரும்புகிறீர்களா?"
சிந்துவை திரும்பிப் பார்த்துவிட்டு ~பரசெற்| கொடுப்பதாக கூறித் தொடர்பைத் துண்டிக்கிறேன். உடனேயே வசந்தனின் தம்பிக்கு போன் பண்ணுகிறேன்.
'அண்ணி"
'சுகி அண்ணி போனில" என்ற பின்னணியுடன் சுகி 'ஹலோ" சொல்லுகிறாள்
'எப்பிடி போகுது"
'இண்டைக்குப் பறவாயில்லை"
'சிந்துக்கு உடம்பு சரியில்ல. உங்களிட்ட கொண்டு வந்து விடுவம் எண்டு"
'அண்ணி நாங்கள் உங்க வரத்தான் இருக்கிறம்"
'எத்தினை மணியளவில"
'நீங்க எத்தினைக்கு இறங்கவேணும்?"
'நான் பத்துக்கு இறங்கினா காணும்"
'அண்ணை நிக்கிறாரே" மெல்லிய குரலில் சுகி
'இல்லை அவர் போட்டார் ஏதேன் அலுவலே?"
'சீ, அவர் இல்லாட்டி நல்லம்;. நாங்கள் வாறம்." தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
நான் பரசெற்றை சிந்துவுக்கு குடுப்பதற்குள் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி ஏற்பட்டது. பின்னேரம் சொக்கலற் கிடைக்கும்@ சித்தாவும், சித்தப்பாவும் வருகினம் போன்றவை இறுதியில் உதவிக்கு வருகின்றது. அவள் விரும்பி விளையாடும் குதிரையை இருவரும் சேர்ந்து தேடுகிறோம். நேரம் 8.30 ஆகிவிட்டது.
'பொலிசாரின் கருத்துப்படி அந்த மனிதன் ஒரு விடயத்தில் உண்மையை தெரிவிக்கவில்லை. அந்த உண்மையற்ற தகவலின் அடிப்படையில் தான் அவருடைய கேஸ் பதியப்பட்டு, எந்த சிறுபான்மை இனத்தவர் என அறியப்படாது நிராகரிப்பட்ட விண்ணப்பம். முறையீட்டு காலத்தில் இங்கு வசிக்கிறார்."
வெள்ளை நிறமல்லாத குற்றம் புரிகின்ற எல்லா மனிதர்களுக்கும் குற்றம் புரிவதற்கான இயல்பு பரம்பரையலகு மூலம் கடத்தப்படுகின்றது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய பளிங்கு நீல விழிகளையுடைய வெளிர் நிற நீண்ட மனிதன் தனது முடிவிலும் உறுதியாக இருந்தான். சீருடை அணிந்த காரணத்தினாலோ என்னவோ? இதென்ன பலப்பரீட்சையா?
லோயர் ஒரு பக்கமும், சட்டத்தை நெறிப்படுத்துபவர்கள் இன்னொரு பக்கமும். அந்த வெளிநாட்டு மனிதன் உதவியின்றியவனாக காணப்பட்டான். அன்று, பூட்டிய கதவுக்குள் விசாரணைகள் நடைபெற்றன. எல்லாப் பதிவுகளும் எனது மேசைக்கு வந்தவைதான். என்னுடன் பணிபுரிவோரிடையே மாறுபட்ட கருத்துக்கள் அந்த மனிதனின் உடல்நிலை பற்றி ஏற்பட்டிருந்தது.
'மொழியை சரளமாக பேச குறுகிய காலத்தில் கற்றுக் கொண்ட '....." தனது உயிரியல் தாயை சந்தித்துள்ளார்.
தாய் 90களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பில் பொறுப்புவாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்"
இவருடைய நண்பனைக் கைது செய்வதில் பலருக்கு ஈடுபாடு இருந்தது. மனிதாபிமானம் மக்களது உரிமைகளைப் பேணுகிறோம் என்று பெருமிதப்பட்டுக் கொள்பவர்கள் அயல் நாட்டவன் என்றதும் நாலு வரிகளைக் கொண்ட சட்டவிதிகளை நன்றாகப் பிடித்துக் கொள்வதுண்டு.
ஜெகனும் சுகியும் வாசலில் நிற்கிறார்கள். சுகியின் முகம் சரியில்லை. வாசலிலேயே சிந்து கதைக்கத் தொடங்கிவிடுகிறாள். நான் தோளைத் தொட்டு பார்வையால் வினாவுகிறேன். சுகி உடைந்து போய் ஓவென்று அழுகிறாள். ஜெகன் சிந்துவுடன் உள்ளே போகின்றான். நாங்கள் சுகமான உரையாடலைத் தொடர நேரம் எடுக்கிறது. சிந்து நித்திரையாகிவிடுகிறாள். வெறுமை படர்கிறது.
'என்ன பிரச்சனையெண்டு கேக்கலாமா? " இது நான் 'சொல்லுமன்"
'நேற்று அண்ணி கொஸ்பிட்டலில ஸ்கான் பண்ணி பார்த்தவை. அதோட வேற ரெஸ்ற்றும் எடுத்தவை" தொடர முடியாமல் விம்மத்தொடங்கிய சுகியின் கையை இறுக அழுத்துகிறேன்.
'நான் அம்மாட்ட போகப்போறன்". நான் ஜெகனைப் பார்க்கிறேன்.
'பிள்ளைக்கு டவுன் சின்ரோம் என்று டொக்டர் சொன்னவர்." என்று சொல்லிவிட்டு தலையைத் திருப்பிவிட்டார்.
எனது தலைக்குள் நான் வேலை தொடங்கு முன் பதியவைத்தவை வந்து போகின்றது. தொழிலுக்கான உடையில் அந்த நிறுவனத்தில் இருக்கும் போது உணர்ச்சிவசப்படாமல் நடுநிலைமையாக ~செய்தி|யின் நன்மைதீமைகளை எந்தவித ஒளிவுமறைவு இன்றிச் சொல்லவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் முடிவில் எந்தவித பங்களிப்பையும் செய்யக்கூடாது. முடிவெடுக்கும் பொறுப்பை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் விட்டு விடலாம். ஆனால் இங்கு மௌனமாக இருப்பது மேல் என்று எனக்கு படுகிறது. நேரம் விரைகிறது. 9.40ஐத் தாண்டுகையில் நான் எதுவும் கூறாமல் இரண்டு மணிக்கு வருவதாக கூறி விடை பெறுகிறேன்.
'கடமைகளை சரிவரச் செய்ய முயல்வது மனித இயல்பு. கட்டளைகளை நிறைவேற்றுவது கூட கடமைதான். தண்டனைகளை எதற்காக விதிக்கிறோம்? ஒழுங்கு விதிகளைப் பேணுவதற்காக."
இந்த விதிகள் மூலம் என்ன எதிர்பார்க்கிறோம்? சமூகத்தின் அங்கத்தவர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்தும் தண்டனைகள் சமூகத்திற்கு தேவையா? யார் குற்றவாளி, என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியது யார்? எனது வாத்தியாரின் பாடநேரம் மனதில் நிழலாகிறது.
அலுவலக மேசையில் அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகளை மேலெழுந்தவாரியாக பார்க்கிறேன். முதலாவது சிகிச்சைக்குப் பின்பு பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் அவை.
'என்னுடைய அப்பாவை நான் பார்த்ததில்லை"
'அம்மா எங்கே இருக்கிறார்?"
'தேவாலயம் ஒன்றில்"
'பொலிசாரிடம் உண்மையை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம் தெரியுமா?"
'உங்களுடைய குடும்பத்தில் இப்பிடியொரு நிலைமையிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?"
சம்பாசணையைத் தொடர முடியவில்லை என கையெழுத்திடப்பட்டுள்ளது. அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பமும், விண்ணப்பத்திற்கான முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது. லோயரின் முறையீட்டில்
'உயிரியல் தாய், மற்றும் வளர்ப்புத்தாய் இங்கு வசிப்பதாலும் சொந்தநாடு இல்லாத நிலையில் இங்கு மனிதாபிமான ரீதியில் சிகிச்சைக்காலம் முடியும்வரை தற்காலிக வதிவிட அனுமதி கோரப்பட்டிருந்தது."
வெளியே வரும் நான், மிகவும் சந்தோசமாக கதைத்தபடி குறுக்கும் நெடுக்கும் நடக்கும் சம்பத்தை சந்திக்கிறேன். என்னைக் கண்டதும் தமிழில் வணக்கம் சொல்லிவிட்டு நோர்வோஜிய மொழியில் கதைத்தபடி நடக்கத் தொடங்கிவிட்டான். முடிவெடுக்கப்படும் மனிதனின் அறையை எட்டிப்பார்க்கிறேன். நீல வெளிச்சத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறான். எனது முடிவுபற்றியும் லாபநட்டங்களை பட்டியல்படுத்துகிறேன். மனசு இலேசாகிறது.
கூட்டம் தொடங்கி விவாதம் சூடேறுகிறது. நிபுணர் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார். நாங்கள் அவதானிகளாக இருக்கிறோம். இறுதியில் எம்மிடம் வருகிறது. கருத்து தெரிவிக்கப்படுகிறது. எம்மிடையே முரண்பாடுகள் இருந்தபோதிலும் என்னுடைய நோயாளி என்ற வகையில் எனது முடிவுக்காக பார்த்திருக்கின்றனர்.
'நபரின் தனித்தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக சுய கட்டுப்பாடுள்ள செயல்கள் சூழவுள்ளவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றமையால் பிரயாணம் சிபாரிசு செய்யப்படவில்லை" எனக் கையெழுத்திடுகிறேன். நீலக்கண்கள் என்னை ஊடுருவிப் பார்ப்பதாக உணருகிறேன். கைகுலுக்கிவிட்டு வெளியேறுகிறேன். சுகந்தியை நினைக்க உடம்பு சிலிர்க்கிறது.
|