ஊசி இருக்கும் இடம்கூட...
தேவா (கால்ஸ்ரூ)
காலம் : 1999ம் ஆண்டின் தைமாத நாளொன்று, காலை 10மணி
இடம் : ஒரு ஜெர்மன் நகர மாவட்ட நீதிமன்றம்.
சரியாக 9.40க்கெல்லாம் சந்திரன் ஒரு 100வருடங்களை தாண்டியிருந்த அப்பழங்காலக் கட்டிடத்துள் வந்தான். ஜெர்மனியில் வாழும் இந்த மூன்று வருடங்களுக்குள் அவனும் இந்த நாட்டிலே சில நீதிமன்றப்படிகளில் ஏறி இறங்கியிருக்கின்றான். ஆனால் இன்று நடைபெற இருக்கின்ற வழக்கின் விடயமோ வேறு. மனசுள் குளிர் பாய்ந்த மறுகணமே 'அவன்களுக்குத் தண்டனை வேண்டித் தரவேண்டும்" ஆத்திரம் திரண்டு தலை கொதித்தது. இந்த வழக்கால் எழப்போகும் விளைவுகளும்கூடப் பயங்கரமாகத் தெரிந்தது! ஆனால்.... உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அவனை நிழலாய்த் துரத்திவரும் அநீதிகள்.... உடம்பில் உயிரில் ஊறிப் போயிருக்கும் இந்தத் திமிர்கள்.... காலம் காலமாய் திரண்டிருக்கும் இந்த ஆலகால விஷத்தை எத்தனை அரக்கர்கள் கடைந்திருக்கவேண்டும்!
வழக்கு நடைபெறும் அறையைக் கண்டு பிடித்துவிட்ட நிம்மதியில் அறைக்கு முன்னாலிருந்த கதிரையொன்றில் உட்கார்ந்தான். 10நிமிட இடைவேளையின்பின் ஒரு போலிஸ்காரன் வந்தான். சந்திரன் அவனைப் பார்த்தான். அவன் காலைவணக்கத்தை இவனுக்குத் தன் தொண்டைக்குள் சொல்லியபடி இவனைப் பார்த்து தலையை அசைத்தான். சந்திரனுக்கு இவனை ஞாபகம் வந்தது. சந்திரன் வைத்தியசாலையில் இருந்தபோதும், பின்னர் காவல்நிலையத்திலும் தன்னிடம் வாக்குமூலம் எடுத்த அதே போலிஸ்காரன் இவன். அவன் என்னவோ முணுமுணுத்தான். சந்திரன் அதனைக் காதுகொடுக்க முற்பட்டாலும் அது சரியாக பிடிபடவில்லை.
10.05 ஆகியிருந்தது.(நீதிபதியின் மொழி உருவத்தில்) கணா.பாதி.பி.ள்.ளை. சிவா.சோ.தியனதும் தா.மோ.த.ரம் சிவா.னா.டி யான் இனதும் குற்ற விவகாரம் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உள்ளே வரவும். ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. சந்திரன், போலிஸ்காரன் அந்தப் பாரமான கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார்கள். இவர்கள் இருவரும் வணக்கம் கூறி உட்கார தாமோதரனும், சிவசோதியும் மிக வேகமாக உள் வந்தனர். இவர்கள் எங்கேயோ இந்தக் கட்டிடத்தின் மூலையொன்றில் பதுங்கி இருந்திருக்கவேண்டும்! இல்லாவிட்டால் கூப்பிட்ட குரலுக்கு இங்கு தோன்றியிருக்கமுடியாது. (சந்திரன் நினைத்தான்)
சிறிய மேடையின் நடுவிலே நீதிபதி, பின்னால் சுவரில் நீதித்தேவதை. அவள் கண்கள் கட்டப்பட்டு, கையில் தராசு -'இந்தா நீதியைப் பிடி" - தோற்றம்.
நீதி: குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கணா.பாதி.பி.ள்.ளை சிவா.சோ.தி தா.மோ.த.ரம் சிவா.னா.டி.யான் இங்கு முன்னால் வந்திருங்கள். சாட்சிகளாகிய மாரி.மு.த்து சந்திரா.தா.சான், மையர் (போலிஸ்காரர்) தயவுசெய்து வெளியே இருங்கள். நீங்கள் உண்மையையே உங்கள் சாட்சியத்தில் கூறவேண்டும். கூட குறைய சொல்லக்கூடாது. (சந்திரன் நினைத்தான்: எனக்கு நடந்த கொடுமைகளில் கூட்டல் கழித்தல்களே இல்லை. அவைகள் பெருக்கமோ பெருகியவாறே இருக்கின்றனவே!) நீங்கள் சொன்னவை உண்மையெனச் சத்தியம் செய்யப்பட்டு பின்னர் அவை பிழையெனக் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும். சந்திரனும் போலிஸ்காரனும் வெளியே வந்தார்கள். சந்திரன் போலிஸ்காரனுக்குப் பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்தான். இவன் நடந்த சம்பவத்தை மீட்டுப்பார்த்தான். தன் நெற்றியில் தளும்போட இருந்த காயம், இடுப்பில் இன்னும் அவதிப்படுத்தும் வலி, 6மாதங்கள் கடந்தும் இடதுமுழங்கால் வலி படுத்தும் பாடுகள் அவனை இன்னும் வாட்டி எடுக்கின்றபோது அந்த சம்பவம் ஒவ்வொன்றும் நேற்று நடந்ததாய்... எனக்கு விழுந்த அடிகள் உதைகள் கொடுமைகள் யாவும் எதற்காக? அதற்கு முன்னரும், சிவசோதியும் தாமோதரனும் அவன் பொருட்களை எடுத்து அந்த அறைமுழுக்க வீசியது. அவனுடைய சாப்பாட்டுப் பாத்திரங்களை குப்பைவாளியில் போட்டிருந்தது. பொது மலசலகூடத்தை, குளிப்பறையை, அறையை துப்புரவாக்குவது சந்திரனுடைய கடமை என்று அட்டகாசம் புரிந்தது. இவன் வேலைக்குப் போய் வந்து படுத்திருப்பான். பல சமயங்களில் நடுநிசியில் திடீரென முளைப்பான்கள் இந்த ஆறுமுகம் பரம்பரை. அறைக்குள் வந்து தமிழ்சினிமாப்பாணி வில்லன்களாக மாறி சத்தம்போட்டு அகங்காரமாய் கேலியாய் சிரித்து சினிமாப்பாட்டை சத்தமாய் வைத்து, அது பக்கத்துரூம்காரனை ஆத்திரப்பட வைத்து, அவனோடு சண்டை பிடித்து, அவனுக்கு ஏசவேண்டிய தூசணத்தையெல்லாம் இவனுக்குத் திருப்பி, இவன் படுத்திருக்கும் படுக்கையை உதைந்து, உதைந்து.... இவன் தன்னந்தனியாய் எதிர்த்துப் பேச பயந்து, வெளியேறவும் முடியாமல் போர்வை மெத்தையை தலைமுழுக்க இழுத்திப் போர்த்தியபடி, நடுங்கியபடி படுத்து கிடப்பான். இந்த இரவில் யார் வீட்டுக் கதவைத் தட்டமுடியும்? அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போகவேண்டிய அந்த நாட்கள் கெதியாகவே விடிந்திடாதோ எனத் தூங்காமலே கழிந்த இரவு. பயங்கரங்கள் பல. ஒவ்வொருநாளும் வேலைவிட்டு வந்து அறைக்கதவைத் திறக்க முன்பு இவன்கள் வந்திருக்கிறான்களா என்று கதவில் காதுவைத்து உறுதிசெய்தபின்னரே அறையைத் திறப்பது. அவன்கள் இருப்பது தெரிந்தால் ஓசைப்படாமல் வெளியேறி, ஆளைக் கசக்கும் குளிரில் அலைந்து.... 20கிலோமீட்டர் தொலைவில் வாழும் நண்பனுக்கு போன்பண்ணி.... அவன் ~ஓம்| என்றால் அவனுக்கு இடைஞ்சல் தரக்கூடாது - பிடிவாதத்தில் - ஒரு மணித்தியாலத்துக்கு ஒன்று ஆகப்போகும் பஸ் போக்குவரத்தில் கடைசி பஸ் பிடித்து.... மனைவியோடு வாழும் அவன் வேண்டா வெறுப்பாய் இவனுக்குப் படுக்க இடம் தருவது.... முடியாத பட்சத்தில் இவனும் அந்தக் கிளையைப் பற்றிக் கொள்வது....
இப்படி எத்தனையோ ஆத்திர இரவுகள் அவனை அலைக்கழித்தன. இது அவன்கள் அங்கு வந்து போகும் நாட்களில் தவறாமல் நடைபெற்றது. அவன்கள் எப்போ வருவான்கள் போவான்கள் என்பது தெரியாத விடுகதையாய் இருந்தது. தனியனாய் வீதியில்- இரவில், பகலில் - நடந்த போதெல்லாம் நடுங்கிக்கொண்டே இன்னும் போய்க்கொண்டிருக்கிறான். வீதியில் வைத்தும் இவன்கள் எதிர்ப்பட்டால் ஏச்சுகள், வசவுகள். இவனுக்கு மட்டுமில்லாமல் இவன் பரம்பரைக்கும் சேர்ந்து விழுந்தன. அவனுக்கு அரசியல் தஞ்ச அலுவலகம் தந்திருக்கும் இடமோ ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. அந்த ஊர்மக்களின் இருப்பிடங்களை விட்டுத்தள்ளி அகதிகளுக்காக அமைந்த அந்த வசிப்பிடம், தாயகத்திலே ஒதுக்கப்பட்ட சாதியினர் இருக்கவேண்டிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்குமே அந்தமாதிரியான ஒரு மீள்சோகத்தை அவனுள் அது ஏற்படுத்தியிருந்தது. அங்கிருப்போர் அநேகமாய் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்குப் போவதுமாய் வருவதுமாய் அலைந்துகொண்டிருப்பர். தனக்கு அப்படி யாராவது இருந்தால்.... அந்த நினைப்பே சந்தோசம் தந்தது. அங்கு வாழ்ந்த தமிழர்களும் அந்த விலாசத்தில் இருப்பதற்காகக் காட்டிக் கொள்ளவும், புதிதாக யாரும் வந்தால் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவுமே வந்தார்கள். இவனோடு அந்த அறையிலே சேர்க்கப்பட்டிருந்தவர்களும் அந்த ரகமே. சந்திரனின்மேல் தமது ஆதிக்கத்தைச் செலுத்தவேண்டுமென்ற அதிகாரவெறிதான் அவர்களை அங்கு அடிக்கடி இழுத்துவந்தது. இல்லப் பொறுப்பாளனிடம் சந்திரன் எத்தனையோ தடவைகள் முறையிட்டிருந்தான் தனக்கு வேறு அறை தரும்படி. அவன் இவனை ஒரு புதிய பிராணியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டுச் சொன்னான்: தமிழர்கள் தமிழர்களோடு சேர்ந்திருக்கத்தானே விரும்புவர்! மொழி சாப்பாடு பழக்கவழக்கங்களோடு ஒத்துப்போவதைத்தானே எல்லாரும் விரும்புவார்கள்! ம்.... எனக்கென்றால் புரியவில்லை. ஒத்துப்போவதே உங்களுக்குக்கெல்லாம் தெரியாத விடயமாய்ப் போய்விட்டது. எனக்குத் தலைக்குமேலே வேலை இருக்கிறது. இன்றைக்கு நீ இப்படிச் சொல்வாய். நாளைக்கு வேறை வீடு பார்த்துத்தா என்பாய். உங்களுக்கெல்லாம் சாப்பாடு தந்து உடுப்புத் தந்து இருக்க இடம் தந்து எவ்வளவு செய்திருக்கிறோம். இந்தளவாவது உனக்குக் கிடைத்திருக்கிறதே. போதாதா. போய்வா." வெளியில் தள்ளி கதவை மூடாத குறையாக எத்தனை தடவை சந்திரனை விரட்டுவான்! அவைகளையும் அவன் சகித்துக்கொண்டிருந்த காரணம். என்றைக்காவது அவனது அரசியல் தஞ்ச விண்ணப்பம் நிரூபிக்கப்பட்டு தானே அறையொன்று தேடி வெளியேறிவிடலாம் என்ற நம்பிக்கையே. அதுவரை.... சம்பவம் நடந்த அந்த இரவில் தான் மயங்கிப்போனது, வைத்தியசாலையில் நினைவு திரும்பியது, கால்களில் நெற்றியில் கட்டு, இடுப்பை அசைக்கமுடியாத நிலையை உணர்ந்தபோதுதான்.... கோபம் தலைக்கேறி உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் கொதித்தது. கடவுளின்மேலே எக்கச்சக்கமாய் கோபம் வந்தது. காலையிலும் மாலையிலும் தான் கும்பிடும் கடவுள் ஏன் இப்படித் தண்டனை தர அனுமதிக்கவேண்டும்? எனக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அலுமாரியின் உள்ளே மேல்மூலையில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பவிசான இடம் - எனது நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திப் பொத்தி இரகசியம் காப்பாத்திற மாதிரியெல்லோ கடவுளே உன்னை நான் வைத்திருக்கிறேன்! அவர் ஏன் என்னை இந்த மிருகங்களிடமிருந்து காப்பாற்றவில்லை. மறுநாள் காலையில் போலிஸ் அவனிடம் வாக்குமூலம் எடுத்தது. என்ன காரணத்துக்காக உன்னை அடித்தார்கள் என்று கேட்டபோதுதான் அவன் அதனை அவர்களுக்கு புரியவைக்க முயன்றான். குழம்பிய மனோநிலையில் சந்திரன் இருப்பதாய் அவனைப் புரிய விருப்பமில்லாதவர்களாய் போலிஸ் பார்வை, குறிப்பு, தோள் அசைப்பு இருந்தது. அவன் சொன்னதை எல்லாம் வாக்குமூலத்தில் குறிக்கவில்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது.
சரியாக 10.30க்கு மாரி...முத்து..சந்..தி...ரான். பெயர் ஒலிபெருக்கியில் ஒலித்தது. சந்திரன் உள்ளே போனான்.
நீதி: உங்கள் பெயர், வயது, திருமணமானவரா, விலாசம், தொழில், வருமானம், எப்போதிருந்து ஜெர்மனியில் இருக்கிறீர்கள் அரசியல் அகதி அந்தஸ்து... கூறுங்கள்.
சந்திரன்: வரிசையாச் சொல்லிக் கொண்டே வந்தவன் (இவர்கள் என் சாதியையும் கேட்டிருக்கலாமே - எரிச்சல் பட்டான்)
நீதி: நீங்கள் அன்றைய தினம் நடந்த சம்பவத்தைக் கூறுங்கள்.
சந்: அன்றைய தினம் நான் தனியே சமைத்துக்கொண்டிருந்தபோது இங்கு சமூகமளித்திருப்பவர்களான - சிவசோதியை, தாமோதரனை நோக்கி - குசினிக்குள் வந்த என்னைத் திடீரென தாக்கத் தொடங்கினார்கள்...
நீதி: முதலில் நீங்கள் அவர்களோடு சண்டையைத் தொடங்கவில்லையா?
சந்: அப்படியில்லை. அவர்கள் என்னோடு ஏற்கனவே முரண்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னில் கோபம் இருக்கிறது.
நீதி: நீங்கள் இங்கு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவர்களுக்கு கோபம் ஏற்படுத்துகிறமாதிரி என்ன செய்தீர்கள்?
சந்: இவர்கள்தான் என்னைக் கண்டதும் ஆத்திரப்பட்டார்கள். என்னை எப்போது கண்டாலும் ஏசினார்கள். அந்த அறையில் எனக்கு இருக்க உரிமை இல்லை என்கிறார்கள். என்னை மிகக் கேவலமான வார்த்தைகளில் திட்டுகிறார்கள்.
நீதி: அன்றைக்கு நடந்ததுமட்டும் சொன்னால் போதும். குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சிவா..சோதி எதனால் எப்படி அடித்தார்? உங்கள் சாட்சியம் இங்கே கோப்பில் எழுத்தில் இருக்கிறது. சுருக்கமாய்க் கூறுங்கள். (சுவர் மணிக்கூட்டைக் கவனிக்கிறார்)
சந்: நான் என்பாட்டில்தான் சமைத்துக்கொண்டிருந்தேன்.
நீதி: குசினியில் எங்கு நின்றிருந்தீர்கள்?
சந்: அடுப்புக்கு முன்னால் நான் நின்றிருந்தபோது திடீரென அங்கு வந்த சிவசோதி என்னைக் கேட்டார் 'அடேய் நளவா யார் உன்னை இங்கே சமைக்கவிட்டது? (இவ்விடத்தில் நளவாவுக்கு சந்திரன் விளக்கம் சொல்ல ஆரம்பிக்க)
நீதி: உங்கள் கூப்பிடுபெயர் சந்திரனல்லவா?
சந்: இங்குதான் நான் விளங்கப்படுத்தவேண்டும். எங்கள் நாட்டில்....
(நீதிபதி பக்கத்திலிருக்கும் எழுத்தரைப் பார்த்து தலையை பக்கவாட்டில் அசைத்தபடியே, அரசுதரப்பு வழக்கறிஞரை கேள்விக் குறியோடு பார்க்கிறார்)
நீதி: இப்படியும் இருக்கிறதா, எனக்குப் புரியவில்லை.
சந்: எங்கள் மதத்தில் இப்படி இருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கும்தான் புரியவில்லை. பாருங்கள் இதுமாதிரியேதான் இந்த நாட்டில் வெளிநாட்டவர்களை இந்நாட்டுமக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்று எனக்கும் விளங்குகிறதில்லை.
நீதி: அது வேறு விடயம். நாங்கள் இங்கு அது கதைக்க உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. விடயத்துக்கு வாருங்கள்.
சந்: நடந்தது இதுதான். இவர்கள் இருவரும் என்னைக் கூடாத வார்த்தைகளில் ஏசியபடி குசினிக்கு வந்தனர். 'உனக்கென்னடா நாயே உரிமை இருக்கிறது இங்கே" என்று தாமோதரன் கேட்டார். தொடர்ந்து தலையிலும், உடம்பிலும் தும்புத் தடியால் தாக்கப்பட்டேன். தள்ளப்பட்டு பக்கத்தில் இருந்த சுவரோடு மோதப்பட்டு இடுப்பு முறியுமாற்போல வலி. நான் கீழே விழுந்தேன். சிவசோதியும் தாமோதரனும் நிறையக் குடித்திருந்தார்கள். சிவசோதி கதிரையால் என்னை அடிக்க, தாமோதரன் காலால் உதைத்தார். கால்விரல்களை நசித்தார். இடது முழங்காலிலே போத்தல் ஒன்றால் தாக்கப்பட்டேன். நான் மிகச் சத்தமாகக் கத்தியும் அத்தாக்குதல்களை முடிந்தளவு தடுக்கவும் முயன்றேன். இரண்டுபேர்கள் ஒன்று சேர்ந்து தாக்கும்போது நான் தனியாள் என்ன செய்யமுடியும்? பக்கத்துஅறையில் இருந்தவர்கள் என் சத்தம்கேட்டு ஓடிவரவும் இவர்கள் ஓடிவிட்டார்கள். பிறகு நான் மயங்கிவிட்டேன் என நினைக்கிறேன். என் உடம்பில் இன்னும் உள்காயங்கள் வலிகள் இருக்கின்றன.
நீதி: நீங்கள் இவர்களின் பொருட்களைக் களவெடுத்தீர்களா? அவர்கள் அங்கிருந்தபோது இடையில் புகுந்து அவர்களை சமைக்கவிடாமல் குழப்பினீர்களா? நீங்கள் அன்றைக்கு எந்தளவு மது குடித்திருந்தீர்கள்? கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
சந்: அப்படியொன்றுமேயில்லை. நான் மது பாவிக்கிறவன் இல்லை. நான் குறைந்த சாதிக்காரன் என்பதால்தான் என்னை இவர்கள் அடித்தார்கள். இதற்கு முன்னரும் என்னை அவர்கள் விரட்டுவதும், மிரட்டுவதும் அடிப்பதுவுமாக நடந்திருக்கிறது. அத்தோடு அவர்களின் எந்தவித பொருள்களும் அறையில் இல்லையே. அவர்கள் இருக்கும் அறையில் நான் இருக்கக்கூடாதாம். பிரச்சினை இதுதான். நான் தீண்டத்தகாதவனாம்.
நீதி: ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள்! எனக்கென்றால் புரியவில்லை. சும்மா எதுவும் இல்லாமல் யாரும் யாரை அடிப்பார்களா?
சந்: இருக்கிறது. நான் அந்தச் சாதியில் பிறந்ததுதான் நான் செய்த குற்றம்.
சிவ: இவர்கள் சாதியே களவெடுப்பதும், பொய்சொல்வதும் அந்தச் சாதிப் புத்தியையே காட்டுவதும்....
நீதி: சிவசோதி உங்கள் விளக்கம் எனக்குப் புரியவில்லை. உங்கள் பொருட்களை சந்திரன் களவாடியிருந்தால் அதுபற்றி நீங்கள் வீட்டுப் பொறுப்பாளரிடம் முறையிட்டிருக்கவேண்டும். (சந்திரனை நோக்கி) நீங்கள் இப்போது போகலாம்.
சந்: அய்யா, எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறைக்குப் போகப் பயமாக இருக்கிறது. நான் வேலைநேரம் முடிய இன்னும் வெளியிலேயே சுற்றுகிறேன். படுப்பதற்கு மட்டும் தெரிந்தவர் வீட்டுக்குப் போகிறேன். எனக்குத் தொடர்ந்தும் அங்கு இடம் கிடைக்காது. சிவசோதியும் தாமோதரனும் என்னை, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்த அறைக்கு வரக்கூடாதென ஏசிக் காலைக் கையை முறிப்பேன் எனப் பயமுறுத்துகின்றனர். என் பொருட்கள் அங்கிருக்கின்றன. போய் எடுக்கவும் முடியவில்லை.
நீதி: உங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில்தான் நீங்கள் இருக்கவேண்டும். சிவாசோதியோ தாமோதரனோ உங்களைப் பயமுறுத்தமுடியாது. நீங்கள் இதுபற்றி உங்களுக்குரிய பொறுப்பிலாகாவிடம் கதையுங்கள்.
சந்: கனம் அய்யா. நான் எத்தனையோ முறை அங்கு போய் முறையிட்டுவிட்டேன். அவர்கள் அதனைக் கணக்கிலெடுக்கிறார்களே இல்லை. 'உங்கள் உயிருக்கு உங்கள் நாட்டில் ஆபத்திருக்கிறது என்று நீங்கள் கூறுகிறபடியால்தான் நாம் உங்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுக்காக எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறபோது இன்னும் இன்னும் ஏன் எங்களைத் தொந்தரவு செய்கிறீர்கள்? உங்களுக்குள் நீங்கள் முரண்பட்டால் அது உங்கள் பிரச்சனை" என்கின்றனர்.
நீதி: ஆமாம். அதுபற்றிய விடயத்தை நீங்கள் அவர்களோடுதான் கதைக்கவேண்டும். இப்போது இங்கு வழக்குபற்றியதுதான் கதைக்கப்படுகிறது. சந்திரன், நீங்கள் இனிமேல் இங்கிருக்கவேண்டிய அவசியமில்லை போகலாம்.
சந்: அய்யா இவர்கள் என்னைக் கொலைசெய்துவிட்டு வேறுநாட்டுக்குத் தப்பியோடிவிட்டால்.... என் உயிருக்கு இந்தநாட்டிலாவது உத்தரவாதம் உண்டா? இந்த இரண்டுபேரும் செய்த அநியாயங்களைப்பற்றி எனக்குமட்டும்தான் அய்யா தெரியும். நான் உயிரோடு இருக்கவேண்டும். அய்யா
.நீதி: இதுபற்றி நீங்கள் உங்களுக்குரிய அலுவலகத்தோடுதான் கதைக்கவேண்டும். நான் இந்த வழக்கை விசாரிக்கமட்டுமே பொறுப்புள்ளவன். இங்கு நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த வழக்குக்குரிய காலத்தைத் தாழ்த்தக்கூடாது; நீங்கள் உங்கள் இடத்தைவிட்டு அகன்று பின்னால் போய் இருங்கள்.
சந்திரன் பின்னால் போய் இருக்க, மற்றச் சாட்சி உள்ளே அழைக்கப்பட்டது. சிவசோதியும் தாமோதரனும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை. சந்திரனே சண்டை ஆரம்பித்ததாக அடம்பிடித்தனர். வீட்டுப் பொறுப்பாளரின், பக்கத்துரூம்காரனின் எழுத்து சாட்சியங்கள். சந்திரனின் காயங்கள். வைத்தியசிகிச்சை அணுகப்பட்டது. தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது யாவரும் எழுந்துநிற்க சொல்லப்பட்டது. குற்றவாளிகளாகக் காணப்பட்டோர் குடித்திருந்து, அதனால் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டமையாலும் இவர்கள் இருவருக்கும் முறையே ஒரு வருட நன்னடத்தைப்பிணையும் அபராதமும் வழங்கப்படுவதாயும் ஏன் இவ்வாறான தண்டனை வழங்கப்படுகிறது எனவும் விளக்கம் கூறப்பட்டது. சந்திரனுக்கான வைத்தியச் செலவுகளையும் வழக்குச் செலவையும் இவர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, சிவசோதி "எளிய சாதி நாய்கள்" என முணுமுணுத்தான். நீதிபதி ஒரு தடவை நிமிர்ந்து சிவசோதியைப் பாரத்தபின் மீண்டும் தொடர்ந்தார்.
வழக்கு முடிந்து எல்லாரும் வெளியேறியபோது கடைசி ஆளாக சோர்வுடன் வெளியேறினான் சந்திரன். எல்லாரும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று நன்கு கவனித்தபின் வீதிக்கு வந்த சந்திரன் ஒவ்வொரு அடியாக மிகமிக பயத்தோடு நடக்கத் தொடங்கினான். வெளிநாட்டவருக்குரிய அலுவலகத்துக்கு 12மணிக்குமுன் போனால் அறையை மாற்றித் தருவதுபற்றி கதைக்கலாம் என நினைத்தபடியும் அங்குள்ள அதிகாரி தன்னை எப்படியும் நாய் விரட்டுவதுபோல தன்னை விரட்டுவான் என்ற மனஎரிவோடும் சந்திரன் விரைவாய் நடந்தான். இன்று நீதிமன்றத்தில் நடந்தவைகளைப்பற்றி சொல்லியாவது வேறு நகரத்துக்காவது தன்னை மாற்றித் தரும்படி கேட்கவேண்டுமென உறுதிப்படுத்திக்கொண்டான்.
|