கருத்துச் சுதந்திர மறுப்பு
ஜோர்ஜ் குருஷ்சேவ்
கருத்துச் சுதந்திரம் என்ற கருதுகோள் எங்கள் சமூகத்திற்கு அந்நியமான ஒன்று போலத்தான் தெரிகிறது. மெலிந்தவனை மிதித்தும் வலிந்தவனை வாழ்த்தியும் ஊரோடு ஒத்தோடும் கூட்டத்திற்கு புதிய கருத்தும் அதற்கான சுதந்திரமும் என்பது ~நமக்கேன் வம்பு| என்ற ஜாக்கிரதை உணர்வுடன் கூடிய தக்கன பிழைக்கும் கூர்ப்புத்தத்துவம் சார்ந்ததாக இருக்கக்கூடும். அல்லது கருத்து இருப்பவனுக்குத்தானே சுதந்திரம் நமக்கு எதற்கு என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
காலத்திற்குக் காலம் புதுக் கருத்துக்கள் தோன்றியபோதும் அந்தந்தக் காலங்களில் ~பேசாமல் இரடா, ஐயா சொல்லிறதைக் கேளடா| என்று அருகில் இருந்து பிடரியில் தட்டி அடக்குவதைத்தான் இந்த ஆண்ட தமிழினம் காலத்துக்குக் காலம் செய்து வந்திருக்கிறது. அப்படி அடக்காவிட்டால், ஐயாமாரே அதை அடக்கியும் வைப்பர். காலத்திற்குக் காலம் ஐயாமார் மாறினாலும் அந்தந்தக் காலங்களில் உள்ள ஐயாமார் ~சொல்லிறதைக் கேட்பதிலும்| நம்மவர்கள் சூரர்கள். ~தட்டிக் கேட்போம்| என்று வாய்ச்சவடால் விடுவோர் எல்லாம் இப்போது ~திறவுங்கள்! தட்டப்படும்!| என்று ~தட்டிறதைக்| கேட்கமுடியாமல் இருக்கிறார்கள், ~கேட்டால், (தலையில்) கொடுக்கப்படும்| என்பதால்.
ஆட்சியில் இருப்போரைப் பகைத்துக்கொள்ளாமல், அநீதிக்கு எதிரான குரல் கொடுக்காமல், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் பத்திரிகை (சு)தந்திரம் காத்த வீரகேசரி போல நடுநிலைப் பத்திரிகை நடத்த பலபேர் புகலிடங்களில் கனவுகளுடன் உள்ளனர். நடுநிலை என்பதே அதிகாரத்தைப் பகைத்துக் கொள்ளாதிருப்பது என்றநிலை மீறி, ஒரு படி மேலே போய் குஷிப்படுத்தும் நிலைக்கு வேறு வந்திருக்கிறது. இயக்க ஊதுகுழல்களைவிட மிகைப்படுத்தி எழுதும் நடுநிலைப் பத்திரிகைகளே இங்கு அநேகம். கூட்டணி மற்றும் மற்ற இயக்கங்கள்பற்றி ~அம்பலப்படுத்தும்| தினமுரசு முதல் இறந்த இராணுவ எண்ணிக்கையை அறிவிப்பதில் ~வஞ்சகம்| பார்க்காத மற்ற புகலிட பத்திரிகைகள்வரைக்கும் கருத்துச் சுதந்திரம், நடுநிலைமை என்பது பற்றிய எங்கள் சமூகம் கொண்ட கருத்துக்களின் பிரதிபலிப்புகள் தான். இதனால் மகேசன் கருத்தே மக்களின் கருத்தாக மாறிவிட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இந்தச் சமூகத்தில் தியாகமும் துரோகமும் வெகு இலகுவான வரைவிலக்கணங்களில் அடங்கிவிட்ட நிலையில் மாற்றுக் கருத்துக்கள் துரோகங்களாக்கப்படுவது இலகுவாகிவிடுகிறது. வித்தியாசமான கருத்துக்கள் துரோகம் என்று எண்ணும் மந்தைத்தனமான சிந்தனையால், தனித்துப்போன வெள்ளாடுகள் வேள்வியில் பலியிடப்படுவது ஏதோ பாவம் தீர்ப்பதற்கான வழிமுறையாகிவிடுகிறது.
துரோகங்களுக்கு மரணமே பதில் என்ற விதிமுறைகள் அமுலாக இருக்கும்போது மாற்றுக் கருத்துகளுக்கு ~தட்டுதல்| உகந்த தீர்வாக அமைந்துவிடுகிறது. இலக்குகளை அடைவதை இந்த மாற்றுக் கருத்துக்கள் பின்னடையச் செய்கின்றன என்ற பிரச்சாரமும் இந்தச் சமூகத்தில் எடுபடும் சூழ்நிலையில் சமூகமே இந்த மரணங்களை நியாயப்படுத்தத் தொடங்கியும் விடுகிறது.
~உன் கருத்தோடு உடன்பட முடியாவிட்டாலும், அந்தக் கருத்தைச் சொல்வதற்குரிய உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பேன்| என்ற பண்பு மறக்கப்பட்டு, ~என் கருத்தோடு உன்னால் உடன்பட முடியாவிட்டால் உன் உயிரை எடுப்பது என் உரிமை| என்ற நிலையில்தான் எங்கள் நிலை உள்ளது.
இந்தக் கொலைகள், அல்லது சரியான அரசியல் பதத்தில் சொல்வதாயின், களையெடுப்புகள் எதுவுமே நியாயம் சார்ந்தவை அல்ல. கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க மறுப்பது ஒன்றும் மக்கள் நலன் சார்ந்ததும் அல்ல. தங்கள் நலன்பற்றி முடிவெடுக்கவேண்டியது அந்த மக்கள்தான். ஜனநாயகத்தின் அடிப்படையே அதுதான்.
இந்தக் கருத்துச் சுதந்திரமறுப்புக்கான அடிப்படை நோக்கங்கள் உண்டு. முதலில், கருத்துச் சுதந்திர மறுப்பே உண்மை வெளிவரும் என்ற பயத்தில் எழுவதுதான். வெளிவரும் உண்மைகள் தங்கள் அதிகார சொகுசுக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைத்து விடுமே என்ற பயம். வெளிவரும் உண்மைகள் மக்களைக் கிளர்ந்தெழ வைத்து, அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்படலாம் என்ற அச்சம். இதனால்தான் அவசரநிலை அமுலாக்கப்படுகையில் முதலில் பலியாவது பத்திரிகைச் சுதந்திரம். பொய்ப் பிரச்சாரங்களை வெளிவரும் உண்மைகள் அம்பலப்படுத்திவிடும் என்ற பயம்.
அடுத்தது. எஞ்சியிருப்போர்க்கான மிரட்டல்! களையெடுப்பு தொடரும்! மரணபயம் எஞ்சிய ஈனக் குரல்களையும் அடக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு.
இதனால்தான் இந்த ~தேசவழமைச் சட்டத்தை அமுலாக்க| எல்லைகளைக் கடந்துகூட, அநீதி தன் கரங்களை நீட்டிக் கொள்கிறது. இலகுவாக இருந்தால் துரோகி என்றும், நம்ப வைப்பது சிக்கலாக இருந்தால் தாங்களே கொன்றவனைத் தியாகியாக்கியும் கருத்துக்களை அடக்குவதும் களைந்தெறிய முனைவதும் நடக்கிறது. அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் கும்பலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வெற்றிக்கூச்சல் போடுகிறது.
கறைபடியாத கரங்களுடன் ஆட்சியில் இருக்கும் தன்னம்பிக்கை கொண்ட தலைமைகளுக்கு இந்த அச்சம் இருக்க நியாயமில்லை. ஆனால் இரத்தவெறி கொண்டு அலையும் மிருகங்களுக்கு?
~உன்னையே நீ அறிவாய்| என்ற சோக்கிரட்டீசுக்கு நச்சுக் கிண்ணம்@ ~பகைவனுக்கு அன்பு செய்வாய்| என்ற யேசுவுக்கு சிலுவை@ ~உலகம் உருண்டையானது| என்ற கலிலியோவுக்கு சிறைவாசம்.
மனிதர்களைக் கொல்லலாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் கருத்துக்களைக் கொல்லமுடியாது.
சுதந்திரத்தை மறுக்கலாம். ஆனால் கருத்துக்கள் பொறியாகி, பிளம்பாகி, சோதியாகி.... சுடர் விடும். வழிகாட்டும். அத்தோடு சுட்டும் எரிக்கும்.
|