எல்லா இடங்களிலும்
தங்கள் அடிமைப்பாடல்களை
- ஒப்பாரிகளை, சோக கீதங்களை
மகிழ்ச்சிப் பாடல்களை -
பாடிக்கொண்டிருக்கும்
எனதுமக்களுக்காக
மகிழ்ச்சியைப் பரப்பியபடி
கண்மூடித்தனமாகத் திரிகின்ற,
சோம்பேறித்தனத்தினால்
நேரத்தைப் பாழடிக்கிற,
பசியெடுக்கும்போது தூங்கிவிடுகிற,
சுமை அதிகமாகும்போது கதறுகிற,
நம்பிக்கை அற்றுப்போகும்போது
குடிக்கிற
எனது மக்களுக்காக
கண்ணுக்குப் புலப்படாமல்
எல்லா இடங்களிலும் ஏறி உட்கார்ந்துகொண்டு
சிரிக்கிற ஜென்மங்களினால்
தங்களுக்குத் தாங்களே கட்டப்பட்டு,
விலங்கிடப்பட்டு,
குழப்பிவிடப்பட்டுள்ள
எனது மக்களுக்காக
குழப்பங்களிலிருந்தும்
இரட்டை வேடங்களிலிருந்தும்
தவறாகப் புரிந்துகொள்ளாமலிருந்தும்
நல்ல வழிகளை உருவாக்க முயன்று
நிமிர்ந்து நின்று விழிக்கும்
எனது மக்களுக்காக
எல்லா முகங்களையும், எல்லா மக்களையும்
எல்லா ஆண்களையும், பெண்களையும்
அவர்களின் கணக்கிடமுடியாத தலைமுறைகளையும்
அணைத்துக்கொள்ளும் ஓர் உலகை
படைக்க முயலும்
எனது மக்களுக்காக
ஒரு புதிய பூமி எழுந்து வரட்டும்.
வேறொரு புதிய உலகம் பிறக்கட்டும்.
வானத்தில் அமைதி என்பது
அழகுறப் பொறிக்கப்படட்டும்.
அஞ்சாமை மிக்க ஓர் இரண்டாம் தலைமுறை
வெளிவரட்டும்.
விடுதலை வேட்கை நிரம்பிய மக்கள் வளரட்டும்.
எதையும் குணப்படுத்தும் அழகும்
உறுதியுடன் பற்றிக்கொள்ளும் வலிமையும்
நம் இரத்தத்திலும், உயிரிலும்
விடாமல் துடிக்கட்டும்.
மனிதன் என்னும் ஓர் இனம் எழுந்துவந்து
அதிகாரத்தைக் கைப்பற்றட்டும்.