நண்பன் பேசவாரம்பித்தான்
கிழக்கிலிருந்து வந்தவன்,
பதட்டங்கள் சற்றே நீங்கியிருந்தன.
பிரச்சினை என்ன?
துவக்குகள் எதிரிக்காகத்தானே?
என்னிடம் ஒரு சந்தேகக் கேள்வி!
ஒடுக்குமுறை விளையாட்டில்
நண்பனும் எதிரியும் ஒன்றாகத்தானிருக்கின்றனர்.
மனச்சாட்சிகளின் மண் உருவங்கள் பேசியதால்
துவக்குமுனைகள் சுழன்றன சுற்றி
அறுபட்ட மரங்களாய் உடல்கள்
காற்றுவெளியில் ஒடுங்கிய குரல்கள்
கரைந்து பரவியது நாற்புறமும்.
கேள்வி கேட்கும் சந்ததிகள் வரும் - ஒரு நாள்
எதற்குத் துவக்கை ஏந்தினாய்?
எதற்குத் துவக்கை ஏந்தினாய்?
குதூகலம், விளையாட்டு, வாழ்வு
எல்லாம் இழந்து நிற்கும் பூமி.
ஓங்காரமிட்டும், பிளிறியும்
கோபத்தைக் கக்கும் துவக்குகள்....
கருகிவிடும் போதி மரங்கள்
மானுடம் வேண்டிய மாந்தர்கள்
மறைந்தனரோ மாயமாகினரோ....
எதிரிகளில்லை.... நண்பர்களில்லை
நாடுமில்லை.... வீடுமில்லை
துவக்குகள் மட்டுமே உயிர்வாழும்.
பூமி
பூமியை இழந்து நிற்க
மனிதன்
மனிதத்தை இழந்து நிற்க
சோம்பிய முகங்களில் முத்திரை குத்திக்கொண்டோம்
நாங்கள் அகதிகள்.
உனக்குத் தெரியுமா நண்பா?
மேற்கு நோக்கிய படகுகள்
திரும்பி வருமா?
காலங்காலமாய் கடற்கரையில்
மணல்கள் முணுமுணுப்பது
உனக்குத் தெரியுமா நண்பா?
அனைத்தும் மௌனமாகி
துவக்குகள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது
உனக்குத் தெரியுமா நண்பா?