|
சொல்லித்தானாகவேண்டும்
சபாலிங்கம் கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. அன்றாடக் கொடூர நிகழ்வுகளும் சர்வசாதாரணமாகிப் போகும் வாழ்க்கைச்சூழலில், சபாலிங்கமும் - சபாலிங்கத்தின் கொலையும் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டுப் போய்விடுமோ என்ற பயநிழல் எம் மத்தியில் விழத்தான் செய்கிறது. ஒரு மனிதனுடைய குறைந்தபட்ச விருப்பமும் - உயர்ந்த பட்ச உரிமையும் அவனுடைய உயிர்வாழ்தலாகும். அந்த விருப்பும் உரிமையும் ஆட்டம் காணும் ஒரு நிலையை எம்மினத்திடையே மிக மலிவாக விதைத்த காரணிகளை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்காது சிலநேரங்களில் தட்டிக்கொடுத்து பல சந்தர்ப்பங்களில் கைகட்டி நின்று, முடிவில் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் மௌனமாகவிருந்த மொத்த இனமும் தாம் செய்த பாவத்துக்கு சிலுவைகளைச் சுமந்தே ஆகவேண்டிய நிலை.
சபாலிங்கம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதும், அந்நிய வாழ்விலும் தனது பங்களிப்பை செய்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. தமிழ்பேசும் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுப்பாக சமரசநிலை கொண்டார் என்றோ, அவரை ஒரு துரோகி என கருதும் அளவுக்கு நடந்துகொண்டார் என்றோ யாரும் அடையாளம் காணாத வேளையில் கொன்றவர்களுக்கு மட்டும் அவர் எப்படித் துரோகியானார். புத்திஜீவிகளையும் மனிதநேயமுள்ளவர்களையும், எமது மக்களுக்காகச் சிந்திப்பவர்களையும், தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் நியாயமான போக்குகளை எதிர்பார்ப்பவர்களையும், தனக்குச் சரியெனப்பட்டதை தமிழ்பேசும்மக்களின் நல்வாழ்வுமீது ஆர்வத்துடன் முன்வைப்பவர்களையும் தேடித்தேடி வேட்டையாடுவதால் யார்தான் எதைத்தான் அடையப் போகிறார்கள்.
ஒரு மனிதன் கொல்லப்படுவதைவிட கொடுமையானது - கேவலமானது, கொன்றுவிட்டு மோசமான காரணங்களைக் காட்டி நியாயப்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுதலாகும். பிரச்சனைக்கான தீர்வு கொலையல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களையும், நியாயமாக விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன்மூலம் பிரச்சனை ஒழிந்தது என பெருமூச்சுவிட்டுக் கொள்ளமுடியாதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அரசியலற்ற குருட்டுத்தனமான ஆயுத வழிபாட்டுத் தத்துவங்கள் இன்று உலக மக்கள் மனங்களில் அடிபட்டுப் போய்விட்டது. நாட்டின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ வெறும் அதிகார வெறியர்களால் உலகில் பதிக்கப்படும் அட்டூழியத் தடங்களை மனிதாபிமானமுள்ள எந்த மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கொடுமைகளுக்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் முரட்டுத்தனமாக, பிடிவாதமாக ஆயுதமுனையில் மக்களை மௌனிகளாக்குதல் என்னும் கொடியவெறி தணிந்ததாகத் தெரியவில்லை.
புலிகளிடமிருந்து தமிழ்பேசும் மக்களை மீட்பதற்கான போர் எனவும், சமாதானத்துக்கான போர் எனவும் நேரத்துக்கு ஒரு சாட்டுக்களைக் கூறிக்கொண்டு இலங்கை அரசானது ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் மக்களுக்கெதிரான ஒரு யுத்தத்தையே மேற்கொண்டிருக்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. யுத்தம் நடக்கும் எந்த நாட்டிலும், தமது சொந்த மண்ணிலேயே பாஸ் எடுத்து மக்கள் பயணிக்கும் நிலை இல்லையென்றே கூறலாம். முழுத் தமிழ்பேசும் மக்களையும் பயங்கரவாதிகளாகப் பார்த்து அவர்களின் உரிமைகள், உடமைகள், உயிர்கள் பறிக்கப்படுவது மட்டுமல்லாது வயது வேறுபாடின்றி பெண்கள்மீதான பாலியல் வன்முறை மிகக் கொடூரமாக கட்டவிழ்க்கப்பட்ட நிலையை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக தமிழ்பேசும் மக்கள் மீதான கொடூரமான யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்கிறோம். காலம்காலமாக பௌத்த சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டது போதும். விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுவதையும் ஆயுதத்தைக் கீழே போடுங்கள் என்பதையும் விடுத்து தமிழ்பேசும் மக்களுக்கான நீதியான அரசியல்தீர்வை உடனடியாக முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டியதே நேர்மையான, யோக்கியமான, நாட்டின் சுபீட்சத்தில் அக்கறையுள்ள அரசின் கடமையாகும்.
தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கிறோம்@ நாட்டில் நடைபெறும் அரசியல் கொலைகளை இல்லாதொழிப்போம் என வாக்குப் பிச்சை கேட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட சந்திரிகா இன்று - அதிகார வெறிபிடித்து அலைவது மட்டுமல்லாது நாட்டையே இரத்தக்காடாக்கிய படைகளின் சொல்லுக்குத் தலையாட்டும் நிலையில் வெட்கங்கெட்டு அரசியல் நிர்வாணமாகப் போயுள்ளார். பௌத்த சிங்கள பேரினவாதிகளிடம் தமிழ்பேசும் மக்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. தமது சொந்த நாட்டில், தமது சொந்த மண்ணில் சுதந்திரமான வாழ்வைத்தான் கேட்கிறார்கள். அது அவர்களது உரிமை. அது அங்கீகரிக்கப்படாவிட்டால் நாடு என்றும் நாசமாய்ப் போய்த்தான் துலையும். மக்கள் இன, மத, மொழி வேறுபாடின்றி மன-உடல் சித்திரவதைகளுக்கு ஆளாகத்தான் போகிறார்கள். இதை உணர்வது, உடன் செயல்படுவது, திடமான முடிவை எடுத்து தியாக மனப்பான்மையுடன் அதை நிறைவேற்ற முற்படுவது அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய பௌத்த சிங்கள பேரினவாதிகளின் கடமையாகும். அது நாட்டுக்கும் நல்லது@ மக்களுக்கும் நல்லது. இதுவே எங்களால் சொல்லமுடியும்.
விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை உலகிலேயே சிறந்த கொரில்லாப் போராளிகள்@ இரண்டு பெரும் இராணுவத்துடன் போரிட்டவர்கள்@ கட்டுக்கோப்பான சிறந்த அமைப்பு@ வீரமும் விவேகமும் கொண்ட தலைவர் என மார்தட்டிக்கொள்ளலாம். இதன்மூலம் பிரச்சனை தீரப்போவதில்லை. ஜனநாயகம், மனிதநேயம், சகிப்புத்தன்மை இவைகளை புலிகள் மறுதலிக்கும்வரை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் மீளமுடியாது. காட்டிக்கொடுப்பவர்களாகவும், தலையாட்டிகளாகவும், முகமூடி அணிந்தவர்களாகவும், அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும், துரோகிகளாகவும் மற்ற இயக்கங்களை ஆக்கியதில் பெரும்பங்கு தங்களைச் சார்ந்தது என்பதை புலிகள் ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். மற்றைய இயக்கங்களைத் தேடி அழிப்பதிலும், தடை செய்வதிலும் ஆர்வம் காட்டினார்கள். இயக்கங்களை விட்டொதுங்கி சகவாழ்வு வாழ முற்பட்ட மாற்று இயக்கத்தவர்களை வேட்டையாடினார்கள். இயக்கங்களாலும் தேடப்பட்டு, அரசபடைகளாலும் தேடப்படும் ஒருவன் எங்கே ஓடமுடியும்? நாங்கள் யாரையும் நியாயப்படுத்தவில்லை. யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. எங்களுக்குத் தெரியும் உண்மையைச் சொல்லி வைக்கிறோம். இயன்றவரை இயக்கங்களை அழித்துவிட்டு, மிஞ்சியவர்களில் சிலரை அரசுடன் காவு கொடுத்துவிட்டு, மிகுதியானவர்களை மௌனிகளாக்கிவிட்டு, நாங்கள் மட்டுமே போராடுகிறோம் என்று சொல்வதில் பெருமையொன்றுமில்லை.
இவைகளைவிடக் கொடுமையானது இலங்கையில் கி.பி. 8ம் நூற்றாண்டு தொடங்கியதென வரலாறு கூறும் பாரம்பரியத்தைக்கொண்ட முஸ்லிம் மக்களை அவர்களது நிலத்திலிருந்து சில மணி நேரங்களில் துரத்தியடித்துவிட்டு விடுதலைப்போராளிகள் என பெருமை கொள்ளமுடியாது. இன்று மொத்தத் தமிழ்பேசும் மக்களும் வெட்கத்துடன் தலைகுனிந்து நிற்கும் நிலையை இந்தச் செயல் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்து சகஜமான வாழ்வு வாழமுடியாதவரை தமிழ்பேசும் மக்களின் விடுதலைபற்றிப் பேச நாம் அருகதையற்றவர்கள். அத்துடன் அப்பாவி சிங்கள பொதுமக்கள் மீது இதுவரை நடந்த வன்முறைகளையும் நாம் வன்மையுடன் கண்டிக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படாதவரை நாம் ஒரு நாகரீகமான சமூகத்தவர்கள் என்றோ, எமது இனத்தின் உரிமைகள்பற்றிப் பேச தகுதியுள்ளவர்கள் என்றோ சொல்லிவிடமுடியாது.
அராஜகமும் வன்முறையும் எங்கள் சார்ந்தவர்கள்மீது பிரயோகிக்கப்படும்பொழுது ஒப்பாரியிடுவதும்@ மற்றவர்கள்மீது பிரயோகிக்கப்படும்பொழுது மௌனம் சாதிப்பது அல்லது மகிழ்வது எங்களுக்குப் பழக்கமில்லா ஒன்று. அது எங்கு நடந்தாலும், யார்மீது நடத்தப்பட்டாலும், யாரால் நடத்தப்பட்டாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள்மீது அனுதாபம் கொள்வது எமது இயல்பு. அதை நாம் கடும் போர்க்குணாம்சத்துடன் செய்தே தீருவோம். பிரான்சைப் பொறுத்தவரை சபாலிங்கம் மீதுமட்டுமல்ல, நாதன், கஜன் மீதும் நடாத்தப்பட்ட அரசியல் வன்முறைக் கொலைகளை நாம் மிக வெட்கத்துடன், வேதனையுடன், கோபத்துடன் கண்டிக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்தும் கண்டிக்கப் பின்நிற்கமாட்டோம். ஏனைய புகலிட நாடுகளிலும் நடாத்தப்பட்ட அரசியல் படுகொலை, வன்முறைகளை நாம் கண்டிப்பதுடன்@ உடனடியாக இவைகள் நிறுத்தப்பட்டு அனைத்துப் பிரச்சனைகளும் துப்பாக்கியின்றி, வன்முறையின்றி, பகைமுரண்பாடின்றி பேசித் தீர்மானிக்கப்படவேண்டும்@ அது முடியும் என்று கூறிக் கொள்கிறோம்.
நாம் வளர்த்துவிட்ட அரசியல்வன்முறையின் பலனாக சமுதாய வன்முறைக் குற்றவாளிகள் உருவாகிவருவதை கட்டுப்படுத்தமுடியாத சூழல் எம்மிடையே ஏற்பட்டுள்ளது. புகலிட நாடுகளில் வளர்ந்துவந்த சமுதாய வன்முறைக்குற்றம் கொலை, தாக்குதல், வழிப்பறி, கொள்ளை, பெண்கள் மீதான சகல வன்முறை என ஒட்டுமொத்த இனத்தையே பீதிக்குள் தள்ளியிருப்பதை மிகவும் பொறுப்புடன் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இவைகளை கண்டிப்பதுடன் நின்றுவிடாமல், இவைகளை களைவதற்கான மார்க்கமாக நாம் வழிகாட்டிகளாக அமையவேண்டும். அரசியல்வன்முறைகளை நாமே கட்டவிழ்த்துவிட்டு, நீ மட்டும் சமுதாயவன்முறை செய்யாதே எனக் கேட்கமுடியாது. குற்றம் செய்யாதவன் மட்டுமே கல்லெறியமுடியும்.
மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் நினைவாக நாம் ஒரு மலரை சமர்ப்பணம் செய்வது என்பது எமது வரலாற்றுக் கடமையாகும். எந்த வன்முறைக்கு மத்தியிலும், எந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும்@ இவைகளை எதிர்த்து நாம் கொடுக்கும் குரலின் நம்பிக்கைதான் இந்த மலர். இது ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும்.
இந்த மலரானது அனைத்து அராஜகத்துக்கும் வன்முறைகளுக்கும் எதிரானதாகவும், மனிதநேயத்தை கட்டிவளர்ப்பதாகவும் நாம் எண்ணியது போல் அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். அனைத்து அராஜகத்தையும் வெளிப்படுத்துவதாகவும், மனித நேயத்தைத் தக்கவைப்பதாகவும் படைப்பிலக்கியங்களை நாம் கோரியபொழுது, இது ஒரு உலகம் தழுவிய வேண்டுகோள் என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கையில் மட்டுமல்ல@ உலகம் பூராகவும் நடைபெறும் அராஜகம், வன்முறை, மனிதநேயமற்ற செயல்கள், பெண்கள்மீதான அடக்குமுறை, குழந்தைகள்மீதான வன்முறை, கைவிடப்பட்ட வயோதிபர்களின் மன உளைச்சல் எனப் பல கோணங்களிலிருந்து படைப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால், இவங்கள் புலிகளுக்கு எதிராகப் புத்தகம் போடுறாங்கள் எனத் தப்பாக எண்ணி, பேச விரும்பியும் பயத்தில் பேனாக்களெல்லாம் வெட்கங்கெட்டு மௌனம் சாதித்துவிட்டது@ பேசிய பேனாக்களில் பல கழுவிய மீனில் நழுவிய மீனாகியது. இதற்கு நாம் பொறுப்பல்ல. அராஜகம், வன்முறை, மனிதநேய மறுப்பு என்றவுடன் எல்லோர் மனங்களிலும் ஈழவிடுதலை இயக்கங்கள் தோன்றி பயமுறுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்திய கடந்தகால கசப்பான நிகழ்வுகளைப்பற்றி அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். புகலிடநாடுகளில் எழுத்துப், பேச்சுச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட, விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சவாலை நாம் மறுப்பதற்கில்லை. கனடாவில் தேடல் நூலகம் எரிக்கப்பட்டதும், பாரிஸில் ஈழநாடு அலுவலகம் கொழுத்தப்பட்டதும் மிகப்பெரிய வன்முறையாகும். ஆனால் இவைகளுக்கு அப்பால் நமக்கு நம்பிக்கையூட்டும் பேனாக்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மனநிறைவுடன் குறித்துக் கொள்கிறோம்.
'நான் எழுதுவதைத் துணிந்து போடுவீர்களா?" என தெனாவெட்டாக கேள்விகேட்டு, 'ஆம் எழுதுங்கள். போடுகிறோம்" என்றவுடன் மறைந்த அட்டைக்கத்தி வீரர்களையும் எண்ணிப் பார்க்கிறோம். நாங்கள் சிறிது தயங்கியிருந்தால் இந்தப் பித்துக்குளிகளெல்லாம் தங்கள் பதுங்குகுழிகளிலிருந்து மற்றவர்களுடன் எங்கள் முதுகெலும்புகள்பற்றி ஆய்வே நடத்தியிருப்பார்கள். அவன் எழுதினால் எழுதமாட்டேன்@ இவன் எழுதினால் எழுதமாட்டேன்@ அவனுடைய கை பட்டால் எழுதமாட்டேன் என்பதெல்லாம் சுயநல சந்தர்ப்பவாதமாகவே நாம் கருதுகிறோம். மறுபக்கத்தில் இதுவும் ஒரு வகையான வன்முறையாகவே நாம் கருதுகிறோம். ஆயுதங்கள் மட்டுமல்ல@ சில பேனாக்களும் எச்சரிக்கை செய்துகொண்டுதானிருக்கிறது. துணிந்து கருத்தை முன்வைக்கப் பயமிருந்தால், தயக்கமிருந்தால் நேர்மையாகக் களத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். அராஜகத்தைக் கண்டிக்கவும்@ வன்முறையை எதிர்க்கவும்@ மனிதநேயத்தை நிலைநாட்டவும்@ இவைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கவும்@ பேனாவைப் பிடிக்கவும்@ சந்தர்ப்பம், சகுனம், சூழ்நிலை, குழுபேதம் பார்க்கவேண்டியதில்லை. துணிவுடன் நாம் வைக்கும் கருத்தே முக்கியம். வரலாற்றுத் தவறொன்றை செய்தவர்களாகவே இவர்களை நாம் இனம் காண்கிறோம்.
ஈழவிடுதலையின் பெயரில் அராஜகத்துக்கும், வன்முறைக்கும் பலியாகிப்போன எல்லோர் பெயர்களையும் எம்மால் பட்டியலிட முடியாவிட்டாலும்@ சிலரின் பெயர்களையும், சில நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் நாம் இங்கு பதிவு செய்யாமல் போகமுடியவில்லை. தமிழ்த்தலைவர்களைப் பொறுத்தவரையில் அமிர்தலிங்கம், தர்மலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், பொட்டர் நடராசா, சரோஜினி யோகேஸ்வரன், சாம் தம்பிமுத்து, சிவபாலன், கலா தம்பிமுத்து போன்றவர்களதும்@ மட்டக்களப்பு ஆசிரியர் வேல்முருகு, காங்கேசன்துறை ஆசிரியர் கருணானந்தசிவம், குரும்பசிட்டி ஆசிரியர் கிருஷ்னானந்தன், மதிமுகராஜா, கந்தசாமி போன்ற சமூக அக்கறை கொண்டவர்களதும், ரஜனி, செல்வி, காவலூர் ஜெகநாதன், கரவை கந்தசாமி போன்ற எழுத்தை ஆயுதமாகக் கொண்ட சமூக சிந்தனைப் போராளிகளதும்@ பத்மநாபா, சிறீசபாரட்ணம், உமாமகேஸ்வரன், இறைகுமாரன், சுழிபுரத்தில் அழித்துப் புதைக்கப்பட்ட ஆறு இளைஞர்கள் போன்ற இயக்க சார்பானவர்களினதும் கொலைகள் மறக்கவும், மன்னிக்கவும் முடியாமல் உள்ளது. இவைகளுக்கெல்லாம் ஆரம்பமாக அரசியல் சகோதரப் படுகொலைக்கு (1974) பலியாகிப் போன முதலாவது நபர் பருத்தித்துறை கண்ணாடி பத்மநாதன் - சொந்த இயக்கத்துக்குள் படுகொலைக்கு (1978) பலியாகிப்போன முதலாவது நபர் மட்டக்களப்பு மைக்கல் - மாற்று சகோதர இயக்கப் படுகொலைக்கு (1982) பலியாகிப்போன முதலாவது நபர் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) ஆகியவர்களையும் இங்கு நாம் நினைவு கூருகிறோம்.
இப்படிக் கணக்கிலடங்காது சவுக்கம் தோப்புகளிலும், வயல்வெளிகளிலும், காடுகளிலும், கரைகளிலும், செம்பாட்டு மண்ணிலும் புதைக்கப்பட்ட பெயர் தெரியா விடுதலைவிரும்பிகளை நினைத்தால் நெஞ்சு புண்ணாகிறது. விடுதலைக்கென ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் இதற்குப் பொறுப்பாளிகள். யாரிடம் சொல்லி அழமுடியும். கேட்கத் துணிந்தால் வாழ்வை விலை கேட்கிறார்கள். உயிர் என்ன மயிர் என்று நாம் சொல்லமாட்டோம். மற்றவர்கள் உயிர்மீது கரிசனை உள்ள, மனிதநேயமிக்க எமக்கு எங்கள் உயிரும் பெரிதுதான். வாழ்வுக்காகவே போராட்டம், போராட்டத்துக்காக வாழ்வு அல்ல. வாழ்வே மௌனமாக்கப்பட்டு நிர்ப்பந்தங்களுக்குள் தள்ளப்படுமானால்@ வாழ்வுமீதான தேடலை நியாயமாகக் கருதுகிறோம். அந்தத் தேடலுக்காக நாம் மூர்க்கத்துடன் முயல்வோம். ஏனெனில் நாங்கள் அரசியல் வியாபாரிகளில்லை@ எங்களிடம் நரித்தனமில்லை. எங்கள் தேடலில் நேர்மையும் மனிதநேயமும் இருப்பதால் நாம் அதைச் செய்யத் தயங்கவேண்டியதில்லை.
அடுத்ததாக, தென்னிலங்கையில் அரசியல் வன்முறைக்கு பலியாகிப்போன கொழும்பு பல்கலைக்கழக மாணவர் தலைவர் தயா பத்திரானா, பத்திரிகையாளர் றிச்சார்ட் டி சொய்சா, அரசியல்வாதி விஜய குமாரதுங்கா போன்றவர்களின் கொலைகளையும் கண்டிப்பதுடன் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கெதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதையும் இங்கு குறித்துக்கொள்ள விரும்புகிறோம்.
இறுதியாக, அந்த மாங்காய்த்தீவில் தமிழ்பேசும்மக்களின் விடுதலையின்பேரில் நடந்து கொண்டிருக்கும் போரிலும் சரி, புரட்சியின் பேரில் நடாத்தப்பட்ட போரிலும் சரி அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பலியாகிப்போன, பாதிக்கப்பட்ட அனைத்து இயக்க விடுதலைப்போராளிகளையும், அனைத்துப் பொதுமக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் நினைவு கூர்வதுடன் அவர்களது வேதனையில் பங்கு கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் உடன் நிறுத்தப்பட்டு சகல மக்களின் சுதந்திர வாழ்வு உறுதிப்படுத்தப்படவேண்டுமென சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.
எமது கருத்து, எமது நிலைப்பாடு, எமது வேண்டுகோள், எமது கண்டனம், எமது வேதனை, எமது கோபம் அனைத்தும் நியாயமானது என நாம் கருதுகின்றோம். இதில் நாம் தோற்றுப் போய்விடுவோமா என்ற பயம் எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மீண்டும், மீண்டும் ஏற்படுத்தினாலும்@ நாம் தோற்கமாட்டோம் என்னும் மனத்திடம் எம்மை வழிநடாத்திச் செல்லும். நாம் வெல்வோம்.
சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்
மே 1ம் திகதி 1999
|
 |