எனதருமைப் பறவைகளே!
தரைக்கு வரவேண்டாம்
உங்கள் மொழி உங்களுக்குப் புரியும் - ஆனால்
இங்கு புரியாது - எனவே
இங்கே கொன்று விடுவார்கள்
வானத்திலும் உயரச் செல்லுங்கள்!
உங்கள் வானத்தையும்
இவர்கள் வசப்படுத்திவிட்டார்கள்
உங்களுக்கு இனமில்லை
மொழியில்லை - மதங்கள் இல்லை
நீங்கள் விதைப்பதும் இல்லையாம்
அறுப்பதும் இல்லையாம்
இங்கே -
விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இனித்தான்
அறுக்கப்போகின்றார்கள்
நீங்கள்
அழுவதும் இல்லை
தொழுவதும் இல்லை
இறைவனின் பெயரால்
உயிர்களை அழிப்பதும் இல்லை.
உங்களுக்கு நீங்களே வழிகாட்டிகள்.
உங்களுக்காக வழிகாட்டிகள் பிறப்பதும் இல்லை.
ஓ! பறவைகளே - நீங்கள்
தரைக்கு வரவேண்டாம்
உங்களை வரவேற்க - இங்கு
நிலக்கண்ணிகள் இருக்கின்றன.
காலொடிந்த ஆட்டுக்காக
அழுதவனைத் தொழுபவர்கள் - உயிர்க்
காலொடியும் காத்தாவை1 பாடுகின்றனர்.
அப்படியும் நீங்கள்
இங்குவரவேண்டுமெனில்
அரியாசனத்தோடு - உங்களுக்கு
சரியாசனம் வேண்டுமெனில்
உங்கள் சிறகுகளை கழற்றிவிட்டு
~சிவுரை|2களை அணிந்து கொள்ளுங்கள்.
1. காத்தா - பாளி சுலோகப்பாடல்
2. சிவுரை - புத்தபிட்சு அணியும் காவியுடை