நீ
அரசினரின் சித்திரவதை முகாமொன்றில் செத்திருக்கலாமே!
அவர்கள் முழுகடித்த கலமொன்றில் போயிருக்கலாமே!
அவர்களது துப்பாக்கி வேட்டொன்றில் விழுந்திருக்கலாமே!
இல்லை,
காணாமற் போனோருள் ஒருவனாய்
புதைகுழியொன்றுள் அமிழ்ந்திருக்கலாமே!
குண்டு விழுந்து சரிந்த கூரைக்குக் கீழ்
அல்லது
சுவரொன்றன் கீழ்
புதையுண்டு போயிருக்கலாமே!
போகவில்லை.
அகதிமுகாமொன்றில்
பட்டினியோ பெரும்பிணியோ
உன்னை மெல்ல அரித்திருக்கலாமே!
இல்லை.
என்றாலும் போய்விட்டாய்.
இங்கே உனக்காக ஒருவன் இரங்குகிறான் -
நண்பனாம்!
நினைவுகளிற் கொஞ்சமாய் இரைமீட்டுக் கொள்கிறான்.
நிலையாமை சாவென்று நிறையவே பேசுகிறான்.
சொல்லுவன யாவுமே சுடலை ஞானந்தான்.
எனினும்
உன் சாவைக் கொணர்ந்தவர்கள் அவனுக்கு இனியவரோ?
ஏனோ
கொலையை, கொலைஞர்களை ஏசிடவும் முடியாமல்
கொலைச்செயலை வீரமெனக் கொண்டாட இயலாமல்
திணறுகிறான், பாவம்.
சாவதற்கு எத்தனையோ வழியிருந்தும் நீ அறிந்தும்
ஏனிந்த விதமாய் உன் ~நண்பனது| வாயடைக்க
முதலைகளின் விழிகளிலும் வழிகின்ற நீர் வற்ற
வானவெளியினிலே சாவினை நீ தேடினாய்?