நெருடல்
உமா
ஒரு ஆபிரிக்க சம்பாஷணை காற்றோடு கலந்து சங்கீதமாக மிதந்து வந்தது.
'இது யோகானாவா? "
ஒரு நப்பாசையுடன் முன்பகுதி இருக்கைகளில் எனது மகளுடன் அமர்ந்திருந்த நான் திரும்பிப் பார்த்தேன்;.
பின்னிருக்கையில் சாவகாசமாக அமர்ந்து இரு ஆபிரிக்கப் பெண்கள் கதைத்துக்கொண்;டிருந்தார்கள்.
இம்முறையும் ஏமாற்றம் தான்.
'யோகானா.... நான் உன்னை எங்கெல்லாம் தேடுவது? "
யோகானா....
எனது வாழ்க்கையை வாழக் கற்று தந்தவள் நீ....
யோகானா....
என்னைச் சிரிக்கப் பழக்கியவளே நீ....
யோகானா நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவள். மூன்;று வருடங்களிற்கு முன் என்னுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான விடுதியில் நான் எனது மகளுடன் தங்கியிருந்த போது, அவளும் தன் மகளுடன் தங்கியிருந்தாள்.
நைஜீரியாவில் தனது கணவனிடம் அடி உதை வாங்க முடியாமல் மகளுடன்; பிரிந்து வாழ்ந்தவள், ஒரு ஜேர்மானியரை மணம்முடித்து இங்கு வந்தாள். இங்கும் அவளுக்கு நரகம் தான். சிறை வாழ்க்கை. அடி உதை குத்து.
அவள் போராடினாள். அவளது மகளைப் பாலியல் வன்முறை செய்ய அவன் முயற்சித்தபோதுதான் அவள் போராட்டம் உச்சநிலையையடைந்தது. அவள் அவனை விட்டுப் பிரிந்து அந்த விடுதிக்கு வந்திருந்தாள்.
அப்போதுதான் நான் குணபாலனுடனான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அங்கு சென்றிருந்தேன்.
அங்கு சென்றபோதுதான் எனக்கு, எனக்கு மட்டும் என்று நினைத்தவை எனக்கு மட்டுமல்ல. நான் தனித்தவளல்ல, என்னோடு இன்னும் பலர் உள்ளனர் என்று புரிய ஆரம்பித்தது.
ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் ஒரு சோகப்புதையல் இருந்தது. நான் அங்கு அவர்களின் கதைகளின் ஒவ்வொரு கோணத்தையும் தரிசித்தேன். எங்கள் எல்லோரினதுமான இறந்தகாலத்திற்காகவும் அழுதேன்.
கணவனால் அசிற் ஊற்றப்பட்ட சகீரா. தாய்லாந்திலிருந்து வாங்கிக் கொண்டு வரப்பட்டு வீட்டிற்குள் சித்திரவதைப்பட்ட சுயி. கணவனின் சித்திரவதையினால் கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறியிருக்கும் துருக்கியப்பெண் ஓசென். பிள்ளைகளைப் போலந்தில் கடத்திவைத்துக் கொண்டு தன்னுடன் வந்து சேரும்படி பிளக்மெயில் படுத்தப்படும் எலேன். இன்னும் எத்தனை சோகங்கள்.
இவர்கள் ஒவ்வொருவரினது கதையிலும் நான் என்னை இனம் கண்டேன். குணபாலனின் மறுபிறவிகளைக்கண்டு அதிசயித்தேன்.
இவர்களின் மத்தியில் யோகானாவும் இருந்தாள். எனக்கு சிறிதளவு ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரிந்திருந்தபடியால் நான் அவளுடனே சம்பாஷிக்க முடிந்தது.
அவள் தனது சோகங்களை மூட்டை கட்டி எறிந்துவிட்டு எப்போதும் குதுகலமாகவே திரிந்தாள்.
அவளது அழகும்;, அவள் பழகும் சுபாவமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவள் மிகவும் உயரமாகவும் அவளது உடல் பருமனாகவும் இருந்தது.
அவளது அகன்ற கண்களே அவளது முகத்திற்கு மெருகூட்டின. அவள் தனது கண்களுக்கு எப்போதும் மைதீட்டினாள். பல நிறங்களைக் கொண்ட அழகான ஆடைகளை அணிந்தாள். தன் குறுந்தலைமயிரை ஒரு துணியால் சுற்றிக் கட்டியிருந்தாள்.
எனது அழுகையை நிறுத்திவிட்டு அழகாக உடுத்து வெளியில் பயமில்லாமல் சுற்றித்திரியும்படி எனக்கு அறிவுரை சொல்வாள்.
நீ சிரித்தால் எவ்வளவு அழகாக இருப்பாய் தெரியுமா? - அவள் அடிக்கடி என்னைக் கேட்பாள். முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இருக்காதே. அது உனக்கும் உனது மகளுக்கும் நல்லதல்ல என்று எப்போதும் கடிந்துகொள்வாள்.
நான் எப்படி சிரிப்பது?
எனது வாழ்வே சூனியமாகவிருக்கும்போது நான் எப்படி சிரிப்பது?
குணபாலனுடனான நான்கு வருட கசப்பான வாழ்வின் அவலங்களை பொதியாக என் முதுகில் சுமந்துகொண்டு நான் எப்படி சிரிப்பது. அவனுடன் கழித்த வருடங்களை வாழ்வு என்று சொல்லமுடியாது.
சந்தேகம், அதிகாரம், சுயநலம் எனப் பல விஷப்பாம்புகள் அவன் உடம்பென்னும் புற்றில் குடிகொண்டிருந்தன.
அவை அடிக்கடி வெளியில் வந்து என்னைக் கொத்திப்பார்த்தன. அவை அடிக்கடி கொத்தியமையால் எனது உடலும் மனமும் அவ்விஷத்திற்கு நீர்ப்பீடனமாகியிருந்ததோ என்னவோ நான் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிக் கொண்டேன். எனது சகிப்புத்தன்மையைத் தனக்கு சாதமாக்கிக்கொண்ட குணபாலன் பாம்புகளை என்மேல் மேன்மேலும் ஏவிவிட்டான். அவை கொத்திக் கொத்தி என் மனமும் உடலும் காயங்களால் நிறைந்திருந்தன. காயங்கள் வலியெடுக்கும் போதெல்லாம் எனது மகளிற்காகப் பொறுத்தேன். அவன் பாம்பாட்டியாக காட்சியளித்து என்னைக் காயப்படுத்திக்கொண்டேயிருந்தான். அக்காயங்களின் அகோரங்கள் எனது மகளின் மனதில் சிறிதுசிறிதாக பரவுவதைப்பார்த்து நான் அதிர்ந்து போனேன். சகிப்புத்தன்மை, பொறுமை, தலைவிதியென எனது தலையில் நானே ஏற்றியிருந்த மகுடங்களை எறிந்துவிட்டு எனது மகளுடன் வெளியில் ஓடினேன்.
இது உனக்கு மட்டுமல்ல. இவ்வுலகில் எல்லாப் பெண்களுக்கும் நடக்ககூடியவொன்று.
இந்நிலையிலிருந்து நாம்தான் எம்மை விடுவிக்கவேண்டும். யோகானா மிகவும் கரிசனையுடன் என் தலையைத் தடவினாள்.
அழாதே.... இங்குள்ள எங்கள் எல்லோருக்கும் பிரச்சனை இருக்குது. கவலைகள் இருக்கின்றன. நாங்களும் இங்கு சந்தோஷமாக இல்லை. ஆனால் நாம் நிஜத்திற்கு முகங்கொடுக்கவேண்டும். அந்த மிருகத்திடமிருந்து நீ தப்பி வந்ததையிட்;டு சந்தோஷப்படு.
அதற்காக சிரி.
உனது கடந்தகாலத்தின் கவலைகள்;, கொடூரங்கள் தொலைந்து போவதற்காக உரக்கச்சிரி.
உனது மனதை இலேசாக்கச் சிரி....
உனக்காகச் சிரி....
உனது மகளுக்காகச்சிரி....
புன்னகைக்கும்போது நீ எவ்வளவு அழகாய் இருப்பாய் தெரியுமா...? உன் கண் முன்னுள்ள நிஜத்தை புன்னகையோடு எதிர்கொள்.
அறைக்குள்ளே அடங்கியிருக்காதே. வெளியேவா.
அப்போதுதான் உன்னால் உனது மகளுக்கு வெளிச்சத்தைக் காட்டமுடியும்.
இங்குள்ளவர்கள் எல்லோரும் இங்கு நிரந்தரமாக இருப்பவர்கள் இல்லை. பலர் இங்கிருந்து வெளியில் சென்று தமக்கென வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். துரதிஷ்டவசமாக சிலர் தமது கணவன்மாரிடம் திரும்பிப் போகத்தான் செய்கிறார்கள். பாவம் அவர்கள். யோகானா பெருமூச்சுவிட்டாள்.
தனது இரு கைகளினாலும் என் தோள்களை இறுக்கப்பற்றினாள். கவலைப்படாதே.... எனது காதிற்குள் மெதுவாகச்சொன்னாள்.
அவளது அன்பும் திடமான வார்த்தைகளும் எனது மனதில் அடைந்திருந்த பாரங்களை ஒவ்வொன்றாக வெளியே இறக்கின.
நான் எனது இறந்தகாலத்தை அனுபவமாகக்கொண்டேன். நிகழ்காலத்தைத் துணிவுடன் முகங்கொடுத்தேன். எதிர்காலத்தைப் புன்னகையுடன் வரவேற்றேன்.
எனது நண்பியொருவருடன் ஒருவார விடுமுறைக்குச் சென்று திரும்பியபோது எனது மேசையில் யோகானாவின் கடிதம் இருந்தது. தான் தொழில்வாய்ப்புத் தேடி ஒரு நண்பியின் நகரத்திற்குச் சென்றிருப்பதாக அதில் இருந்தது.
அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்கவில்லை. அதன் பிறகு நானும் அவ்விடுதியிலிருந்து வெளியேறி வெளியில் வாழ்ந்;தேன்.
நாம் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதாக மகள் நினைவுபடுத்தினாள். கடந்தகால நினைவுகளிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு நான் இறங்குவதற்கு ஆயத்தமானேன். ஒருமுறை பின்னிருக்கைப் பெண்ணைப்பார்த்தேன்.
நான் ஓருநாள் என் யோகானாவை நிச்சயம் கண்டுபிடிப்பேன் அல்லது அவள் என்னைக்கண்டுபிடிப்பாள்.
|