ஓர் ஒளியேற்று!

நோர்வேஜிய மொழி மூலம் : F. K. Blichfeld
தமிழில்: ஆழிபுத்திரன்


நாளாந்தம்
குறையற்று உணவருந்தும் நீ
தினம் தினம்,
எண்ணிக்கை மறந்த நாட்களாய்
பசியில் வாடுவோருக்காக
ஓர் ஒளியேற்று.

ஒன்றுமில்லாதவர்களையும்
உணவின்றி
செத்துப் போவோர்களையும்
எண்ணிப் பார் சற்றேனும்.

பயங்கரவாதத்திற்கும்
அதன்
போர் முகத்திற்கும் எதிராக
எழுந்து செயற்பாடு கொள்.

உன்னை
நாடி வரும் மனிதத்தை ஆதரி.

அமைதியாலும், சமாதானத்தாலும்
உலகை கட்டியெழுப்ப
எம்மை அனுமதி
அந்த உன்னதமான உலகில்
நாம் அனைவரும் ஒன்றாயிருப்போம்.

உனது மட்டுமான நலனையும்,
அந்த நலனை நிறுவ
முன்னெழும் நிபந்தனைகளையும் ஒதுக்கிவிடு
உனக்காக
மற்றவர்கள் பாதிப்படையாது பார்த்துக்கொள்.

இந்த
மகத்தான வேள்விக்காக
ஏற்று ஒரு ஒளியை
அது
உன்னுள்ளே ஒளிர்வதை வெளிப்படுத்து.

விடிவுக்கான நம்பிக்கை ஒளியை
எரிய விடு.
இதனால் எங்கும்
அமைதியும் சமாதானமும் வளர்ந்து மலரட்டும்.