புலம்பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல வன்முறைகளும்தான்....

அழகு குணசீலன்

எங்கிருந்து தொடங்குவது என்பது எனக்கும் பிரச்சினைதான். விலங்கியல் இயற்கைவிதியில் இருந்தா? அல்லது எமது மக்கள் என்றும் பெரும் நம்பிக்கை வைத்துள்ள மத, கலாச்சார அடித்தளத்தில் இருந்தா? எங்கிருந்து தொடங்குவது? இல்லை, தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் இருந்தா? எங்குமே வன்முறைகள். எங்கிருந்து தொடங்குவது...?

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் மத்தியில் நிலவுகின்ற அரசியல் வன்முறைக்கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கிருந்து தொடங்குகின்றேன். ஆம்! எஸ். ரகுபதியின் கவிதைவரிகளில் இருந்து...

'.....................................
....................................
ப+மி உருண்டையா?
தூக்கு கலிலியோவை
மைக்கலை, சுந்தரத்தை
மனோமாஸ்டரை ராஜினியை...
ஈழத்தில் ஆழப்புதை

ஆயிரம் மைல்களிற்கு
அப்பால் ஐரோப்பியத்
தெருக்களிலும் மறத்தமிழனின்
கருவிக் கலாச்சாரத்தை
சபாவுடன் தொடர்
உண்மையைத் திருகு.

.........................
........................."

இந்தக் கவிதை வரிகள் ஈழப்படுகுழிகளில் இருந்து ஐரோப்பியத் தெருக்களுக்கு வன்முறைகளை எம்மவர்கள் காவிய கதையைச் சொல்லுகின்றன.

தமிழ்த்தேசியத்தின் ஆயுதப்போராட்டம் சகோதரப்படுகொலைகள், உட்படுகொலைகள், மக்கள்மீதான கொலைகள் என தனது ஆயுதப்பசிக்கு இரைதேடி ஈழத்தையும் இந்தியாவையும் தாண்டி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சண்டித்தனம் செய்யும் ஒரு துர்ப்பாக்கிய துப்பாக்கிச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பம் தமிழ்மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது. இதனால் ஆயுதம் ஏந்திய அனைத்துக்குழுக்கள்மீதும் அவர்கள் அதீத நம்பிக்கை கொண்டு இருந்தனர். விளைவு ~மண்டையில் போடப்பட்ட|, ~மின்கம்பத்தண்டனை வழங்கப்பட்ட| போதெல்லாம் இயக்கங்களால் விட்டுச் செல்லப்பட்ட எந்த ஒரு கடதாசியையும் அதில் இருந்த வாசகத்தையும் மக்கள் நம்பினர். அத்தோடு தாமாகவே முன்வந்து இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்தவும், அங்கீகரிக்கவும் அவர்கள் பின்நிற்கவில்லை.

இந்தப்போக்கு வன்முறைகளின் வளர்ச்சிக்கும், ஜனநாயக மறுப்புக்கும், மனிதஉரிமை மீறல்களுக்கும் உட்பட்ட ஒரு சமூகத்தை எம் மத்தியில் வளர்த்துவிடும் என்று அந்த மக்கள் எண்ணி இருக்கவில்லை. புனிதர்கள்மீது அபார நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தார்கள். இன்று நடந்து இருப்பது என்ன? அதன் அறுவடையை ஈழத்திலும், ஈழத்திற்கு வெளியே புலம்பெயர்ந்த நாடுகளிலும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எந்த ஜனநாயக மறுப்புக்களுக்கும், மனிதஉரிமைமீறல்களுக்கும் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்திப்போராட முன்வந்தார்களோ, அவர்கள் எல்லோரும் அதே ஆயுதத்தினால் அதே மறுப்புக்களையும் மீறல்களையும் ஒடுக்குதல்களையும் செய்யத் துணிந்தபோது போராட்டத்தின் இலக்கு கேள்விக்குறியானது.

இந்தப்பயங்கர விளைவைக் கேள்விக்குட்படுத்திய சமூகஅக்கறை கொண்டோர், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள், புத்திஜீவிகள், போராளிகள் போன்றோரின் எழுத்து, கருத்துச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு ஈழத்தில் வாழ்வதற்கான உரிமையும் பறிக்கப்பட்டு, சொந்த மண்ணைவிட்டு வெளியேறக் காலக்கெடுக்களும், தவறின் மரணதண்டனைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கட்டாய பலாத்காரத்தினால் வெளியேற்றப்பட்ட அவர்கள் புலம்பெயர்ந்த சூழலிலும் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாதவாறு வன்முறைகள் அவர்களைத் துரத்துகின்றன.

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களாலேயே எம்மவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை இவ்வாறு பாகுபடுத்தியுள்ளேன்.

# பத்திரிகைகள், சஞ்சிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தடைகள், தாக்குதல்கள்.

# அமைப்புக்களுக்கு எதிரான வன்முறைகள், அச்சுறுத்தல்கள் - தலையீடுகள் கட்டுப்பாடுகள்.

# கொலைகள்

இங்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இடம்பெற்ற வன்முறைகளை நாடுகள்வாரியாகத் தருவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதன் கருத்து, இங்கு தரப்படாத நாடுகளில் எந்த வன்முறைகளும் இடம்பெறவில்லை என்பதல்ல. மாறாக கால அவகாசம் இன்மையினால் அவற்றையும் பெற்றுத் தொகுக்கமுடியவில்லை.

புகலிடத்தில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சஞ்சிகை வெளியீட்டாளர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. கனடாவில் செந்தாமரை பத்திரிகையின் ஆசிரியர் டி.பி. ஜெயராஜ் தாக்கப்பட்டுள்ளார். சுவிஸில் வெளிவந்த ~தமிழ்ஏடு| பத்திரிகையின் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்திற்கு கொலைப்பயமுறுத்தல்கள் உட்பட பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சுவிஸில் ~மனிதம்| சஞ்சிகைமீதும் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபட்டது. டுருணுநுசுN புகையிரதநிலையத்தில் அவர்கள் தமது சஞ்சிகையை விற்பனை செய்தபோது தடுக்கப்பட்டார்கள். மனிதம் குழுவினர்பற்றி பொலிஸாருக்கும் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளிவரும் தினமுரசு, சரிநிகர் பத்திரிகைகள்மீது சுவிஸிலும் பிரான்சிலும் விற்பனைத்தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் சுவிஸில் ஒரு சில வர்த்தகர்கள் அத்தடையையும்மீறி விற்பனை செய்தனர். நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ~லா சப்பல்| கடைகளில் தினமுரசு, சரிநிகர் தேடி அலைந்தேன். அந்த வர்த்தகர்கள், 'அவை தடைசெய்யப்பட்ட பத்திரிகைகள் நாங்கள் அவற்றை விற்பனைசெய்ய முடியாது. ஏன் வீண்வம்பு?" என்று கூறினார்கள். ஆனால் தற்போது ~தினமுரசு| தனது பார்வையை சட்டப்பையை நிரப்பும்வகையில் திருப்பி இருப்பதனால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மாற்றுக்கருத்துள்ள குழுக்களால் வெளியிடப்பட்ட சகல சிறுசஞ்சிகைகள்மீதும் ஏதோ ஒரு வகையில் வன்முறை இடம்பெற்றுள்ளது. அவற்றின்மீதான தடையாக அல்லது கண்காணிப்பாக அல்லது வெளியீட்டாளர்களுக்கான மிரட்டலாக அல்லது வேறுவடிவமாக இது அமைந்து இருக்கலாம்.

மனிதம், ஓசை, மௌனம், தூண்டில், சுவடுகள் போன்ற பல சிறுசஞ்சிகைகளை இதற்கு உதாரணமாகக் கொள்ளமுடியும்.
கனடாவில் தேடகமும், பாரிஸில் ஈழநாடும் எரிக்கப்பட்ட சம்பவங்கள் ஈழத்தமிழர்களின் புகலிட வரலாற்றில் வன்முறைகளின் புலப்பெயர்ச்சியைக் காட்டும் இரு முக்கிய விடயங்களாகும். ரொறன்ரோவில், ~தேடகத்|தில் ஆயுதக்கலாச்சாரத்திற்குப் பலியான ராஜினி திரணகம, றிச்சார்ட் டி சொய்ஸா, சபாலிங்கம் ஆகியோரின் நினைவாகக் கூட்டம் ஒன்றை நடாத்தியதைத் தொடர்ந்து ~தேடகம்| எரிக்கப்பட்டது.
மாத்தையாவுக்குப் பிரபாகரனால் விதிக்கப்பட்ட மரணதண்டனையை நியாயப்படுத்தி பாரிஸ் ஈழநாடு செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து ஈழநாடு காரியாலயம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு காரியாலயத்திற்கும், யாழ் நூலகத்திற்கும் தீவைத்த அரசபயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். வித்தியாசங்களைத் தேடுவதைவிடவும் ஒற்றுமைகளைத் தேடுவது இலகுவானதல்லவா?

பாரிஸில் இடம்பெற்றுள்ள மூன்று அரசியற்படுகொலைகள் தமிழ்மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தவை. விடுதலைப்புலிகளின் நிதிப்பொறுப்பாளர் நாதன், ஈழமுரசுப்பத்திரிகையின் ஆசிரியர் கஜன், இலக்கியவாதியும் மனிதஉரிமைகள்வாதியுமான சபாலிங்கம் ஆகியோரின் கொலைகளே அவை.

நாதனையும் கஜனையும் குறிப்பிட்ட ஒரு இடத்திற்குச் சந்திக்க வருமாறு வஞ்சகமான முறையில் தகவல் கொடுத்தவர்கள் அங்கு காத்திருந்து அவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றனர். அப்போது ஈழத்துப் பத்திரிகைத் தர்மமும், ஜனநாயக அரசியலும் பாரிஸ் வீதியில் பிணமாக வீழ்ந்தன.

பாரிஸில் இடம்பெற்ற சபாலிங்கத்தின் கொலை மாற்றுக்கருத்துள்ள கலைஇலக்கியவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவரிடம் உதவிகேட்டு வந்த இரு துப்பாக்கி மிருகங்கள் அவரைச் சுட்டுக்கொன்றனர். மே முதலாம் திகதி உலகம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, வர்க்கவிடுதலையில் நம்பிக்கைகொண்டிருந்த அவரது உயிர் பறிக்கப்பட்டது.

இவற்றைத் தவிரவும் அரசியல் படுகொலைகளாக இல்லாதபோதும் எமது கொலைவெறிக்கு ஆதாரமாக அமையும் கொலைகளாக, சுவிஸில் வட்டிக்கொடுப்பனவுகளுக்காகக் கொல்லப்பட்ட கவுண்டர், குமாரசாமி ஆகியோரின் கொலைகளும், பாரிஸில் அண்மையில் கொல்லப்பட்ட மாணவி நிதர்ஷனியின் கொலையும் மற்றும் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ள மாணவி சுஜீதாவினதும் குமாரினதும் கொலைகளும் ஆவணப்படுத்தப்படவேண்டியவையே.

சுவிஸில் முன்னாள் புளொட் உறுப்பினர் கொல்லப்பட்டமையும், அண்மையில் காலமான ஈஸ்வரனுக்கு விடுக்கப்பட்டிருந்த கொலைப்பயமுறுத்தல்களும் அரசியல்சார்பானவையே. ஜேர்மனியில் கோடையிடி குமரன் தாக்கப்பட்டு கை ஒடிக்கப்பட்டார். நோர்வேயில் கண்காட்சி ஒன்றுக்காக ஆவணங்களைத் தயார்செய்து தமயந்தி எடுத்துச் சென்றபோது ஜனநாயகவிரோதச் சக்திகள் அவரது காரை உடைத்து ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டு சுயமாக இயங்கிவரும் மத, கலாச்சார, கல்விசார் பொது அமைப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அவர்களின் செயற்பாடுகளில் தலையிடுவதும் இடம்பெற்றுவருகின்றது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலிகளுக்கும் பத்திரிகைகளைப் போன்றே கட்டுப்பாடுகளும் தலையீடுகளும் உள்ளன.

ஆயுதப்போராட்டம் ஊடாக வளர்ச்சி பெற்றுள்ள கொலைக்கலாச்சார மிருகத்தனங்களாகவே இவற்றைக் கொள்ளவேண்டியுள்ளது. மிருகங்கள் உள்ளவரை மனிதவேட்டைகளும் இருக்கும். இதனால் பல்வேறு மிருகங்களால் கொலைசெய்யப்பட்ட மனிதர்களின் பட்டியலைத்தரும் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையில் இருந்து ஒரு பகுதி இங்கே,

யாழ் நூலகத்தை எரித்தது போல
யார் எங்கள் நூலகமான
மக்பூலுக்கு நெருப்பு வைத்தது

யாழ் நூலகத்தை எரித்ததுபோல
யார் எங்களது நூலகமான
வணசிங்காவைக் கொழுத்திப் போட்டது

யாழ் நூலகத்தை எரித்ததுபோல
யார் எங்களது நூலகமான
பிதா சந்திரா பெர்னாண்டோவை சாம்பராக்கியது

யாழ் நூலகத்தை எரித்ததுபோல
யார் எங்களது நூலகமான
கந்தசாமியைக் கருக்கிப் போட்டது.

யாழ் நூலகத்தை எரித்ததுபோல
யார் எங்களது நூலகங்களான
சபாலிங்கத்தைப் பாரிஸில் அழித்தது
செல்வியைப் பிடித்து நீறாக்கியது
யார் ஐயாவோடு சில்வா தோழரை
வன்னியில் பிடித்து ரயரில் எரித்தது

பதவிப்போட்டியில் தம் தோழரைக்கொல்ல
யாழ்ப்பாணத்து வைத்தியசாலையை
கசாப்புக்கடையாய் மாற்றியவர்கள் யார்
தாங்களும் தீவிர போராளிகளே என நிரூபிக்க
விஸ்வமடுவிலோர் ஏழையைப் பிடித்து
உளவாளியெனக் கொன்றெரித்தவர் யார்

இப்போது புரிகிறதா? புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் இவற்றின் தொடர்ச்சியாகத்தான் வன்முறைகள் புலம்பெயர்ந்தன. வன்முறைகளால் மனிதர்களைக் கொல்லலாம். ஆனால் அந்த மனிதர்களின் உன்னத இலக்குகளைக் கொலைசெய்யமுடியாது.
தொப்பி யாருக்கு அளவாக இருக்கிறதோ போட்டுக்கொள்ளுங்கள்.