கொலைக்களப்பாடல்
அருந்ததி

பனிவிழும் தேசத்துக் கனவுகளில்
உருகி அழிந்தது மனம்.
மீளத்தரும் நினைவுகளில்
புதையுண்டு போனது
காலம்.
மீறமுடியாத கோடுகளுக்குள்
மௌனித்துப்போயின
எல்லாமும்.
வேட்டைமுடித்து
நிணம் புசிக்க
காடுகள் அவிந்தன.
காற்று
சாம்பலை அள்ளி வீசிற்று
தேசாந்திரமெங்கும்.
சிலுவை யுத்தமும்
யூதப் படுகொலைகளும்
மறைந்துபோக
நாங்கள் தோன்றினோம்.
அறுந்துபோன
வேர்களிலெல்லாம்
ஆயுதங்கள் தொங்கிக்கொண்டன.
எல்லைகளறுத்து
சர்வதேசிய கீதமாயின
கொலைக்களப் பாடல்கள்.
மகிழ்ந்துகொண்டனர்
நரகாசுரர்கள்
சுருதியும் தாளமும்
சுத்தமாய்ச் சேர
உச்சத்தொனியில்
உரத்துப்பாடினர்.
பூமி சுருங்கிக்கொண்டது
நான்கு திசைகளும்
ஒரே மையப்புள்ளியில்
சந்தித்துக்கொள்ள
சவக்குழியில் வீழ்த்துவது
எளிதாயிற்று.
தேடுவோம்
நாளை இன்னொரு தேசம்
குண்டுகள் துளைக்க
குருதியறைந்த சுவர்களில்
உலர்ந்துபோயிருக்கும் மனிதத்தின்
எச்சங்களோடு
நட்சத்திரங்கள் அப்பிய
வானத்தின் கீழ்
புதிதாக....