நான் காணா மனிதனை...
பானுபாரதி

எனக்கென்றொரு
கண்கண்ட கடவுளை தேடித் தந்த
என் தந்தைக்கும்,
தாயின் சமாதிக்கும்
நான் சொல்லிக் கொள்வது....

எனது மகளுக்கு
நிச்சயமாய்
நானோர்
கண்கண்ட கடவுளை
தேடித் தரப்போவதில்லை
அவள்
ஒரு மனிதனை
தானே தேடி கண்டடைவாள்.

கனவு காண மட்டும்
வளர்ந்த, வளர்க்கப்பட்ட
பெண் நான்.

பல நூறாய்
பல ஆயிரமாய்
பல இலட்சமாய்
பூத்து நின்ற நட்சத்திரப் பட்டாளமாய்
எனது கனவுகள்.

ஈரும் பேனுமாய் பிடுங்கி
வாயில் போடும் குரங்கைப்போல்
எனது
கண்கண்ட கடவுளந்த
நட்சத்திரங்களை பிடுங்கி
வாயில் போட்டுக்கொண்டான்.
எஞ்சியதை
கூட்டியள்ளி
கொட்டு குப்பையிலென
என்னிடமே கட்டளை பணித்தான்.

எனது மகள்
ஒரு
மனிதனைத் தேடிக்கொள்வாள்.

வாழ்க்கை
வடக் கயிறாய்
அவள் கழுத்தைச் சுற்றிக்கொள்ளாது.
வாழ்க்கை அவளையும்,
அவள்
வாழ்க்கையையும் கூட்டிச் செல்வாள்.
என்னைப்போல்
ஒரு
கண்கண்ட கடவுளிடம்
கனவுகளை தொலைக்கமாட்டாளவள்.
கூட்டியள்ளி
குப்பையில் கொட்டவும் மாட்டாள்.

அவளை நேசிக்கும் ஒரு மனிதனுடன்
நேசமாய்
கை கோர்த்து நடப்பாள்.

எனது அம்மா
உன்னைப்போலல்லாமல்,
அவளது அம்மா
என்னைப்போலல்லாமல்
தலை
நிமிர்ந்து நடப்பாளவள்.

இப்போது
நான் முறையிடுதல்போல்
எனது சமாதியில் அவள் நின்று
முறையீடு செய்யாள்.

அம்மா!
கண்கண்ட கடவுளை அன்றி
ஒரு மனிதனைக்காண
ஏனன்று இல்லாமற்போனது
எனக்கனுமதி?