அல்தூஸர் விளக்கிய கருத்தியல் அரசுயந்திரம்
செ. கணேசலிங்கன்
மார்க்சியத்திற்குப் புதிய பங்களிப்புச் செய்தவர்களில் பிரெஞ்சு அறிஞர் அல்தூஸருக்கும் (1918-1990) பெரிய பங்குண்டு. மார்க்சியம் பற்றிய அவரது விரிவும் விளக்கங்களும் இன்று நிலைபெற்றுள்ளன. வரலாற்றை விஞ்ஞானமயப்படுத்தியதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனவும் உலகை மாற்றியமைக்கும் மார்க்சின் சித்தாந்தமே இயங்கியல் பொருள்முதல்வாதம் எனவும் சுருக்கமாக மார்க்சியத்திற்கு விளக்கம் கூறினார்.
சமூகஅமைப்பை இறுதியாகத் தீர்மானிப்பது அதன் அடித்தளமான பொருளாதாரம் (உற்பத்திச்சக்திகளும் உற்பத்திஉறவுகளும்). இந்த அடித்தளம் மேல்மட்ட அமைப்பாக அரசியல் சட்டம் சார்ந்தவைகளையும் கருத்தியல்களையும் தீர்க்கமாக ஏற்படுத்திக் கொள்கிறது என்பது மார்க்சியத்தின் பிரதான கூற்றாகும்.
இக்கூற்றில் கருத்தியல்பற்றிய விரிவான விளக்கமாகக் கூறிய பெருமை அல்தூஸரையே சாரும். அவரின் பிற பங்களிப்பைவிட்டு இக்கருத்தியல்பற்றியே சில குறிப்புகள் இக்கட்டுரையில் கூற உள்ளேன்.
கருத்தியலை அரசுயந்திரத்தோடு இணைத்து கருத்தியல் அரசுயந்திரம் என அல்தூஸர் விரித்துக் கூறினார். (கருத்தியலை (னைநழடழபல) கருத்துநிலை, கருத்துருவம் எனவும் சிலர் தமிழில் எழுதுவர்) அரசுயந்திரம் என்பதை இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். அரசு என்பது ஒரு பலாத்கார ஒடுக்குமுறை யந்திரம் என லெனின் ~அரசும் புரட்சியும்| என்ற தன் நூலில் கூறியுள்ளார். அடுத்தது கருத்தியல் சார்ந்த அரசுயந்திரம். அரசு என்பது வன்முறையான வடிவம், கருத்தியல்கள் வன்முறையற்றவை என்று கொள்வோரும் உளர். கருத்தியல்கள் என்பன குடும்பம், மதம், சாதி, கல்வி, கலை இலக்கியங்கள், சட்டவிதிகள், இன, நிற, பால் பேதங்கள் என விரிக்கலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை வன்முறையற்றவைகளாகத் தோன்றலாம். ஆழ்ந்து நோக்கும்போது அவற்றுள்ளே ஏற்றத்தாழ்வுகளும் வன்முறைகளும் மறைந்துள்ளதைக் காணலாம்.
குடும்பம் என்ற அமைப்புக்குள்ளே ஆதிக்கஉறவுகள் நிலைத்திருப்பதை அறியலாம். தாத்தா, அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கையரிடை வீடுகளுக்குள்ளேயே ஆதிக்கஉறவுகளும் அவற்றையொட்டி வன்முறைகளையும் பார்க்கிறோம். மதம், பால்பேதம், கல்வி, உழைப்பு வாய்ப்புகளை ஒட்டியும் ஏற்றத்தாழ்வுகளையும் படிமுறை ஆட்சியையும் குடும்பத்துள்ளே அவதானிக்கலாம். குடும்ப அமைப்புள் எவரும் சுதந்திரம் பெற்றுள்ளனர் என்று கூறிவிட முடியாது. குடும்பத்தின் பெயர்கள் ஒவ்வொரு நபருடனும் தொடர்கின்றன. தனிநபர் பெயர் எங்கும் பரவலாக அனுமதிக்கப்படுவதில்லை. அப்பா பெயருடன், திருமணமான பெயர் கணவன் பெயருடன் குடும்பத்தில் இணைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் குடும்பப்பெயர் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. அரசுயந்திரத்துடன் சட்டரீதியாக குடும்பமும் பிணைக்கப்படுகிறது. பாஸ்போட், வருமான வரி, சொத்துரிமை, உறவுமுறைகள் யாவும் இணைகின்றன. (அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பவை எமது குடும்ப அமைப்பைப் பேணும் கருத்தியல்கள்)
மதம் குடும்பத்துடனேயே தொடர்கிறது. மதம் ஆதிக்கம் மிக்க கருத்தியல், அபினி போல. குடும்பம், அரசு, சமூக உறவுகளுடன் ஆத்மாவையே மதம் பிணைத்து வைத்துள்ளது. நிலப்பிரபுத்துவ சமூகஅமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் மதம் என அல்தூஸர் கூறுவார். (முதலாளித்துவத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல்சட்டவிதிகள் என்பார்) மதவெறியால் ஏற்படும் வன்முறைகளை வரலாறு கண்டுள்ளது. ஐரோப்பாவிலேயே சிலுவை யுத்தம் 300 ஆண்டுகளாக நடந்ததை வரலாறு கூறும். மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இந்தியா முதலிய நாடுகளிலே மதக்கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரசுயந்திரமே கல்விக்கொள்கையைக் கட்டுப்படுத்துகிறது. கல்வி முடிந்ததும் வேலையற்றவர் தெருவில் அலைய, ஒரு பகுதியினர் அரசுயந்திரத்துடன் இணைந்து இராணுவம், பொலிஸ், அரசுநிர்வாக அதிகாரிகளாக மாறுவர். இவர்களால் பெரும்பான்மையோர் அடக்கி ஒடுக்கப்படுவர். முதலாளித்துவத்தின் லாபத்திற்காக யந்திரங்களில் கூலி அடிமைகளாக உழைப்பர்.
ஒரே கல்வி, இரு முரண்பட்ட வர்க்கமாக அரசுயந்திரம் பிரிக்கிறது. ஒரு பகுதியினர் உழைக்க@ மறு பகுதியினர் அடக்கி ஒடுக்க. முதலாளித்துவத்தில் புசயஅஅநச ளஉhழழட என்ற ஆரம்பக்கல்வியை வலியுறுத்துவர். அறிவு வளர்ச்சிக்காக அல்ல, தொழிற்சாலைகளின், அரசுயந்திரத்தின் சட்டதிட்டங்களைப் படித்தறிவதற்காக என அல்தூஸர் கூறுவார். பள்ளிக்கூடத்து ஆரம்பக்கல்வியின் மூலமே முதலாளித்துவ சட்டங்களை மதித்து நடக்கவும் அவர்களது அரசியலின் புனிதத்தன்மையை ஏற்றுக்கொள்வதற்கும் கற்பிக்கப்படுவர். கல்விக்கூடங்கள் இதற்குத் துணைபுரியும்.
இன்று படைக்கப்படும் கலை, இலக்கியங்களும் அரசு யந்திரத்துக்குச் சேவை செய்வதாகவே ஆக்கப்பட்டு வெளிவரும். அரசு சார்ந்த சட்டவிதிகள் மீறப்பட்டால் தண்டனை கிடைக்கும்.
இந்தியா, இலங்கை போன்ற படிமுறைச் சமூக அமைப்பில் சாதி என்ற கருத்தியல் ஆழமாகப் பதிந்திருப்பதைக் காணலாம். உயர்ந்த சாதியினரே ஆட்சிப்பீடத்தில் அதிகாரத்தில் இருப்பதைக் காணலாம். (இலங்கையில் ~கொய்கம| உயர்சாதியினரின் ஆட்சியே 1948இல் சுதந்திரம் கிட்டிய காலத்திலிருந்து நடைபெறுகிறது. பிரேமதாசாவின் நாலு ஆண்டு ஆட்சி விதிவிலக்காகும். விதிவிலக்கு விதியாகாது)
வெள்ளைநிறத்தவரே உயர்ந்தவர். மனித இனத்தில் ஆண்களே முதன்மையானவர் என்ற கருத்தியல்களும் நிலைபெற்றுள்ளன. மனிதஇனம் தொடர்ந்து சமூகமாக நிலைபெற தேவையானவை இரண்டு. ஒன்று உணவு, இருப்பிடம், உடை, நீர் ஆகிய சமூக உற்பத்திகள். மற்றது மனித இன, உயிரின உற்பத்தி. சமூக உற்பத்தியிலும் குடித்தொகைப் பெருக்கத்திலும் ஈடுபடக்கூடியவர் பெண்ணினமே. (ஆணில்லாமல் குடிப்பெருக்கமில்லை என்று இன்றைய விஞ்ஞான உலகில் கூற முனைவது விதண்டாவாதம்)
ஜனநாயக மத்தியஸ்துவம் இல்லாத சமூகஅமைப்புகளில் தலைவர் கூறுவதே சரியான கருத்து, கட்டளை எனவும் கடைப்பிடிக்கப்படலாம். தனிநபர் வணக்கம் கருத்தியலாகும்.
கருத்தியல்கள் வெறும் கருத்துக்களாலானவை, விஞ்ஞானபூர்வமற்றவை, அநாதியாகத் தொடர்ந்து வருபவை. மக்கள் கருத்தியல்களின் ஆதிக்கத்தில் நடமாடுகின்றனர். இவ்வாறெல்லாம் கருத்தியல்பற்றி விரிவான விளக்கம்கூறி மார்க்சிய சிந்தனையை வளம்படுத்திய பெருமை அல்தூஸர் என்ற மார்க்சிய அறிஞரையே சாரும்.
அன்னாரின் இறுதிக்காலத்தில் நடைபெற்ற விபத்தான சம்பவம் அவரின் மார்க்சியத்திற்கான பங்களிப்பை எவ்விதமும் பாதிக்கமாட்டாது.
|