தோன்றிப் பின்னரொரு
நாளில்
இறப்பென்றறியா
செஞ்சீனப் பறவையாகிலும்
உயி;ர் பெறும்
ஓசைச் சிறகடிப்பில்
உரம் பெறுக.
என் தோழனே!
உன் உயிர்ப்பு
என் தேசத்தின் தேவையைப் போல்@
நீ வேண்டும்.
எந்த மூலையிடுக்கின்
திக்கு மந்திரம்
காற்றாகி உன் மேனியில்
பட்டுத் தெறிக்கும்
உன் வரவு தேவை.
கல்லறைக் கனல்கூட
சுதந்திரம் உச்சரிக்கும்
எஞ்சிய மண் உக்கா
மூளைப் பிசிர் அறையில்
இன்னும் எழும் உணர்வுகள்.
மீண்டுமொரு முறையாகிலும்
அத்யாவசிய மீட்புயிர்
பெறவேண்டும்.
எத்தனை கழுத்துகளில்
கூர் விழினும்
என் நினைவகலாத் தோழனே!
பின்னரொரு நாளிலாகிலும்
பீனிக்ஸ் உருக்கொண்டு
நீ மீண்டும் அலை.
சாம்பல் மேட்டிடை
ஆயிரம் முறை
அது உயிர்த்தெழும்
ஒரு முறை யேசுவாய்
அல்லவே.
தசாப்தங்களின்
வரலாறு பொய்ப்பிக்கா
அலைச்சலில்
விளாசும் தீப்பிழம்பில்
எரித்தார்ப்பரிக்கும்
கொடுமைகள் அழிந்தொழுகி
உன் காலடி நக்கும்.
அப்போது நீயும் மன்னவன்
நானும்....
ஏதாவது மீளவும்
தோன்றலாம்.
எம் பரம்பரையாவது
மூச்சு விடவும்
வாழ்ந்து மகிழவும்
வேண்டும்.