சாபக்கேடு
இளைய அப்துல்லாஹ்
25.02.99 அதிகாலை 2.03

எரியும் தணலிடையுன்
ஊனுருகிப் போனது
உன் பால் பீச்சி
என் முகம் நிறையும்
உன் சிரிப்பு.

உன் பெரிய முலையிடுக்கில்
முகம் புதைத்தழுவேன்
கோதி மடிமீது
உச்சி மோர்ந்து....
சோர்வென்பது என்னம்மா?

துப்பாக்கி தொட்டிறக்கி
அநீதி பற்றி எப்போதும்
ஓதிக் கொண்டிருப்பாய்....
என்னலைச்சல் மீது
உனக்கும் சுமை.
உன்மீது எனக்குக் கோபமே வராத
அந்த ஒரு மணி நேர இரவில்....

என் வேதனைக்கு
ஈரலிப்பு வந்து விடுகிறது
பொதும்பிய துவாலையின்வழி
உருகி எரியிடை
வளரும் தீயென
உன் பூமுகம்...!

அம்மா!
எப்பிறவியில்
அநியாயம் இழைத்தேன்?
இழிந்து உருக்குலைந்து
சிதிலமாகிப் போன
உன் மார்பையும் முகத்தையும்
உடலையும்

முதலைப்பால இடிமதகினிலிருந்து
அள்ளி அணைத்துக் கொண்டு
கதறி அழுவதான
பொழுதை அடைந்தேன்.
காற்றில் வரும்
துர்வாடை மறந்து....