கந்தகக் குழம்புகள்பட்டு
கால்த் தடங்கள் அழிந்துபோயின
அவர்களின் பாதைகளில்...
கார்த்திகை தீபங்களாய்
எரிந்தவை அவர்களின்
குடில்கள்...
கார்கால முகில் மழைகளுக்கு
பதிலாய் - என்றும்
கரிய அமில வாயு
மழைகள் - அவர்தம்
பூமிதனில்...
ஏர்சாலால் சீராக்கப்பட்டவை
அல்ல அவர்தாம் நிலங்கள்
கூர்மிகு துவக்குக் கத்திகளால்
குதறப்பட்டவை...
கருவேல முட்பட்டு
கந்தலான துணிபோல
தெருவோரம் தெறித்த குண்டுகளில்
கருக்களோடு அழிந்தவர்கள்
அவர்கள்...
ஈழத் தோட்டங்களில்
இன்றும் பூப்பவை
பன்னீர்ப் பூக்களில்லை
கண்ணீர்ப் பூக்களே...
இருபத்திநான்கு கேரட்டில்
இதயம் இனிக்க
நெக்லஸ் அணிந்து
நீளப்புன்னகை செய்கிறோம்
நாம்...
முழந்தாளிட்டு
முதுகுக்குப்பின்னால்
புறங்கை கட்டி
காற்றில்லா டியூப்பில்
பெட்ரோல் உள்ளோடும் நெக்லஸை
கதறக் கதற - கழுத்தின் மீது மாட்டப்பட்டு
நெஞ்சம் எரியச்
சாகிறார்கள்
அவர்கள்...
ஓட்டுக்கள் பெற மட்டும்
வேட்டுக்களால்
அவர்கள் இழந்தவற்றை
பாட்டுகளாக்கிப் படிப்போம்
நாம்...
புலம் பெயர்வுகளால்
புரையோடிய
ரணங்களை குணமாக்கும்
அவர்தம் தாய்மண்...
அவர்களுக்கு என்றைக்கு
கிடைக்கும்...?