தள்ளுபடி புத்தகக் கண்காட்சி

இரா. இரவீந்திரன்

வரிசைக் கிரமமாய்
வர்ணமயமாய்
புத்தம் புதியதாய்
புத்தகங்கள் பல கிடந்தன...
மூளையை மூடிய
நூலாம்படைகளைத்
தூசி தட்டி
தூய்மைப்படுத்தும் புத்தகங்கள்...

கனத்த கண்ணாடியுடன்
கரிய குறுந்தாடியுடன்
நீண்ட தோள்பையுடன்
பொதுவுடைமைவாதிகள்
மார்க்ஸையும், எங்கெல்சையும்
புரட்டிக் கொண்டிருந்தனர்...

நெற்றியில் நீறுடன்
விழிகளில் வழியும்
தெய்வீகத் தன்மையோடு
பகவத் கீதையையும்
பாகவதம், பாசுரம்
விவேகம் ஆனந்தமென
புத்தகங்களை தேடித் திரட்டி
பெற்றனர் சிலர்...

கறுப்புச் சட்டையுடன்
நாத்திகமே நன்மையென
பெரியாரின் பேருண்மைகளை
புரட்டிக் கொண்டிருந்தனர்
சிலர்...

அகிம்சையே அகிலம் உயர
அற்புத வழியென
அண்ணலின் புத்தகங்களை
ஆய்ந்தனர் சிலர்...

ஓஷோவின் காத்திருப்பில்
உருகிப்போய்
நூல்களைப் புரட்டினர் சிலர்...

கபிலர் தொட்டு கல்யாண்ஜீ வரை
கவிதைகளைத் தேடித் தேடிக்
களைத்தனர் பலர்...

மூளையை மூடியிருக்கும்
நூலாம்படைகளைத்
தூசி தட்டி தூய்மைப்படுத்தும்
புத்தகங்கள்...

புரட்டியவற்றையெல்லாம்
தங்களோடு
திரட்டிக் கொண்டே
சென்றனர்...

தேநீர் குவளைகளைக்
கழுவவும்...
நூல்களின் மீது
படியும்
நூலாம் படைகளைத்
தட்டவும்,
துடைக்கவும் செய்யும்
எட்டு வயதுச் சிறுவனை
யாரும் கவனிக்காமல்
ஓ! இதுதான்
தள்ளுபடி
புத்தகக் கண்காட்சியோ...?