அநிஷ்டை
ஏ. எம். ஜாபீர்
அவர்கள் வந்து போனது மனதை நிலைகொள்ளாமல் ஏதோ செய்தது. நேற்று வந்தேன், போனகிழமை வந்தேன் என எத்தனைபேர் வந்து எத்தனை கதை பேசிப்போனார்கள். எல்லாம் சர்வசாதாரணமாய் புராணமாய் புதிய இதிகாசமாய் புதுநானூறாய் சேர்ந்ததுதான். இதற்காகவா நீர்விட்டு வளர்த்தோம்? எதிலும் இருக்கமுடியவில்லை. எந்தப் புத்தகத்தையும் புரட்டமுடியவில்லை. யன்னலுக்கு வந்தேன். பல மாடிகள் முளைத்த புது நகரம். மாடி மொட்டைகள் காடாய்க் கிடக்க நான் ஒரு பொந்துக்குள் தலை நீட்டிக் கிடந்தேன். 14ஆயிரம் மைல்களுக்கப்பால் அல்ல, பல்லாண்டு காலமாய் பயணம் செய்துகொண்டேயிருக்கின்றேனே@ சேர்த்தது என்னதான். எப்படி எல்லாமே மாறிப்போயிற்று. இதற்காகவா உயிர்த்தோம். நாடு கிடைத்தால் போதுமென்று எதையெல்லாம் இழந்தோம். மனிதத்தையும் விடுதலையையும் நேசிப்பையும்.... மனிதன் உயிர்க்கவேண்டுமே. அன்று அப்படி என்னதான் செய்தோம். எதிரியை வீழ்த்த எண்ணி எம்மையே வீழ்த்திக்கொண்டோமே. தப்பு எங்கேதான் நிகழ்ந்தது. பொந்துக்குள் இருந்து வெளியே நழுவி வீழ்ந்தேன்.
----------------------------------------------
எங்கோ ஒரு முனையின் பட்டாம்பூச்சியின் சிறகசைவு எதிர்முனையில் புயலெழுப்பி கடல் பெருக்கி நாடு நகரம் நனைத்ததுபோல் எல்லாம் நடந்தது. அப்படித்தான் பார்த்தாலும் பட்டாம்பூச்சியைவிட மெலிந்த சிறகசைவுதான். ஆயினும் நம்பிக்கையில் எப்படி உயிர்த்துடிப்பாய் இருந்தோம். இளமையும் சத்தியமும் இந்த உலகை அசைக்கவல்ல தெம்பைத்தருவதில் ஆச்சரியமென்ன. திசைகூட எதுவும் தெளிவாக இல்லைத்தான். ஆயினும் என்ன புறப்பட்டாகவேண்டும் என்றிருந்தது. இருத்தலின் நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்தபின்பு வாழ்தலின் அர்த்தம் எதுவுமில்லை யென்றாகிவிட்டது.
கண்ணில்பட்ட துரும்புகூட கதாயுதம்தான். இருப்பைவிட எதிர்ப்பு அச்சம் தருவதாய் இல்லை. நல்லதோ கெட்டதோ நமக்கு முடிந்தது அவ்வளவுதான்.
வீட்டின் கனவுக்கோட்டைகள் எல்லாம் நமது கால்களில் மிதிபட்டன. நட்பும் நம்பிக்கையும் இலட்சியமும் மட்டுமே நமது உலகம்.
ஆயுதம் ஏந்தியபோது யாருக்குத் தெரியும் அரபாத்தையும் நெல்;சனையும். மாக்ஸ், லெனின்கூட நமக்கு எட்டாத புலன்கள்தான். ஒருவேளை ~சே| கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். ஆயினும் நாம் யாரையும் கொடிபிடித்துக்கொள்ளவில்லை. எம்கண்முன்னே கண்டதையும் எதிர்த்ததையும் தவிர வேறு எந்த அறிவுகாட்டியும் நம்முன்னே இல்லை என்றால் யார்தான் நம்புவார்கள்.
வெடித்துக் கிளம்பி பறக்க வெளிக்கிட்டபின்புதான் எல்லாம் வீதிவலம் வந்தன. சிறைக்கம்பிகளில் நாளும் சித்திரவதைப்பட்டு ஊனில் மிதந்தபோதும் நம்பிக்கை தளராதிருந்தோம். நாசம் வரும் என்று எவர் சொன்னார். எங்கோ தொடங்கிய சிறு அசை நுரை அலையாய் அணையாய் வானளாவி வெருண்டு வீறுகொண்டெழுந்து புயலெனக் கிளம்பும் என எவர் கண்டார். அவயவை எம்மையடித்து தும்பாக்கித் துப்பும் என யார்தான் அறிவார். இது பெரும் சுழிதான். மலைமுகடுடைத்து வெடித்துக் கிளம்பி கனன்று கழியும் தீக்குழம்பிற்கும், வீட்டையும் நாட்டையும் மனிதர்களையும் காவிச்சென்று நாடுநாடாக வீசிச் செல்லும் பெரும் புயலுக்கும் மலையாய் முளைத்து மதம்பிடித்தலைந்து சரியும் சமுத்திரத்திற்கும் இடையில் பொறிந்த பெரும் குழி. ஆயினும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். எதிர்நீச்சல்தான். எதுவும் எமது கையில் இல்லையாயினும் எல்லோரும் சரிவாய் நீரோட்டத்தில் கலந்தபின்னும்@ நம்பிக்கைகள் அனைத்தையுமே ஆயுதங்கள் கைப்பற்றின பின்பும்@ துப்பாக்கி நுனியில் உயிர் ஊசலாடும்போதும்@ ஆன்மா அதிகாரத்தை மறுத்துச் சிரிக்கிறது. உயிரோ உடலோ போகட்டும். எம் அநியாயத்திற்கு அடங்கிப்போக எந்த உரிமையும் இல்லாத உந்தல். நிறுத்துவதற்கு காரணகாரியம் தேவையில்லாத உந்தல். எல்லாம் இருந்தும் எதுதான் எமது கையில் இருக்கிறது. கருத்து மனிதனைப்பற்றிக் கொண்டால்.... எல்லாம் வெறும் கதையாய்க் கனவாய்ப் பழங்கதையாய்....
அதிகாரத்தை எதிர்க்கிறபோது ஆயுதத்தையும்தானே எதிர்த்தோம். சாவு எந்த நேரமும் வரலாம்தான். எனினும் எக்கணமும் அது சிந்தையில் இல்லை. ஊசி கிழித்த நகங்கள் கழன்று, குதத்துள் போத்தல்கள் இறுக்கி, உயிர் உறுப்புக்கள் வெந்து வெதும்பி நசிந்தபோதும் நாம் இறக்கவில்லை. ஆயினும் நாம் இறந்தோம். நாட்டைவிட்டுக் கிளம்பும்போது சிறுகச் சிறுக இறந்தேன். எல்லாம் செய்திகளாய், சிவப்பாய், நெருப்பாய் எரிகிறபோதும் தவித்துத் தவித்து இறந்தோம். இந்த இறப்பில் இருத்தல் எவர்க்கும் நியாயமாக இல்லை. எதிரியின் குண்டால், இறந்தால் எல்லோரும் வாழ்வு கொடுத்திருப்பார்கள். சக தோழராய் நிகழ்ந்திருந்தால் பிறப்பே இல்லாது தொலைத்திருப்பார்கள். நியாயம் மனிதத்தில் குந்தியிருந்து நெடுநாளாகிவிட்டது. இப்போதெல்லாம் அது லட்சியத்திலும் இராணுவ வெற்றிகளிலுமே நிலைகொண்டு விட்டது என்பது எவருக்குத்தான் தெரியாது.
-----------------------------------------------
எங்கிருந்து வருகிறேன் என்பது எனக்கும்தான் புரியவில்லை. புறப்பட்டேயாகவேண்டும் என்று நெட்டி நெருடி உத்தியதும் புறப்பட்டதும் புறப்படும்போது பெரிய பள்ளத்தாக்குகளையும் கூரிய நிமிர்ந்த மலைச்சிகரங்களையும் காடுகளையும் கடக்கவேண்டும் என்று நினைத்ததுமட்டும் நினைவிருக்கிறது. மிதிவண்டியில் இயந்திரம்போல் என்கால்கள் இயங்கிக்கொண்டே இருக்கின்றது. எதையும் நினைத்துப் பார்க்க சிந்தையில்லையோ என்னவோ, சிந்திப்பதையே நான் நிறுத்திவிட்டேன். மிதிவண்டி வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. முன்னே பெரு ஏறுமலைதான் விரிந்து கிடக்கிறது. ஆயினும் நான் வேகமாகத்தான் போகிறேன் எந்தக் கவலைகளுமற்று.
கரியரில் சுள்ளிகள் மட்டுமே கட்டியிருந்தேன். வெறும் காய்ந்த, எதற்குமே உதவாத, புகைவதற்கும் சாம்பலாவதற்கும் என்றே விதிக்கப்பட்ட சுள்ளிகள். கனமான பொருள்களாக எனக்குக் கிடைத்த துரும்புகள். அவை தம்பாட்டுக்குப் பின்னே கிடந்தன.
எத்தகைய தடைக்கற்களையும் குழிகளையும் வெட்டியோடும் லாவகம் என் சுட்டுவிரலின் கணப்பொழுது முடிவுகளில் வீரியம் கொண்டு இயங்கியது. தூரம் எதையும் நான் கணக்கெடுக்கவில்லை. காலம்பற்றிக்கூட எனக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. இரவு பகல், காடு வீடு, எதுவும் எம் சிந்தைக்குள் அகப்படாமல்தான் எம் வரலாறு கழிந்துகொண்டேயிருக்கிறது.
இப்போது சுள்ளிகள் எனது மேல் இடுப்பில் முட்டி மோதுகின்றன. சற்றே அண்டி அண்டி முறிந்து இப்போ கீற ஆரம்பித்துவிட்டன. நான் புறப்படுவதாகத் தீர்மானித்தபோதே இவற்றை ஒழுங்காக நகராவண்ணம் எப்படிக் கட்டுவது எனப் பலநாட்கள் வெள்ளிகளைக் கணக்குப்பண்ணியே கட்டினேன். இதைவிட இறுக்கமாக மீளக்கட்ட முடியாதபடி மிகவும் அழுத்தம் திருத்தமான கட்டு.
அந்தக் கட்டில் அசையமுடியாத முக்கியமான இருவிடயங்கள் இருந்தன.
1. அவைகளின் இயற்கையான உணர்ச்சி நரம்புகள், அதிலும் மென்மையான அனைத்து நரம்புகளும்.
2. அவைகள் சிந்திப்பதற்கான அனைத்து அணுக்கள்.
இவை இரண்டில் எதுவும் தன்வயம் இழக்கமுடியாது.
எனக்கு ஒடிந்துவிடாத உறுதிமட்டும் போதும் என்னோடு அவை பயணம் செய்வதற்கு.
ஆயினும் இப்போதென்ன நடந்துவிட்டது. என் முதுகுப்பகுதியைக் கிழிக்கின்றன. எதையும் நான் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. இவைகளில் நான் கவனம் செலுத்தினேனாகின் அது என்னை அவமதிப்பதுபோலாகும். எனது வெள்ளிக் கனாக்கள் அனைத்தும் பொய்த்துப்போவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.
என் சுட்டுவிரலுக்கு அகப்பட்டது எல்லாம் தட்டப்பட்டன. அகப்படாதவை அடங்கிப் போயின.
நான் ஓடிக்கொண்டேயிருந்தேன். இலக்கு ஒன்றைத் தவிர எனக்கு எந்த வெளிச்சவீடும் இல்லை. இலக்கு என்னை எல்லாவிதமாகவும் சூச்சா காட்டிக்கொண்டேயிருக்கட்டும். பெருமலைகளை என்முன்னே சரித்து விழுத்தட்டும். பெரும்புயலைக் கிளப்பி பெரும் புழுதிகள் என்னை மூடட்டும். நான் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது சிறு நகர்வு பெருமலைகளையும் சமுத்திரங்களையும்கூட என்னோடு இழுபட்டுவர வைத்துவிடுகிறது. இந்தப் பலத்தையெல்லாம் அவர்களே தந்தார்கள். நான் எதை எதை எப்படி எப்படி நகர்த்தவேண்டும் என்பதெல்லாம் சிந்திப்பதற்குத்தான் என்னிடம் எதுவும் இல்லையே.
மீண்டும் சுள்ளிகள் கீறுகின்றன. என் விலாவில் விரவி பழுவெல்லாம் வேல்களாய் ஏறுகின்றன. கிழிப்பதை உணரமுடியினும், இவையெல்லாம் வலி தருவனவாய் இல்லை. குருதி கழிவதும் தேகம் நனைவதும் எனது இலக்கை எதுவும் செய்துவிடப்போவதில்லை.
இலக்கு எனது உயிர்ப்பு. எனது இயங்குசக்தி. இன்று இருப்பு எனது வாழ்வு வரலாறு எல்லாம். அதை நான் இறுகப் பற்றியிருக்கும்வரைதான் எல்லாம். நிலங்கள்தோறும் பிணங்கள் பரவிக்கிடப்பினும் அவை எனக்கு உற்சாகத்தை மட்டுமே வழங்கும். குருதிகள் ஆறாய் ஓடுவது எனது விளைச்சலை உத்தரமாக்கும். நிணத்தின் நாற்றம் காதலை மெய்ப்பிக்கும். மிக முக்கியம் இலக்குத்தான்.
என் நெஞ்சத்து ஈரமெல்லாம் மழிக்கப்பட்டு இதயத்தில் சுள்ளிகள் நெருடும்போது, இனியும் பொறுக்கமுடியாது அவற்றைப் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம். (மண்ணாங்கட்டி ஆச்சரியம். ஆச்சரியம் ஒன்றும் எனக்கில்லை. அதெல்லாம் உங்களுக்குத்தான்.) அவையெல்லாம் கைகள். ஒட்ட அறுத்த துண்டிக்கப்பட்ட கைகள். நீண்டு நிமிர்ந்து தினவெடுக்கின்றன. விரல்கள் என் உயிரை அறுக்கும் அதிர்வுகளோடு பறையடிக்கின்றன. நண்டுக்கால்களாய் கரியரில் பிணைந்தபடியே என்னை இறுக்கப்பிணைகின்றன. கட்டை அறுத்து வெளி உலகத்தில் உலாவரத் துடிக்கின்றன. அது அந்தமட்டில்தான் என்றால் அது எனக்கொன்றும் பிரச்சினையில்லை. ஆனால் என் உயிரைக் குடித்து என் இலக்கை.... அதைமட்டும்....
இந்த இடத்தில் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை. பல சாத்தியங்கள் இருப்பதைச் சிந்திப்பதை மறுத்த என் சிந்தை முன்வைக்கிறது@ இலக்கை அழிப்பது அல்லது அவற்றை அபகரிப்பது. ஆனால் சிலர் இப்படியும் ஏற்கனவே இருந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது இலக்குக்கு அப்பாலுக்கும் அப்பால் உள்ள இலக்கை மட்டுமே இலக்காகக் கொள்வது. அதுதான் முடிந்த முடிபான இலக்காம். அந்த இலக்கை எட்டிவிட்டால், இந்த இலக்கெல்லாம் ஒரு இலக்கா என்கிறார்கள்.
எல்லாம் சரியாகவும் இருக்கலாம் அல்லது ஏதாவது சரியாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு மூன்றும் மூன்றும் நாலு, நாலும் நாலும் ஏழு என்ற கணக்கெல்லாம் தெரியாது.
நான் தீர்மானித்த இலக்கு என் நியதிக்குட்பட்டது. என் வாழ்வுக்கும் உட்பட்டது. அவ்வளவுதான். அதற்கு மேல் என்னை ஒன்றும் கேளாதீர்கள். அதை நான் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டேன். அத்தோடு இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு என் ஆட்காட்டிவிரல் சும்மாவும் இருக்காது. அது எதற்கும் எப்போதும் எந்தக்காலத்திற்கேனும் அல்லது எந்தச் சக்கரவர்த்திக்காயினும் ஒரு கணமேனும் நின்று நிதானித்துப் பொறுத்தது கிடையாது.
அந்த ரகசியம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதன் பிறகும் இப்போ என்ன நாசத்துக்கு இந்தக் கைகள் இந்தக் கெம்பு கெம்புகிறது. என்னை மோசமாகத் தாக்க ஆரம்பித்துவிட்டன. சில கைகள்; மிகவும் நீண்டு என் கான்டிலைப் பிடிப்பனவும் சில முன் சில்லுக்குள் தடியோட்டுவனவுமாய் வளர்ந்துவிட்டன.
சரி என்னதான் பண்ணப்போகிறீர்கள்? பார்ப்போம்.
சைக்கிளை விட்டு இறங்கி ஓடினேன். கைகளும் சைக்கிளும் தாமாக என்பின்னே கலைத்துக்கொண்டு வந்தன.
நான் வேகமாக ஓடினேன். பங்கருக்குள் பதுங்கிப் பார்த்து காடு கரம்பை எல்லாம் வெட்டி ஓடினேன். சைக்கிள் என்னைத் துரத்திக்கொண்டே வந்தது. நின்றேன். நிதானமாகத்தான். நெருங்கியதும் உங்களுக்கு என்னதான் வேணும். ஆள்காட்டி விரலினால்தான் கேட்டேன். கைகள் எல்லாம் ஆயிரங்கால் மண்டபத்தைப்போல் என்னைச் சுற்றி ~கவரெ|டுத்து நின்றன.
ஒன்றுமட்டும் உறுதியாக விளங்கியது. அது அவர்களுக்கு விளங்காவிட்டாலும் அவர்கள் என்னைக் கொல்லமுடியாது. என்னைக் கொல்வது அவர்களையும் கொல்வது போலாகும். என் தோளில் இருந்துகொண்டு சொண்டுவிரல்களால் கொத்திக் கொண்டிருக்கும் குருவிகள் இவை என்பதற்குமேல் இவர்களை நான் ஒருபோதும் பெரிதாக நினைத்ததில்லை.
நிற்க! இவை என்னைச் சுற்றிய வலயத்துள் என்றுமே உட்புகமுடியாத கைகள். ஆயினும் எனது ஆரம்பமும் முடிவுமான ஆள்காட்டி விரலின் உச்சவிசையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியேதும் எக்காலத்திலும் எனக்கு இருந்ததில்லை. முடிந்தவரை தொடர்ந்து இயக்கிக் கொண்டேயிருந்தேன். மேலும் மேலும் கைகள் முளைத்தன. சுடலையின் குத்துக்கல்களாய் தேசமெங்கும் காடாய் விரிந்தன. நான் மட்டும் நடுச் சமுத்திரத்தில் தனியனாய் இருந்தேன். என் வலயமும்கூட.
இந்த இக்கட்டான இடத்தில் ஒரு முக்கியமான விடயம் நடந்தது. தூரத்தே மின்னல் விழுந்தது. இடியோசை முழங்கியது. வானமெங்கும் ஊர்திகள் நிறைந்தசைந்தன. புகைகள் பகலை இரவாக்கியது. குண்டுகள் பொழியத் தொடங்கின. ஒரு காலப்பிரளயத்தின் டைனசோர் அழிவுகள் போல் மலைகள் வெடித்துச் சிதறி கைகள் எல்லாம் முறிந்து விழுந்தன. எனது கைகள் பலத்தன. வலயங்கள் பெருத்தன. தாக்குதல்கள். உக்கிரமான பதில் தாக்குதல்கள். முடிவில் அவர்களும் வென்றார்கள். நானும் வென்றேன். இப்போது எனது பலம் பெரிதாக இருந்தது. சமுத்திரங்கள் குளமாகிவிட்டன. ஆயிரங்கால் மண்டபங்கள் அடியோடு சாய்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குத்துக்கல்லாட்டம் இருந்த கைகளைப் பார்த்துக் கேட்டேன்.
இப்போ எல்லோரும் எங்கே போய்விட்டீர்கள்.
அவர்கள் எதுவும் பேசவில்லை. ஒரு கணம் எல்லோரையும் உற்றுப்பார்த்தேன். சிலர் புகலிடங்களிலும், இன்னும் சிலர் என் வலயத்தோடும், வேறுசிலர் மண்ணோடும் வீழ்ந்து கிடந்தனர்.
இப்போது என்னதான் சொல்கிறீர்கள்.
எல்லாம் உண்மைதான்;.
ஆயினும் நீங்கள் சிந்திக்கும் உரிமையையும் மறுத்தீர்கள்.
போராடும் உரிமையையும் மறுத்தீர்கள்.
ஆயினும் போராடினோம்.
மேலிருந்தும் கீழிருந்தும் முன்புறம் இருந்தும் பின்புறம் இருந்தும் பாய்ந்த குண்டுகளால் சாகடிக்கப்பட்டோம். ஆனால் உங்களுக்கு ஒழுங்காகக் குறிபார்த்துச் சுடத்தெரியும் என்பதையும் நாமறிவோம்.
இங்கே பாருங்கள். எனக்கு முக்கியமானது எனது இலக்குத்தான். நீங்களோ, நானோ, எனது வலயங்களோ இல்லை எதிரியோ அன்றி எனது மக்களோ இந்த உலகமோ எனக்கு முக்கியமானதல்ல. ஒரே ஒரு மூலமும் முடிவுமான பொருள் இலக்குத்தான். இந்த இலக்கை எட்டிவிட்டேன் என்றால் எதிரி எதிரியும் இல்லை. உங்களுக்கும் எனக்கும் பிணக்கும் இல்லை.
இது அவர்களுக்குத் திருப்தியானதாக இல்லைத்தான். அவர்கள், 'உங்களதும் எங்களதில் பலரதுமான இலக்கை நீங்கள் நினைத்தவழி அடைவதற்கு விடுதலையும் சுதந்திரமும் மனிதமும் இயற்கையும் எல்லாமுமாய் அழிவது அராஜகமானது இல்லையா? " என்கிறார்கள்.
----------------------------------------------
இருள் என்றும் இல்லாததுபோல் இருள். உலகமெல்லாம் பொட்டம் பொட்டமாக கவிழ்ந்து கறுத்த இருள். நாமோ - யாரோ சூனியம் செய்ததுபோல், இருள், அடர்த்தியாகவும் நீண்டதாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் 1910களிலோ 1940களிலோ இந்த இருள் இவ்வளவு நீண்டதாக இருக்கவில்லை. இந்த மழைகூட அசாதாரணமாய் விரும்பத்தகாத ஒன்றாய், இல்லை, மேலும் வெறுக்கத்தக்கதொன்றாய் குத்தி முறிந்து மாய்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவும் சூனியத்தின் விளைவோ என்னவோ? ஓர் துர்க்குறியின் அடையாளமாகவே படுகிறது.
தப்பு. இதை ஓர் 20வருடங்கள் முன்னே சொல்லியிருக்கலாம்தான். இப்போ அடையாளத்தின் அத்திவாரமும் அஸ்தமனமும் இரண்டாய் கலந்த, இரண்டாய் அழிந்த, இரண்டாய் உயிர்த்த ஒன்றாகிவிட்டது அல்லவா?
இப்படி நான் உணர்வது ஓர் இயற்கையின் விளைவுதானே என்பதற்கு அப்பால் எதையும் எண்ணத்தோன்றவில்லை. ஆயினும் இந்த இருளினுள்ளே சூரியனின் கடாட்சத்தில் கால்களை நீட்டி வைத்துச் செல்பவர்கள் போல் (ஒருவேளை அது எல்லாம் கூட்டித் துடைத்த ஒரு நீண்ட வெளியாகக்கூட இருக்கலாம்) பலரும் செல்வதையும் வீணியாய் நாறி ஒழுகும் மழையில் புதையாது விரைவதையும் பார்க்கும்போது எனக்கு அசாதாரணமாகப்பட்டது. ஆயினும் நான் இப்படி உணர்வதை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தார்களா? இல்லையா? என்பதை என்னால் ஊகிக்கமுடியாவிட்டாலும் அவர்கள் என்னை ஒரு தினுசாக நோக்குவதை நான் உணர்ந்திருக்கின்றேன். எது எப்படித்தான் என்னை இழுத்தடிப்பினும் நான் இவற்றையெல்லாம் எண்ணி ஆச்சரியப்படாததற்கு அவர்களே சூனியக்காரர்கள் என்று எண்ணியது ஒரு காரணமாக இருக்கலாம். (உண்மை என்னவென்றால் இந்தக் கூற்று உண்மையல்லவென்பதுதான். நானும் ஒரு சூனியக்காரன்தான் என்பதை எனது வசதிக்காகவோ அல்லது எனது அதீத தூய்மைவாத துப்பரவற்ற உணர்வாலோ அல்லது நான் மட்டுமே நேர்மையான, துணிச்சல்மிக்க, உத்தமன் என்று உணர்த்தி எல்லோரையும் எனது சக்தியின் கீழ் பணிய வைக்கவேண்டும் என்ற ஒருவகை ஹீரோ உணர்வாலோ மறைத்துவிடுகிறேன். மன்னித்தருள்க!)
....இப்படி நான் எண்ணியதும் அவர்கள் என்னை ஒரு தினுசாகப் பார்த்ததும் - மொத்தத்தில் நான் பேய்பிடித்தவன்போல் ஆகியதில் வியப்பில்லைத்தானே.
இதுநாள்வரை நான் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆகையால் அச்சம் இருந்ததில்லை அல்லது அதிக அச்சமும் இருந்திருக்கலாம். ஆயினும் எல்லா வகையிலும் நிலைமை இப்போ மாறிக்கொண்டு வருகிறது. முன்னரெல்லாம் இருள் இருளே என்றும் வீணிமழை என்றும் விலாவாரியாய் ஒப்பாரி நீட்டியவர்கள்கூட சூரிய கடாட்சம் பெற்றுவருவதையும் மேலும் வேகமாக விரைவதையும் பார்க்கமுடிகிறது. ஆச்சரியம்தான் என்று இல்லாவிட்டாலும் அச்சமல்லவா தருகிறது.
காவிப் போர்வைக்கும் கறைபட்ட போர்வைக்கும் வேறுபாடற்று இருளில் மறைந்து கிடப்பது அச்சத்திற்குரிய விடயமல்லவா.
----------------------------------------------
அவர்கள் மீண்டும் வந்தார்கள். மேலும் ஆயிரம் கதைகள் சொன்னார்கள். முடிவில் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்கள். இனியும் பொறுக்கமுடியாது என்றேன். ஆமாம்! எங்களுக்கும் அப்படித்தான் என்றார்கள். என்ன செய்யலாம் என அவர்களை நோக்கி நிமிர்ந்தேன். அவர்களோ ஜாக்கெற்றுக்குள் இருந்து மிக இலகுவாகவே அதிகாரத்தைக் கையில் எடுத்தார்கள். நான் மண்டியிட்டு வீழ்ந்தேன்.
|