கஸ்டானியா மனிதன்

நா. கண்ணன்

வானம் பற்றி எரிவதுபோல் தோன்றியது. உதிர்காலச் செம்மை ஆடிக்கொண்டிருந்தது. கொற்றவையின் நர்த்தனம்போல். சிவப்பு, மஞ்சள், ரோசா இப்படி வண்ணஆடை கட்டிய கொற்றவையின் நடனம்போல், உதிர்கால மரங்கள் ஆடிக்கொண்டு இருந்தன. வாசலில் நின்றிருந்த காரின்மீது மஞ்சள் மழை பெய்ததுபோல் இலைகள். வாரக்கடைசி நாட்கள். தெரு பெருக்கப்படாமல் இலைகளின் கூத்தாட்டத்திற்கு மேடைகட்டியதுபோல் கிடந்தது. காற்றின் சுழற்சியில் இலைகள் மேலே பறந்தன.

வீட்டின் பின்புறமாகப் பார்த்தால் கஸ்டானியா மரம் கனிந்து கர்ப்பஸ்தீரிபோல் நிற்பது தெரியும். கர்ப்பமுற்றவள் நடக்கமுடியாமல் அசைவதுபோல் இம்மரமும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. இலைகளின் ஆட்டத்திற்கு ஈடுகொடுப்பதுபோல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. புசுபுசுவென்ற அணில். இவ்வளவு பெரிய அணிலை நான் முன்பின் பார்த்ததில்லை. சோவியத் சிவப்பு. அது அடிக்கொருதரம் ஓடிவந்து கஸ்டானியா கொட்டைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தது. புத்திசாலி அணில், வரப்போகின்ற பனி காலத்தை எதிர்நோக்கி இப்போதே கொழுப்பு புரதம் நிரம்பிய கொட்டைகளை சேகரித்து வைத்துக்கொள்கிறது. அதற்கும் குழந்தை குட்டிகள் இருக்கும்தானே!

இந்த சிவப்பு அணில் வராதபோது அவன் கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்தான்; பரட்டைத்தலை. தலை வாருவதை மறந்திருப்பான் போலிருக்கிறது. அழுக்கான கால் சராய். மேல்கோட்டு லேசாக கிழிந்திருந்தது. கஸ்டானியா கொட்டைகளைப் பொறுக்கி கோட்டுப் பைக்குள் போட்டுக்கொண்டான். வீட்டின் கண்ணாடி சன்னலில் இருந்து பார்த்தால் எல்லாம் தெரிகிறது. இவனை எனக்குத் தெரியும். சனிக்கிழமை சாமான் வாங்கப்போகும்போது, இருண்ட கார்கள் நிற்கும் பாதாள அறை ஓரத்தில், மூத்திர நாற்றத்தில் புகைபிடித்துக்கொண்டு நிற்பான். கையில் எப்போதும் ஒரு பியர் டின் இருக்கும். சோகை பிடித்த கன்னத்தின் வழியே புன்னகை தருவான். பியர் வாங்கக் காசு இல்லாதபோது காரை நிறுத்திவிட்டு வரும் என்னிடம் காசு கேட்பான். ஒன்றோ, இரண்டோ அவன் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து கிடைக்கும். மறக்காமல் நன்றி சொல்வான். அவன் முரட்டு நாயை ஒதுங்கி இருக்க கட்டளையிடுவான்.

இவன் பொழப்பே பிச்சை எடுக்கும்போது அவன் நாய் வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கும். சும்மா, சோணி நாயல்ல. நன்கு வளர்ந்து திடகாத்திரமாக இருக்கும் நாய். அந்த நாயிற்கும் சேர்த்து பிச்சை எடுக்கிறானோ என்னவோ. நாய் அவனுக்கு நன்றியுடன் இருக்கிறது. இவன் நமக்கு நன்றியுடன் இருக்கிறான். இரண்டுமே நன்றியுள்ள ஜீவன்கள்தான். சில நேரங்களில் பளபளக்கும் லெதர் பேண்ட்டும், பெரிய வெள்ளி முத்திரைகொண்ட பெல்ட்டும் அணிந்த பெரு முலைப்பெண் அவனுடன் நிற்பது உண்டு. அவளிடமும் ஒரு நாய் உண்டு. இந்த நாய் இருப்பது அவர்களுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுக்கவேண்டும். இல்லையெனில் உள்ள சம்பாத்தியத்தின் (அது என்ன?) கால் பங்கு நாய் வளர்க்கக் கொடுக்கமுடியுமோ? முடிகிறது இந்த தெருவோர ஜேர்மானியர்களால்.

இதில் பணக்கார ஜெர்மானியனுக்கும் ஏழை ஜெர்மானியனுக்கும் வித்தியாசமில்லை. நாய் ஒரு அந்தஸ்து. காசு உள்ளவனிடம் ஒரு மெர்சிடஸ் கார் இருக்கும். அதில் ஒரு நகக்கீறல் கூட இல்லாமல் பளபளக்கும். நல்ல உயர்ஜாதி நாய் இருக்கும். சிலநேரங்களில் மனைவி இருப்பாள். எப்போதாவது குழந்தை இருக்கும். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஒரு பெரிய போஸ்டர் சொல்கிறது, உங்கள் நாயைவிட குழந்தை முக்கியமில்லையா? குழந்தைகளுக்கான நேரத்தைக் கொடுங்கள் என்று. பலர் நினைக்கிறார்கள் பொஞ்சாதி பிள்ளைகளைவிட நாய் நன்றி உடையது என்று.

அதனால்தான் அவனிடமும், அவளிடமும் நாய் இருந்தது. சில நேரங்களில் நாய்கள் சண்டை போடும். நாய்களை வைத்து இவர்கள் சண்டை போடுவர். போவோர் வருவோர் மரியாதையாக விலகி நடப்பர்;. நாய்களினால் மரியாதையும் வருகிறது அவர்களுக்கு.

கஸ்டானியா கொட்டைகளை மாலையில் பியர் குடித்து வறுத்துத் தின்பான். அப்போது அந்த புகையும் மணமும் காற்றுடன் கலக்கும்.
இலைகள் உதிர்ந்து, மழையில் மக்கி, பனிக்காலமும் வந்துவிட்டது. பனிக்காலம் பெரிய தொல்லை பிடித்த காலம். கழுத்தில் ஒன்று, காதில் ஒன்று, தலையில் ஒன்று, உடம்பில் ஒன்று என பல வகையான உடைகளை அணிந்து, கை மரத்துப் போகாமல் உறைபோட்டு, காலில் தடிப்பான பூட்ஸ் போட்டு இராணுவ வீரன் போல் தினம், தினம் நடக்கவேண்டும். இத்தனை கனத்தையும் சுமந்ததால் மாலையில் உடல் வலிக்கும். சூடான நீரில் சுகமாய் குளித்தால்தான் அலுப்பு நீங்கும். காரில் அமர்ந்து, கார் சூடாவதற்குள் உடல் விறைத்துவிடும்.

பனிபெய்த ஒரு நாள், இப்படி காரில் பயணித்து வேலைக்கு வந்தபோது கார்கள் நிறுத்தும் அடிப்பகுதியில் அவனைப் பார்த்தேன். கடற்கரை பார்த்து இருக்கும் அப்பெரிய கட்டிடத்தின் அடிப்பகுதி. கடல்காற்று உள்ளே பரவி குளிரை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. கொஞ்சம் பாதுகாப்பான மூலையில் அவன் அடுப்பை மூட்டி சமையல் செய்து கொண்டிருந்தான். அவனது பெண் துணையும், நாய்களும், வேறொருவனும் கூட இருந்தனர். எல்லோரும் சேர்ந்து பலமாக பேசிக்கொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தனர்.

நான் அவர்களைப் பார்த்தவாறே அலுவலகத்திற்கு இட்டுச் செல்லும் மின் உந்து அறையில் (லிப்ட்) ஏறினேன். தொடர்ந்து பல உயர் அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏறினர். பலர் தங்கள் கோட்டில் கஸ்டானியா மனிதனின் சமையல் வாசனை ஒட்டிக்கொண்டு இருப்பதாக முகம் சுளித்தனர். சிலர், எப்படி சத்தமாக சமூக ஒழுங்கு இன்றி பேசிக் கொள்கின்றனர் என்றனர். சிலர் இந்த வீடற்ற கபோதிகள் இங்கு ஏன் வந்தனர் என்றனர். நம் வரிப்பணத்தில் இவர்களுக்கு மாசக்காசு கொடுத்து, தேவாலயங்களில் உணவு கொடுத்து, இருக்க இடம் கொடுத்தால் கூட வெளியேதான் வாழ்வேன் என்று சொல்லும் இவர்கள் பிடிவாதத்தைப் (சுதந்திரத்தை அல்ல) பற்றி பேசினார்.
இப்படியாக பல பேசி சூடுபடுத்தப்பட்ட அறைகளில் அவரவர் நுழைந்தனர்.

காபி குடிக்கும் இடைவேளை நேரத்தில் வெளியே பார்த்ததில் பனி ஏகமாய் பெய்துகொண்டு இருந்தது. கார்கள் ஆமைவேகத்தில் நகர்ந்துகொண்டு இருந்தன. காற்று வீசி குளிரை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. மாலையில் வேலைமுடிந்து வெளியே பார்த்தபோது வானம் கருத்திருந்தது. கார்களின் போக்குவரத்து சுத்தமாய் ஸ்தம்பித்துப் போயிருந்தது. சக அலுவலர்கள் இச்சேதியை முன் அறிந்து வெளியேறி இருந்தனர்.

நான் கடைசியாக வெளியேறி காரை எடுக்க வந்தபோது பளிச் பளிச்சென்று விளக்கொளியுடன் ஆம்புலன்ஸ் கார் அங்கு நின்றிருந்தது. கஸ்டானியா மனிதன் கட்டைபோல் கிடந்தான். அவனை ஏற்றிக்கொண்டு போனபின் நான் அவனை மீண்டும் பார்க்கமுடியவில்லை.
அடுத்த வருடத்தில், இவர்கள் தற்காலிகமாய் குளிர்காலத்தில் ஒண்டிய இடத்தில் சைக்கிள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு நிறைய சைக்கிள்கள் நின்றன.