மனிதநேயம்

கு.ரா.

மனிதம்
மனிதனின் அடையாளம்.
மனிதம்
மனிதனின் தலைமைப்பண்பு@
தாய்மைப் பண்பு.

மனிதம்
மனிதனின் குறியீடு.

மனிதம் மட்டுமே
மனிதர்களை மகாத்மாவாக்கும்.

மண்ணின் ஈரமும்
மனிதனின் மனிதமும்
உருவம் காட்டாதவை எனினும்
உயிரோட்டச் சுழற்சியின் மையம்.

குருதியில்
சிவப்பணுக்களும், வெள்ளையணுக்களும்
உண்டு என்பதை
அறிவியல் உரைக்கும்
கூடவே
இரக்க அணுக்களும் இருக்கட்டும் என
மனிதம் விரும்பும்.

ஆயினும்
மனிதனே நீ ஏன் இன்னமும்
ஆயுதங்களுடன் அலைகிறாய்.

உன் வேட்டையாடல்
விலங்குகளிடமிருந்து மனிதருக்கு
மாறிய தெப்படி.
உன் கத்திகளைத் தீட்டுவது
மனித உடலிலா.

மண் உன்னிடம்
மனித இரத்தத்தையா
யாசகம் கேட்டது.

நீ
குடிசைகளைக் கொளுத்தி
போகி கொண்டாடுகின்றாய்.
குழந்தைகளைப் பலியிட்டு
குலதெய்வங்களைக் கும்பிடுகிறாய்.

பூஞ்சோலைக்குள் நுழையும்போது
உன்னிடம் எதற்கு
இத்தனை வெடிகுண்டுகள்.
அழுகுரல்களைக் கேட்பதில்
உனக்கென்ன
அத்தனை ஆனந்தம்.

உன் வெறிகொண்ட ஓட்டத்தை
தடகளத்தில் காட்டியிருந்தால்
தங்கம் கிடைத்திருக்கும்.
நீ ஏன்
அழிவுக் கோட்டைத் தொட
இப்படி ஓடுகிறாய்.

உன் வருங்காலத் தலைமுறைக்கு
அழிந்துபோன சின்னங்களை
அடையாளம் காட்டாமல்
ஆக்கங்களைக் காட்டு.

பசுமை இழந்த தாவரமும்
மனிதம் இழந்த மனிதனும்
இறப்பினும், இருப்பினும்
ஒன்றுதான் என்பதை
உணர்ந்து உள்வாங்கு.

மனிதனே நமக்கு
சிலுவைகளையும் விடவும்
மரங்கள் முக்கியம்.
பிறையை விடவும்
வானம் முக்கியம்.
திருநீற்றை விடவும்
காற்று முக்கியம்
எல்லாவற்றை விடவும்
மனிதர்கள் முக்கியம்.