தஞ்சம் தாருங்கோ
நிருபா
எங்களப்பற்றி நீங்கள் நிறையக் கேள்விப்பட்டிருப்பியள். எங்களுக்கெண்டு ஒரு நாடு இல்ல. வீடுவாசலும் இல்ல. சில நேரங்களில சொந்தமா பெயர்கூட இருக்காது.
நாங்கள் உள்நாட்டுக்குள்ள ஓடி ஓடி ஓய்ஞ்சு போனம்;. ஏலாத நிலயிலதான் உங்களத்தேடி வர வெளிக்கிட்டம்.
எங்களுக்கெண்டு இருக்கிறதெல்லாம் சின்னச் சின்ன ஆசையள்தான். ரண்டு அல்லது மூண்டு வேள சாப்பாடு. தண்ணி. இருக்க இடம். பாதுகாப்பு. ஏன் உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்த ஆசையள் இல்லையோ? நீங்கள் வெளிக்கிட்டு பத்துப் பதினைஞ்சு வரியங்கள். பயமெண்டா உங்களுக்கு என்னெண்டு தெரியுமோ? ஓமோம். எங்களப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பியள். பெருங்கதையள். குட்டிக் கதையள். கொறில்லாக் கதையள்;. சோகக் கதையள்....
கொஞ்சம் பொறுங்கோ. இப்ப கதவத் திறக்கிறது ஆர்? அந்தத் தடியனாத்தான் இருக்கவேணும். நினைச்சு முடிக்கிறத்துக்குள்ள வந்து நிக்கிறான். அவன்ர சப்பாத்து, துடையள், முகம், கையள், அதில தொங்கிற விரல்கள் எல்லாம் மொத்தம் மொத்தமா பெரிசா இருக்குது. இவன்ர மூஞ்சிக்கு சிரிப்புக் கொஞ்சம் வாங்கி ஒட்டினாலும் நிற்காது. களண்டு விழுந்திடும்.
ஒரு சின்னச் சிறையெண்டாலும் அது இப்ப எங்களுக்குச் சொந்தமானதுதான். உள்ள வரேக்க கதவத் தட்டிற்று வரலாம்தானே. நாங்கள் அரைகுறையா படுத்திருப்பம். கக்கூசுக்குப் போவம். உடுப்பக் களட்டிவிட்டு முதுகு சொறிஞ்சுகொண்டிருப்பம். பேனெடுத்துக் குத்திக் கொண்டிருப்பம்.
அடிக்கடி வாறாங்கள். போறாங்கள். எங்கட கையைப் பிடிச்சுப் பாக்கிறாங்கள். கொழும்பில நாங்கள் லொட்சிலை தங்கியிருக்கேக்க அங்கயிருந்த அரவிந்தன் அண்ணா, கண்ணன் அண்ணை, ஜீவன் எல்லாரும் எவ்வளவு மரியாதயா எங்களோடை நடந்தவ. றூம் கதவில தட்டிற்றுத்தான் உள்ள வருவினம்.
பின்னேரத்தில வட அல்லது உறைப்பு ரொட்டி. இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம், புட்டு அவயள்தான் போய் வாங்கிக்கொண்டு வருவினம். பின்னேரங்களில் எல்லாரும் ஒண்டுகூடி முஸ்பாத்திதான்;. முன்வளவில இருக்கிற தென்னமரத்துக்குக் கீழ பெரிய கல்லொண்டு இருக்கு. அதிலதான் சந்திக்கிறது. ஒரே ஊர்க்கதையள்தான்;. அநேகமா பள்ளிக்கூடம். பிறகு இயக்கம். ஆர் ஆர் செத்துப்போனது. ஆற்ற வீடுகள் உடைஞ்சது. வங்கர் கதையள் நிறைய.
ஜீவன் மட்டும் நிறையக் கதைக்கமாட்டான். அவன்ர காதல் கடிதத்தப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வந்துது.
'உங்களிலும் எனக்கு வயசு குறையவெண்டு பாக்கிறியளோ?"
'இல்லை ஜீவன். எனக்கு ஜேர்மனில பேசித்தான், இப்ப அவரிட்ட போக நிக்கிறன் எண்டு உமக்குத் தெரியும்தானே."
கொஞ்சநாளா தென்ன மரத்த சந்திக்கவோ கல்லோட கதக்கவோ ஜீவன் வாறேல்ல.
மின்ஸ்க்கில இருந்த தமிழ்ப்பெடியள் தறுதலையள். எல்லோருக்கும் ஒரே ஒரு அறைதான். ஒழுங்கா நித்திரை கொள்ள ஏலாது. சட்ட மாத்தேலாது. முதுகு சொறியேலாது. இதுக்கெண்டே இலங்கயில இருந்து வெளிக்கிட்டு வந்தமாதிரி இன்னும் நிக்குதுகள் கொஞ்சப்பேர்.
ஒருநாள் நல்ல நித்திர. ஏதோ கனவிலதான் நடக்குது எண்டு முதல் நினைச்சன். எழும்பிப் பாத்தா தறுதல ஒண்டு தடவிக்கொண்டு இருக்குது.
'என்ன வேல செய்யிறீர். நீர் நினைக்கிறமாதிரிப் பொம்பிள இல்ல நான்"
'இங்க இதெல்லாம் சகயம் அக்கா. நீங்கள் கண்டும் காணாதமாதிரி இருக்கிறது நல்லது."
'கப்பல் ஏறி வந்தாப்பிறகு எங்களுக்கு கலாச்சாரம், மானம் ஒண்டும் இல்லையெண்டு நினைச்சிட்டியளோ?"
'கற்புக் கிற்பெல்லாத்தையும் அங்க இலங்கயோட வைச்சுக் கொள்ளுங்கோ. சும்மா நடிக்காதையுங்கோடி"
மிச்ச எல்லா ஆம்பிளையளும் பாத்துக்கொண்டிருக்கினம். ஒருத்தரும் வாய்திறந்து கதைக்கினம் இல்லை. இவனுக்கு இவள் ஓமெண்டா நாங்களும் தேச்சுப் பாக்கலாம் எண்ட மாதிரி ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாங்கள். உங்களுக்குத் தேவையெண்டா சுவரோட போய்த் தேயுங்கோடா.
என்ர பாஸ்போட் துலைஞ்சு போச்சுதாம். ஏன் பாஸ்போட் துலைஞ்சது எண்டு எனக்கெல்லோ தெரியம். அவனுக்குப் பெயர் குணசீலன். கோதாரில போவான். ஏஜென்சிகாரங்களெண்டா இவ்வளவு கெட்டவங்களெண்டு நானெண்டா நினைச்சே பாக்கேல்ல. பொம்பிள எண்டு பரிதாபம் பாத்துத்தான் இவ்வளவு ஆம்பிளயளோடையும் தனியத் தங்கவிடாமல் தன்ர வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறான் எண்டு முதல்ல நினைச்சன். படுக்கிறதத்தவிர ஆம்பிளயளின்ர தலேக்குள்ள வேற ஒண்டும் இல்லையே? யோசிச்சுப் பாக்கவே அரியண்டமாக் கிடக்குது. இப்ப பாஸ்போட் துலைஞ்சு போச்சுதாம். அவன் பாஸ்போட்ட தேடி எடுக்கிறதுக்குள்ள நானே துலைஞ்சுபோவன்போல.
எங்கேயோ தொடங்கி எங்கேயோ வந்திட்டனாக்கும். பொலிஸ் தடியன் இன்னும் நிக்கிறான். அவன் ஜேர்மனில கதச்சா எங்களுக்கு விளங்குமே? இவன் அறுப்பானுக்கு இங்கிலீசும் ஒழுங்காத் தெரியாது. தடக்கித் தடக்கி நம்பருகளை மட்டும் சொல்றான். நம்பர் 75 நானில்ல. சுமதி உள்ளங்கையைப் பிரட்டிக்காட்ட தலய சூரன் ஆட்டிறமாதிரி ஆட்டிற்று அவளின்ர கைய இழுத்துக்கொண்டு போறான்.
காலம எட்டுமணிக்கே வந்திட்டாங்கள். ஒரு தமிழரும் வந்தார். அவன் தடியன் சொன்னத அவர் தமிழில சொன்னார். ஒவ்வொருத்தரா கூப்பிட்டு விசாரிக்கப்போயினமாம். தமிழருக்கும் சிரிப்பு கொஞ்சம் வாங்கித்தான் ஒட்டவேணும்.
பொலிசுக்காரன்-எங்களில ஒருத்தி-மொழிபெயர்ப்பாளன்
'எந்த நாட்டுக்குள்ளால வந்தனியள்?"
'தெரியாது"
'உங்கட பாஸ்போட் எங்க?"
'ஏஜென்ஸி பறிச்சுப்போட்டார்"
நீங்கள் ஆறு பொம்பிளையள் ஒரேயடியா வந்திருக்கிறியள். ஏதேன் இயக்கத்தைச் சேர்ந்தனியளோ?"
'இல்ல. இயக்கம் எண்டால் எங்களுக்குப் பயம். ஆமிக்கும் பயம். வீடெல்லாம் உடைச்சுப் போட்டினம். நான் நிறையநாள் ஜெயிலுக்குள்ள இருந்தனான். அங்க பொம்பிளயளயும் பலாத்காரம் செய்யினம். எங்கட உயிருக்கு ஆபத்து. அதுதான் வந்தனாங்கள்"
'நான் கேக்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாக் காணும். இப்ப நான் ஐந்து படங்களைக் காட்டுவன். அதில உங்கட ஏஜன்ற் இருக்கிறாரோ எண்டு சொல்லவேணும்"
எங்களபற்றி உங்களுக்கு என்னதான் தெரியும்? எங்களுக்குச் சொந்தமில்லாத நாடுகள் நிறைய. எங்கள நாடோடிகள் எண்டும் சொல்லலாமோ? நாங்கள் பண்டங்கள்மாதிரி. பண்டங்களையும், பணங்களையும் ஏஜென்ஸிட்ட குடுப்பினம். ஏஜென்ஸி பணத்த கொழும்பில வச்சுக்கொண்டு எங்கள அடியாக்களிட்ட மாத்தி மாத்தி குடுப்பினம். வெள்ளக்காரன்கள், கறுப்புக்காரன்கள், தமிழ்காரன்கள், சிங்களகாரன்கள், வங்காளகாரன்கள்....
அண்ணாக்களின்ர சிநேகிதர்மார் வீட்டுக்கு வந்திருந்தால் தேத்தண்ணி கொண்டுபோய்க் குடுக்கவே கை நடுங்கும் எங்களுக்கு. சின்னச் சின்னக் கிராமங்களில இருந்து நகரமே தெரியாமல் வளந்தனாங்கள். இப்ப கொழும்பு லொஜ்சுகள், பாங்கொக், மொஸ்கோ விமான நிலையங்கள், போலந்து காடுகள், நதிகள், ஐரோப்பாவின்ர சிறையள் எல்லாத்துக்கும் எங்கட கதயள் தெரியும். எங்களுக்கெண்டு ஒரு சொந்தவீடு இருக்கவேணுமெண்டு ஆசைப்பட்டம். எங்களுக்கெண்டு இருந்த ஒரே ஒரு சொத்தான சொந்தங்கள்கூட இப்ப இல்ல.
கொஞ்சம் பொறுங்கோ. எனக்கு சரியா தலைய சுத்துது. களைக்குது. ஒழுங்கா சாப்பிட்டு எத்தினை நாளாச்சு? மத்தியானம் ரண்டு துண்டு பாண். ஒரு சின்னப் பால்பெட்டி. தேத்தண்ணி தேத்தண்ணி எண்டு சொல்லிப் பாத்தம். பச்சத்தண்ணி கூட இல்ல. உடம்பெல்லாம் சரியாக் குளிருது. போர்வகூட இல்ல. நாங்கள் ராத்திரி பிடிபடேக்க வெளியால சரியான சினோ.
எங்களில ஒருத்தி-பொலிசுக்காரன்-மொழிபெயர்ப்பாளன்
'ஏன் நடுங்கிக்கொண்டு இருக்கிறியள்; உண்மையைச் சொல்லீட்டிங்களெண்டா பிரச்சினை இல்ல"
'குளிருது. சப்பாத்து இல்ல. சொக்சுகள்கூட ஈரமாப் போச்சு"
'எங்க சப்பாத்து"
'ஏஜென்ஸி களட்டி எறியச் சொல்ல ஒரு காட்டுக்குள்ள எறிஞ்சிட்டம்"
'அது எந்த நாடு எண்டு தெரியுமோ?"
'தெரியாது"
'எங்கள விசரர் எண்டு மட்டும் நினைக்கவேண்டாம். ஏன் தெரியாது. பயணம் செய்யேக்கை எந்த நாட்டுக்குப் போறம். எதால போறம் எண்டு அறிஞ்சு வச்சிருக்கிறேல்லயா?"
'எங்கட ஏஜென்ஸியோட அப்பிடியெல்லாம் கதைக்கேலாது. பெடியள் கொஞ்சப்பேர் கேட்டதுக்கு அடிச்சுப் போட்டினம்."
'நீங்கள் பிடிபடுறத்துக்கு முதல் ஒரு வாகனத்தில வந்துதான் இறங்கியிருக்கிறியள். அது என்ன வாகனம்? அதை ஓட்டி வந்தது ஆர்? எண்டு சொல்லமுடியுமோ"
'அது ஒரு கார். வெள்ளைக்காரர்தான் ஓட்டி வந்தவர்"
'அது ரக்ஸியோ? காரோ? என்ன நிறம்?"
'தெரியாது"
எங்களபற்றி நாளுக்கு நாள் கேள்விப்படுறியலெல்லே? நாங்கள் வாறவழியளிலயே செத்துப் போறம். வந்து சேர்ந்தாலும் திருப்பி அனுப்புறாங்கள். பொலிசுக்காரர் மட்டுமில்ல@ எங்கட மாப்பிளமாரும்தான்;. ஏதோ வாற வழியளில துலைஞ்சு போச்சுதாம். எனக்கு மறதி நிறைய. துலைஞ்சு போறதின்ர முதல் எழுத்து ஏதோ ~க|விலை தொடங்குது. மாதக்கணக்கா காடுகளிலயும் சின்னச் சின்ன அறையளிலையும் கிடந்து வேதனைப்படுறம். இதுகள் எல்லாம் என்னத்துக்காக?
நீங்கள் வந்து பதினைஞ்சு வரியங்கள். எங்களுக்காக என்ன செய்தியள்? ஒரு ஊர்வலம் வச்சியளோ? பொலிசுக்காரரோடை சண்டை போட்டனியளோ? உங்கட சோசல்காசு கிடைக்காமல் போனாலுமெண்டு அரசாங்கத்த எதிர்க்க மாட்டியள்.
தடியன் பொலிசுக்காரன் திரும்பவும் வந்திட்டான். இப்ப இவன் சொன்னது என்ர நம்பர். எட்டாம் நம்பர் எனக்குப் பொருத்தமே இல்ல. நான் கையக் காட்டினன். அவன் இறுக்கிப் பிடிச்சான். கைய இல்ல.தோள. இவன்ர பிடியில இருந்து தப்ப ஏலாது. இவன நான் எதிர்க்கவும் ஏலாது. பிறகு தஞ்சம் தரமாட்டாங்களெல்லே. நாங்கள் பதினொரு மாதங்களா எத்தனை கஸ்டப்பட்டம். அதுக்கெல்லாம் இனி விடிவு கிடைக்குமே? அவன்ர சப்பாத்து தொப் தொப் எண்டு கேக்குது. நான் முன்னுக்கு ஒரு கோழிக்குஞ்சுமாதிரி நடக்கிறன்.
பொலிசுக்காரன்-எங்களிலை ஒருத்தியாகியநான்- மொழிபெயர்ப்பாளன்
------------------------------------------------------------------------
'எங்கட உயிருக்கு ஆபத்து. திருப்பி அனுப்பினா கொல்லிப் போடுவினம். என்ர அண்ணர் ஒருத்தர் இன்னும் ஜெயிலுக்க இருக்கிறார். தம்பி புலியள் பிடிச்சுக்கொண்டு போட்டினம். எனக்குத் தஞ்சம் தாருங்கோ. திருப்பி அனுப்பிப் போடாதயுங்கோ."
'நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் சொல்லவேணும். நீங்கள் போலந்துக்குள்ளாலைதான் வந்தனியள் எண்டு எங்களுக்குத் தெரியும். அதனால அங்க எத்தன நாள் நிண்டனியள் எண்டு சொல்லுங்கோ"
'நாங்கள் மொஸ்கோவில இறங்கினதுதான் தெரியும். பிறகு எந்த நாடுகளில நிண்டனாங்கள் எண்டு தெரியாது."
'நீங்கள் உண்மையைச் சொல்லிட்டால் எல்லாருக்கும் இலகுவாக இருக்கும்"
'எனக்கு ஒண்டும் தெரியாது. நான் இவ்வளவு நேரமும் சொன்னது உண்மைதான்.. எங்கட உயிருக்கு ஆபத்து திருப்பி மட்டும் அனுப்பவேண்டாம்"
------------------------------------------------------------------------
எங்களப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும்தானே. எனக்குத் தலையெல்லாம் சுத்துது. எந்தக் காடு எண்டு தெரியாது. நாங்கள் நடந்து கொண்டிருக்கிறம். சுமதிக்குப் பொக்கிளிப்பான். நேற்று அவள் திடீரெண்டு மயங்கி விழுந்திட்டாள். பிறகு எழும்பவேயில்லை. அவள விட்டிட்டுத்தான் போறம். ஏஜென்ஸிய நாங்கள் இனி எங்க கண்டு பிடிக்கிறது?
பி.கு.
நீங்கள் இதுவர காலமும் என்ன செய்தியள் எண்டு எனக்குத் தெரியாது. சிலநேரம் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதியிருப்பியள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கூட்டம் வச்சிருப்பியள்.
உங்களுக்குத்தான் நேரம் போறது தெரியாதே. கள்ளுக்குடிக்கிறவங்கதான் சில விசயங்கள கதைக்கலாமெண்டு அடிபட்டுக்கொண்டும், விமரிசனங்களுக்கெல்லாம் எப்பிடி சாட்டையடி போடலாம் எண்டு பக்கங்கள கிழிச்செறிஞ்சுகொண்டும், உங்கட கண்ண நீங்களே தோண்டி எடுத்திட்டு அதுக்குப் பிறகும் நவீனமா பாக்கலாம் எண்டு நம்பிக்கொண்டும் இன்னும் இன்னும்....
ஒண்டு சொல்லுறன் கேளுங்கோ.
ஒவ்வொருத்தரும் உங்கட உங்கட வீடுகளில ஒவ்வொரு மெழுகுவர்த்தி கொழுத்தி வையுங்கோ (சுரனநைள சுநளவந சுயஅpந எண்டு ஒரு கட இருக்கு. அங்க பெரிய அழகானதுகள் நல்ல மலிவில வேண்டலாம். இது ஜேர்மனியில இருக்கிற ஆக்களுக்கு மட்டும்தான். ஒவ்வொரு நாடுகளிலையும் உப்பிடி வேற பேரில இருக்கும்)
மெழுகுவர்த்தி இந்த வின்ரர் நேரத்தில சழஅயவெiஉ ஆக இருக்கும். அதுக்குப் பிறகு அது கொஞ்சம் கொஞ்சமா உருகிறத பார்த்து ரசியுங்கோ. ஏலாட்டி அழுங்கோ. இது முதலக்கண்ணீர் இல்லையெண்டு விவாதிக்கலாம். எழுதலாம். கடைசியா மெழுகுவர்த்தி செத்துப் போச்சுது எண்டு கண்ணீர் அஞ்சலி அடிச்சு வெளியிடுங்கோ சிறப்பா இருக்கும்.
|