1. எங்க ஜனங்க
பசியாலே செத்தவங்க பட்டக்கல்லு சொமந்தவங்க
ஒதபட்டுச் சுருண்டவங்க எங்க ஜனங்க
கையகால புடிக்கிறவங்க கைகட்டி நடக்கிறவங்க
பக்தருப்பா பக்தருங்க எங்க ஜனங்க
கலப்பையோட்டி வெதச்சவங்க பயிரறுத்துக் களைச்சவங்க
வெய்யிலிலே வெந்தவங்க எங்க ஜனங்க
வெறும்கையோட வந்தவங்க உஸ்ஸ{ன்னு ஒக்காந்தவங்க
வாயும் வயிறும் காஞ்சவங்க எங்க ஜனங்க
மாளிகைய எழுப்பனவங்க பங்களாங்க கட்டனவங்க
அடிமட்டத்துல மாட்டனவங்க எங்க ஜனங்க
தெருவிலேயே உழுந்தவங்க சத்தமில்லாம கெடந்தவங்க
மனசுக்குள்ளேயே அழுதவங்க எங்க ஜனங்க
வட்டிக்காசு கொடுக்கறவங்க சொற்பொழிவு நெருப்புக்குள்
வெந்து சாம்பலானவங்க எங்க ஜனங்க
ஆண்டவனின் பேரைச்சொல்லி விருந்துசோறு தின்னவங்களுக்கு
செருப்புதச்சி குடுத்தவங்க எங்க ஜனங்க
தங்கத்த எடுக்கறவங்க சோத்தயே பாக்காதவங்க
துணிமணிய நெஞ்சவங்க அம்மணமா போனவங்க
சொன்னபடி கேக்கறவங்க எங்க ஜனங்க
காத்துலயே வாழுறவங்க எங்க ஜனங்க
2. ஆயிரமாயிரம் நதிகள்
நேற்றைய தினம்
எங்கள் மக்கள்
மலைபோலத் திரண்டு வந்தார்கள்
கருத்தமுகம் வெளுத்த தாடி கனலுகின்ற கண்கள்
இரவையும் பகலையும் பிளந்து உறக்கத்தை விரட்டினர்
கம்பளிகள் முணுமுணுத்தன சீறியெழும் வேகத்தில்
பூகம்பமே ஆயிற்று அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தால்
எறும்புபோல நீளும் வரிசை புலிசிங்கங்களின் சீறல்கள்
ஒழிக ஒழிக சமமற்ற நிலை ஒழிக
என்றென்றும் அழிந்தொழிக பணக்காரச் செருக்கு
லட்சக்கணக்கில் நாகப்பாம்புகள் புற்றைவிட்டு வந்ததுபோல
ஊர்முழுக்கத் திரண்டார்கள்
பாதாளத்துக்குள் இறங்கினார்கள்
வான்நோக்கித் தாவினார்கள்
தெருவினிலே கிளைச் சந்தினிலே
சுற்றுச் சுவர்களின் மறைவினிலே
ஆண்டைகளின் இருப்பிடத்திலே அவர் அமரும் இருக்கையிலே
எங்கெங்கும் எங்கள் மக்கள் தண்ணீர்போல நிறைந்தார்கள்
இவர்கள் வாய் திறந்ததும்
அவர்கள் வாய் அடைந்தது
இவர்கள் குரல் கேட்டதும்
அவர்கள் குரல் தணிந்தது
புரட்சியின் புயலில் கைவீசி எழுந்த எங்கள் மக்கள்
காலம் முழுக்க உதைத்தவர்களின்
கழுத்தையெட்டிப் பிடித்தார்கள்
போலீஸாரின் கைத்தடிகள் கைக்கூலிகளின் கத்திகள்
வேதசாஸ்திர புராணம் துப்பாக்கிகளின் கிடங்கு
கசக்கிப்போட்ட குப்பை போல
காலடியில் கிடந்தன
போராட்டக் கடலைநோக்கி
ஆயிரமாயிரம் நதிகள்