பழிசுமந்த மண்
சி. புஸ்பராஜா

அகலத்திறந்து வையுங்கள்
உங்கள் கதவுகளை
அல்லது உடைக்கப்படும்.
காக்க வந்தவர்கள், காப்பாற்ற வந்தவர்கள்
நியாயம் கேட்காதீர்கள்
கேட்டால் உதைக்கப்படுவீர்கள்.

உங்கள் உடைமைகள் மட்டுமல்ல
உயிர்களும்
பெண்களின் கவடுகளும்தான்
எடுக்கவும், அழிக்கவும், சிதைக்கவும்
எழுதாமல் பறிக்கப்பட்ட உயில்.

உங்கள் கதவுகள் உடைக்கப்படும்
காத்திருங்கள் - சுடும் உண்மைதான்.
உங்கள் பிஞ்சுகள் ஏற்றப்படுவார்கள்
சிலுவையில் அறையப்படுவார்கள் - ஆனால்
அவர்கள் திரும்பமாட்டார்கள்.

ஆட்டுக்காகக் கண்ணீர் விட்டவரின்
ஆட்களென - நம்பிவிடாதீர்கள்
உங்கள் கதவுகள் உடைக்கப்படும்.
தொலைதேசத்துக்கு
ஆத்மாக்கள் அனுப்பப்படும்.

காத்தல் விடுத்து
அழித்தல் கொண்ட யமனாகி
கௌதமதத்துவம்.... இரக்கம் பறிபோய்
கொடூரர் சித்தமாகி - இரத்தாறாய்
நாசமாய்ப்போன தேசமது.