அனைத்தும் சிதைந்து போய்விட்டது
எனது கனவுகள் போல்
எனது நம்பிக்கைகள் போல்
இப்போது எனது வாழ்வு போல்
அனைத்தும் சிதைந்து போய்விட்டது.
ஒரு கோழிக்குஞ்சு போல்
மெல்லத் தடவி விட
இந்த மனிதர்களால் முடியவில்லை.
பத்மவியூகத்தின் அபிமன்யுபோல்
எங்கு திரும்பினும் கொலைவெறி முகங்கள்.
என் ஆளா, உன் ஆளா எல்லாம்
ஒன்றாகி திரிசங்கு சொர்க்கம்.
நாம் அறிவோம்
கோணேஸ்வரியும், கிருஷாந்தியும்
இன்னும் பல
துவசம் செய்யப்பட்ட ஆத்மாக்களையும்
முன்னைய தொடர்கதை, பின்னைய தொடரும்கதை.
வெறிக்கு எம் உயிர்மட்டுமல்ல, சதையும்தான்.
நியாயம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்ட மண்ணில்
ஒடுக்குமுறை வெறியரிடம் மனிதமும் மண்ணாங்கட்டியும்.
" " " " " " " " " " "
அண்மையில் அறிந்தோம் - வெட்கினோம்
முன்றலில் நிறுத்தி தீர்த்துக்கட்டினர் இருவரை
துரோகிகள் என நியாயப்படுத்தினர்
கைகட்டி, கூட்டமாய் நின்று
வேடிக்கை பார்த்தது மனிதர் கூட்டம்.
தட்டிக் கேட்க, பணிந்து கேட்க யாருமில்லை.
வெட்கி நின்றது கிழக்கு மண்.
மனிதங்கள் செத்து - சூழவும்
பயமூட்டும் இருள்வெளியில்
எதை நான் தேடுவேன்.
ஓடுவதுபோன்ற பிரமை என்னைத்தள்ள
தேடுதல் சாத்தியமில்லைத்தான்.
ஒரு பூவைப்போல், ஒரு புல்லைப்போல்
நம்பிக்கை கொள் என என்
உணர்வுகள் தூண்டினும் - சுற்ற
நிகழ்வுகள் நம்பிக்கை
தருவதாய் இல்லை.
தூ.... நிர்வாணமாகிவிட்ட மனிதர்கள்.
வெட்கி முகம்மூட நான் மட்டும் யார்?