நான் + நீ = அராஜகம்

சி. புஸ்பராஜா

 

முழங்கால் இரண்டிலும் தலையை வைத்து, இரண்டு கைகளாலும் கால்களைக் கட்டி, சிந்தும் கண்ணீருடன் காட்டுசூசை செய்வதறியாது அந்த எலுமிச்சை மரத்தடியில் விறைத்துப் போயிருந்தான். கதறி அழவேண்டும் போலிருந்தாலும் அவனால் அது முடியவில்லை. அது பயத்தினாலா அல்லது இயலாமையினாலா என்பது மட்டுமல்ல கேள்வி@ அது அவனது சுபாவமாகக்கூட இருக்கலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்பதுகூட அவனால் முடிவுக்கு வராத ஒன்றுதான். பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும் என்பது அவனது வாழ்வின் சந்திகள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதில் அவன் நம்பிக்கை இழந்தவனாகிலும் அவனுக்கு பொறுமையைவிட வேறெந்த பற்றுக்கோல்களும் கிடைக்காத அப்பாவி.

அது மீன்பிடியைத் தொழிலாகக் கொண்டவர்களை பெரும்பான்மையானதாகக் கொண்டதொரு சிறிய ஊர். அந்த ஊரின் எல்லைப்பகுதியில் அடர்த்தியாக வளர்ந்திருந்த சிறிய பற்றைப்பகுதியை அந்த ஊர் மக்கள் காடு என சொல்வார்கள். வீடுகளில் வசதி இருந்தாலும் கடற்கரை ஓரங்களிலும், அந்தக் காட்டுப்பகுதியிலும் காலைக்கடன் செய்துகொள்வது அந்த ஊர் பழசுகளுக்கு (ஏன் சில இளம் வட்டங்களுக்குக்கூட) ஒரு சுகமான விருப்பம். சூசையின் வீடும் அந்தக் காட்டுப்பகுதியின் ஒரு மூலையில் இருப்பதால் சூசை காட்டுசூசையானான்.

வாழ்வின் சூட்சுமங்களோ, வெற்றியின் குறுக்குவழிகளோ, மற்றவர்களை ஏமாற்றும்கலையோ தெரியாததால் வாழ்க்கை என்பதே சூசைக்கு தினப்போராட்டமாகி, தானாகவே ஒதுங்குவது என்னும் கலையில் கைதேர்ந்தவனாகிவிட்டான். தன் உடன்பிறந்தவர்களெல்லாம் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு வாழ்வில் முன்னேறியது மட்டுமல்லாது அவர்களது பிள்ளைகளெல்லாம் டொக்டர், எஞ்சினியர் என வளர சூசை உயர்கோட்டின் அருகிலுள்ள சிறுகோடாகி மிக ஒதுங்கி காட்டுப்பகுதியில் தஞ்சமானான். சூசையின் வாழ்வும் கிராமத்து மக்களின் உறவும் ஓடும் புளியம்பழமும் கதையாகி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டது.

-----------------------------

தறித்து எறிந்த பனைபோல் வீட்டில் அவர்களால் கொண்டுவந்து வீசப்பட்ட தனது மகனின் உடலைப் பலமுறை அருகில் சென்று பார்ப்பதும் மீண்டும் வந்து அந்த எலுமிச்சை மரத்தடியில் குந்தியிருப்பதுமாக மட்டுமே இப்போது காட்டுசூசையால் செய்யமுடிகிறது. யாரை நோவது யாரிடம் சொல்லி அழுவது. எல்லாம் முடிந்துவிட்டது. இனி யாரிடமும் யாசித்து பயனில்லை. பொங்கிவரும் கோபத்தை வெளியில் காட்டமுடியாத நிலையில், அடிக்கடி பாம்புபோல் மூசிக்கொண்டான் காட்டுசூசை.

காட்டுசூசையின் மூத்தமகன் உழைப்பில் வல்லியமானவன். அவன் தலைநிமிர்ந்தபிறகு அவர்களது குடும்பம் கொஞ்சம் செல்வச் செழிப்புடன் ஊர் பார்க்க வாழ்ந்தார்கள். ஆனால் திடீரென மூத்தவன் யாரோ ஒரு பொட்டையைக் கூட்டிக்கொண்டு ஓடியதும் காட்டுசூசை குடும்பம் காற்றில் அகப்பட்ட காகிதத் துண்டாகியது. சூசையின் தலையில் இடிவிழுந்தது. அடுத்தடுத்த நாலு பெட்டைக் குஞ்சுகளுக்குப்பிறகு கடைக்குட்டியாக ஒருவன். அவனது வரவை எதிர்பார்த்து காட்டுசூசை களம் இறங்கி தன் குடும்பத்தை தள்ளலானான்.

காட்டுசூசையைப் பொறுத்தமட்டில் நாடு பிடிக்கும் போராட்டம் தீயாக படரத் தொடங்கியது பற்றியோ அல்லது அப்போராட்டம் இளைஞர்கள் கையில் மாறியது பற்றியோ பெரியதொரு ~கற்பு| இல்லாமல் தான் தனது வீடு, கடல் என்று ஓரமாகத்தான் வாழ்ந்தான். ஆனால் ஒருநாள் இரவு அவனது மீசை அரும்பிக்கொண்டிருக்கும் மகன் நாடுபிடிக்க வீட்டைவிட்டு ஓடிவிட்டான் என்று அறிந்தபோது மீண்டும் தலையில் இடிவிழுந்து தகர்ந்துபோனான். உடல் தளர்ந்து போயிருந்த காட்டுசூசையின் மனமும் இப்போ மோசமாகத் தளர்ந்தது. 'அட இந்த நாசமாப் போனவன் ஏன் இப்படிச் செய்தான்?" என ஏங்கி நொந்துகொண்டிருந்தான். வெகுகாலத்துக்கு தன்னால் தனது குடும்பத்தைத் தள்ளமுடியாது என்பதை நினைக்கும்பொழுது அவனுக்கு பிரமைபிடித்தது போலாகியது.

கட்டுமரங்களெல்லாம் மாறி பெரிய பெரிய இயந்திரங்கள் பூட்டிய வள்ளங்களாகி, நைலோன் வலைகள், அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை, சூடை வலை என மாற்றங்கள் கண்டும், ஒரு களங்கட்டி வலைகூட இல்லாது வெறும் வீச்சுவலையும், கூடுமாக அலையும் காட்டுசூசையால் எதைச் சாதிக்கமுடியும்@ யாருடன் தாக்குப்பிடிக்கமுடியும்? ஒரு வாரக் கூட்டுக்குக்கூட ஆழ்கடல்போக பயம்கொள்ளும் அப்பிராணி அவன். தன்னிலையை எண்ணித்தானே அழுதுகொள்வான். இரண்டு மகன்கள் இருந்தும், அவர்கள் இல்லை என்ற கதையாகி வாழ முற்பட்டுக்கொண்டான்.

ஊரெல்லாம் பொடியள் அந்த இயக்கம் இந்த இயக்கமென வலம் வந்தார்கள். இப்படித்தான் ஒருநாள் திடீரென சூசையின் கடைக்குட்டி துப்பாக்கியும் கையுமாக வந்துநின்றான். சூசை கலங்கிப் போனான். பெத்தமனது பித்தானது. கண்கள் கலங்கியது. கோபங்கள் எல்லாம் பனிக்கட்டியாகியது. மலைபோல் பிரச்சனைகளை மடுபோல் எண்ணினான். என்னதான் இருந்தாலும் தனது மகனைப் பார்த்து மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொண்டான். தனக்கில்லாத வீரமெல்லாம் தனது பயலுக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டான். காணிக்கைமாதா கோவில் வளவில் நடக்கும் நாட்டுக்கூத்தில் மாபெரும் வீரனாக தோன்றும் செபஸ்தியாரின் நினைவு ஒரு மின்வெட்டில் அவனுக்கு வந்து போனது.
காட்டுசூசையின் மகன் தனது இயக்கப்பொடியளுடன் நாளுக்கொரு ஆயுதமும் - நாளுக்கொரு வாகனமுமாக ஊரில் வலம்வந்து கொண்டிருந்தான். அதுவரை ஊரின் கோடியில் அந்தக் காட்டுப்புறத்தில் ஒதுங்கிவாழ்ந்த சூசை ஊர்மக்கள் மத்தியில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி உலா வந்தான். ஊராரும் சூசைக்கு மரியாதை கொடுத்தார்கள். நாலு ஐந்து இயக்கங்கள் - அதுவும் இயக்கங்களின் பெயர்களைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் பலரும் கதைப்பதால் சூசையால் அவைகளைப் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் தனது மகனிருக்கும் இயக்கத்தின் பெயரைக் கேட்டு அறிந்து மனப்பாடம் பண்ணிக்கொண்டான். கேட்பவர்களிடம் தன் மகன் இருக்கும் இயக்கம்தான் பெரியது எனப் பெருமையடிப்பதுடன் அதன் பெயரையும் சரியாகச் சொல்லிக் கொண்டான். இருந்தாலும்கூட ஏன் இத்தனை இயக்கங்கள்@ எல்லாரும் ஒரு இயக்கமாக இருந்தால் என்ன என தனது சிறிய அறிவுக்கு எட்டியவரை யோசித்து, ஏதோ பொடியள் பிழையாகவா செய்யப்போகிறாங்கள் எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்கத்தானே செய்யுமென ஆறுதல் கொள்வான்.

-----------------------------

நாடுபிடிக்கும் போராட்டம் உக்கிரமடையத் தொடங்க இயக்கங்களிடையேயும் போட்டியும், பொறாமையும் தலைதூக்கத் தொடங்கியது. இந்நிலையானது அந்நியத் தலையீடுகளினால் நெருப்பிடை நெய்யானது. நடப்பவை அறியாது காட்டுசூசை தன் மகனின் பெருமையையும் - கடலும் - குடும்பமுமாக கொஞ்சம் மகிழ்வாகத்தான் தோன்றினான். இயக்கங்களின் போட்டியும், பொறாமையும் ஒன்றைஒன்று அழிக்கும் நிலையும் அதனால் காலத்துக்கொரு இயக்கத்தின் கை ஓங்குவது@ மறு இயக்கங்கள் மறைவது என சித்துவித்தை விளையாட்டாக விடுதலைப்போராட்டம் மாறி மக்களும் வசதிக்கேற்ப பல பிரிவுகளாகப் பிரிந்து மகிழ்வதும், இகழ்வதும், துயர்வதுமாக புதுக்கோலம் கொண்டது விடுதலைப்போராட்டம்.

இயக்கங்கள் விடுதலைப்போரைவிட சக இயக்க அழிப்பில் முன்னின்றபோது காட்டுசூசையின் மகனின் இயக்கத்தின் கைஓங்கிநின்றது. எதிரியின் படைகளைத் தேடியழிக்கும் வீரமும், வேகமும் சொந்த இரத்தங்களை சுவைப்பதில் திசைதிருப்பப்பட்டது. காட்டுசூசையின் மகனும் ஒன்றுக்கும் சளைக்காதவனாக தன்னியக்கத்தின் கடமையை நிறைவேற்றும் முன்னணிவீரனாகத் தன்னை எண்ணிச் செயற்பட்டான். பால்-வயது வேறுபாடுகளின்றி சுட்டும்-வெட்டியும், வதைத்தும்-எரித்தும் வீசப்பட்டார்கள், புதைக்கப்பட்டார்கள் சகோதரர்கள். துரோகிகள்-காட்டிக் கொடுப்பவர்கள்-சமூகவிரோதிகள் என துண்டுப் பிரசுரங்கள், மேடைப்பேச்சுக்கள் நியாயம் கற்பித்தன. மக்கள் மௌனித்தனர், சிலர் மகிழ்ந்தனர்.

இப்போதெல்லாம் காட்டுசூசையின் மகன் அவனது வீட்டுப்பக்கமே வருவது குறைந்தது. அவனுக்கு இரவேது, பகலேது? மறைந்திருக்கும் மாற்று இயக்கப்போராளிகளைத் தேடுவதிலும், அழிப்பதிலும் மட்டுமல்லாது அவர்களுக்கு உதவுபவர்கள், உணவு கொடுப்பவர்கள், குடிநீர் கொடுப்பவர்கள் எனப் பலரையும் அழிக்கும்-ஒடுக்கும் மாபெரும் புனிதப் போராட்டம் அவன் சார்ந்த இயக்கத்தின் இலட்சியமானதால்@ அதை நிறைவேற்றுவதில் அவன் தவக்கோலம் பூண்டான்.

தங்கள் நிலங்களில், வீடுகளில் அந்நியப்படைகள் புகுந்தது கண்டு பொங்கியெழுந்த மக்கள், இப்போது சொந்தப்படைகள் புகுந்து விளையாடுவதைப் பார்த்து மௌனித்தனர் சிலர் மகிழ்ந்தனர். எங்கும் கைதுகள், விசாரணைகள், தண்டனைகள், மின்கம்ப சடலங்கள்@ கிணற்றில், குளத்தில், வீதியில் என உடல்கள் எறியப்பட்டன. கோரத்தாண்டவ நிலையை விடுதலைப்போராட்டம் அடைய பயத்தின் அராஜகத்தின் அர்த்தங்களை மக்கள் கற்றறிய முனைந்தனராயினும் தோற்கடிக்கப்படும் மனிதநேயம்பற்றி யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

காட்டுசூசைக்கு பித்துப்பிடித்த நிலை. தனது மகன் வீட்டுக்கு வராமல் இருப்பதும், அவனைப்பற்றி ஊரார் ஒளிவும் மறைவுமாக பேசிக்கொள்வதும்@ இயக்கப்பொடியள் பலரைத் தன் மகனே கொன்றதாக அறியும் தகவல்களும் அவனை நிலைகுலைய வைத்தன. தனது மகனின் பெருமைகளால் நிமிர்ந்திருந்த அவனது நெஞ்சு இப்போ வேதனையால் துவண்டது. யார் செய்த பாவமோ இப்படி என் தலையில் இடியானதே என அவன் நொந்துகொண்டான். ஊரார் தன்னைக்கண்டு பயந்து ஒதுங்குகிறார்களா? அல்லது சினந்து ஒதுங்குகிறார்களா? என அவனால் பகுத்தறியமுடியவில்லை. ஆனால் தான் மட்டும் ஒதுங்கி ஒதுங்கி போவது என்னும் பிரமை அவனுள் ஏற்பட்டது. அது உண்மையும்கூட. ஆம், சூசை மீண்டும் ஒதுங்கி மௌனிக்கலானான்.

திடீரென ஒருநாள் தனது இயக்கப்பொடியளுடன் தேவைக்கதிகமான ஆயுதங்களுடன் ஜீப்வண்டியில் மகன் வந்திறங்கியபோது காட்டுசூசை ஆடிப்போய்விட்டான். வாரிவிடப்படாது கலைந்து போயிருந்த தலைமயிரும், சிவந்துபோன கண்களும், காய்ந்து கறுப்பேறிய முகமுமாக அவனது தோற்றத்தைப் பார்க்க காட்டுசூசையின் நெஞ்சில் ஈரம் ஊறமறுத்தது. என்னவோ எல்லாம் கேட்கவேண்டுமென காத்திருந்த அவன் எல்லாம் மறந்து கலங்கிநின்றான். காட்டுசூசையின் மனைவி எந்த உணர்வுகளுமில்லாது வந்தவர்களுக்குத் தேநீர் போட்டுக் கொடுத்துவிட்டு ஒரு மூலையில் மரமாக நின்றாள். ஏதோ தோன்றியவன்போல் காட்டுசூசை தனது மகனைத் தனியே அழைத்து 'என்ர ராசா மதவடி ராகவனை வேறை இயக்கம் என்று சொல்லி நீதான் சுட்டது என ஆக்கள் கதைக்கினம். உண்மையோ" என இறங்கிய, இரங்கிய குரலில் கேட்டான். 'ஓம் அவனைத் துரோகி என முடிவுசெய்து நாங்கள்தான் சுட்டது" என கத்திச் சொன்னான் காட்டுசூசையின் மகன். நீ சுட்டியா-நீங்கள் சுட்டீர்களா? நா வரை வந்தது கேள்வி, எல்லாம் முடிந்தபின் அர்த்தமற்றது என காட்டுசூசை கேட்காமலே விட்டான். இப்போது காட்டுசூசையால் தன் மகனை ஒரு வீரனைப்போல் வீறாப்புடன் பார்க்கமுடியவில்லை. இது எங்கு போய் முடியப்போகிறதோ என்னும் இனம் புரியாத பயம் அவனைக் கௌவிக்கொண்டது. வீட்டுமுற்றத்திலுள்ள எலுமிச்சை மரத்தடியில் போய் குந்திக்கொண்டிருந்து வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் காட்டுசூசை.

-----------------------------

சக்கரம் சிறிதே சுற்றியது. மேல் கீழாகியது. கீழ் மேலாகியது. அடங்கியவர்கள் அடக்கப் புறப்பட்டார்கள்@ அடக்கியவர்கள் ஒளிந்து மறைந்தார்கள். பழைய கடைகள் கட்டப்பட்டன@ புதிய கடைகள் திறக்கப்பட்டன. துரோகிகள்-காட்டிக்கொடுப்பவர்கள் எனப்பட்டோரின் பாத்திரங்கள் மாறியது. ஆம் காட்டுசூசையின் மகனின் இயக்கம் இப்போ வேட்டைக்கு இலக்காகியது. மற்ற இயக்கத்தின் கை ஓங்கியது. இயக்கத்தவரின் முகங்கள் மாறியதே தவிர செயல்கள்? வீறாப்புடன் ஆயுதம் ஏந்தியவர்களின் குதிரையேறிய பார்வைகள், புழுதி கிளப்பி ஓடும் வாகனங்களில் அவர்களின் வருகைகள், மனிதரை வெறும் புழுக்களாக எண்ணும் நடைகள். எதிரியை மறந்து சொந்தத்துக்குள் குருசேத்திரம் அமைக்கும் வேகம் - சகோதரர்களை வேட்டையாட உள்ள துடிப்பு எதுவும் மாறவில்லை@ இப்போ இயக்கம் மாறியுள்ளது.

காட்டுசூசையின் மகன் தலைமறைவானான். அவனது இயக்கத்தையும், இயக்கப்பொடியளையும், இயக்க ஆதரவாளர்களையும் வேட்டையாடி அழிப்பதில் மற்ற இயக்கம் வெறியாக அலைந்தது. அந்த இயக்கத்துக்கு சற்றும் சளைக்காமல் இந்த இயக்கமும் எங்கும் கைதுகள்-விசாரணைகள்-தண்டனைகள்-மின்கம்ப சடலங்கள், கிணற்றில் - குளத்தில்-வீதியில் உடல்கள் என மிகவும் பரபரப்பாக வேலைகளை முடுக்கி விடுதலைப்போரை பறணில் ஏற்றியது. விடுதலைப்போராட்டத்துக்காக இயக்கத்தில் சேருவது என்பது பழைய கதையாகி, பழிக்குப் பழிவாங்க இயக்கத்தில் சேருவது என்னும் புதிய தத்துவமும் இணைக்கப்பட்டது. மக்கள் மௌனித்தனர். சிலர் மகிழ்ந்தனர்.

புதிதாக அதிகாரத்தை (அநியாயத்தை) புரிய வந்த இயக்கத்தினரால் காட்டுசூசையின் ஊருக்கு (ஏரியா) பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அதிதீவிரமாக சூசையின் மகனை வேட்டையாட அலைந்தனர். அதுவும் அவனால் கொல்லப்பட்டவன் எனச் சொல்லப்பட்ட மதவடி ராகவனின் தம்பியும் இயக்கத்துடன் சேர்ந்து பேயாய் அலைந்தான். இவர்கள் அடிக்கடி காட்டுசூசையின் வீட்டுக்குப் போய் அச்சுறுத்தினார்கள். சில நாட்கள் நடுச்சாமத்தில் வீட்டுக்குள் புகுந்து மகனைத் தேடுவது என்னும் பெயரில் காட்டுசூசையையும் அவனது குடும்பத்தையும் மரணபயத்துக்குள்ளாக்கினார்கள். 'உங்கள் மகனை வெளிப்படுத்துங்கள் அல்லது உங்கள் குடும்பத்தையே அழித்துவிடுவோம்" எனச் சவால்விட்டார்கள். நல்ல கூரான கத்தியையே வாழ்வில் காணாத காட்டுசூசை புதிய புதிய ஆயுதங்களையும் அதை ஏந்தியவர்களையும் நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற அவர்களின் நடவடிக்கைகளையும் கண்டு வெலவெலத்துக்கொண்டிருந்தான்.

திடீரென ஒருநாள் வந்தவர்கள் காட்டுசூசையின் வீட்டுக்குள் புகுந்து அவனின் தலைமயிரில் பிடித்து தொரதொரவென இழுத்துவந்து வீட்டுமுற்றத்தில் அவனை முழங்காலில் நிற்கவைத்து அவனது மகன் எங்கே? இங்கு வருவதில்லையா? என விசாரித்துவிட்டுப் போனார்கள். இத்தனைக்குப் பிறகு காட்டுசூசைக்கு வாழ்வுமீதான நம்பிக்கையே அற்றுப்போனது. பயம், வெறுப்பு, இயலாமை காரணங்களால் அவன் கடல் பக்கமே எட்டிப் பார்க்காமல் விட்டுவிட்டான். அவனும் அவனது குடும்பமும் வீட்டுக்குள் முடங்கிக்கொண்டது. அடுப்பில் நெருப்பெரிவதே பெரும்பாடாகியது.

காட்டுசூசையின் மகனுடன் தொடர்புடையவர் எனப் பேசப்பட்ட ஆலடி அரசு விசாரணைக்கென இயக்கத்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட மறுநாள் கிணற்றுக்குள்ளிருந்து சாக்குக்குள் (கோணி) கட்டப்பட்ட பிரேதமாக வெளியில் எடுக்கப்பட்ட செய்தி அறிந்த காட்டுசூசையின் நெஞ்சு பதறிக்கொண்டது. தனது மகனுடன் தொடர்பு என்று சந்தேகிக்கப்பட்டவனுக்கே இந்தக் கதி என்றால்...? தன் மகனின் முடிவை அவன் யூகித்துக்கொண்டான். ஒன்றுமே தோன்றாதவனாக ஒரு மெழுகுவர்த்தியுடன் காணிக்கை மாதாவின் காலடியில் சரணானான். புலம்பவேண்டும், கதற வேண்டும்போல் தோன்றியது. சர்வபயமும் அவனை ஆட்கொண்டு விம்மினான்@ நேரம்போவது தெரியாது விம்மிக்கொண்டேயிருந்தான். இறுதியில் மாதாவின் காலடியிலேயே சோர்ந்து தூங்கிவிட்டான்.

-----------------------------

அது நடந்துதான் விட்டது. சீறிப்பாய்ந்து வந்த வாகனத்திலிருந்து அவர்கள் இறங்கினார்கள். காட்டுசூசையையும் அவனது மனைவியையும் அழைத்தார்கள். சர்வசாதாரணமாக 'உங்கடை மகனின் உடலை சிறிதுநேரத்தில் கொண்டுவருவோம். யாரும் சத்தம்போட்டு ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது..." அவர்கள் கூறிமுடிக்கவில்லை, சூசையின் மனைவி 'என்ரை யேசுவே" எனக் கதறியபடி நிலத்தில் புரண்டாள். காட்டுசூசை பதறியபடி மனைவியைக் கட்டிக்கொண்டான். 'ஏய் நாங்கள் தமிழிலைதானே சொல்றம். விளங்கவில்லையா" என வந்தவர்களில் ஒருவன் அதட்டினான். காட்டுசூசையின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்து 'நாங்கள் சொல்றதைக் கவனமாய்க் கேள். இங்கு கத்திக் குழறி கூட்டம் சேர்க்கவேண்டாம். நாங்கள் நினைத்திருந்தால் அங்கேயே உங்கடை மகனை எரித்திருப்போம.; ஏதோ நீங்கள் நல்ல சனம் எண்டபடியால் உடலைத் தருகிறோம்" மனிதாபிமானத்தின்(?) காவலர்களாக பேசியவர்கள் வேகமாகப் புறப்பட்டார்கள். 'எங்கடை பிள்ளைக்கு என்ன நடந்தது தம்பியள்" என நடுங்கும் குரலில் சூசை கேட்டான். 'அவருக்கு எங்கடை இயக்கம் எப்பவோ மரணதண்டனை விதிச்சது. காலமைதான் அம்பிட்டார்" என்றபடி அவர்கள் புழுதிகிளப்பிப் பறந்தார்கள்.

சத்தம்கேட்டு நடந்ததை ஊகித்துக்கொண்ட காட்டுசூசையின் மகள்களும் ஓடி வந்தார்கள். இப்போ எல்லோரும் சேர்ந்து கதறி அழுதுகொண்டிருந்தார்கள். காட்டுசூசையின் குடும்பம் அநாதரவாக புலம்பும் நிலையைக்கண்ட ஊரவர்கள் விடயமறிந்து சிறிய பயத்துடன் தயங்கித் தயங்கி வந்தார்களாயினும், செய்வதறியாது ஊமைகளாக நிலைகுத்தி நின்றார்கள். சிறிது நேரத்தில் சீறிப் பாய்ந்து வந்த இரண்டு மூன்று வாகனங்களிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். காட்டுசூசையின் மகன் உடலை ஒரு வாகனத்திலிருந்து இறக்கி வீட்டுக்குள்ளே கொண்டு சென்று அங்குள்ள மரப்பலகை போன்ற படுக்கையில் வீசி எறிவது போன்று போட்டார்கள். நெஞ்சிலும் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கதறியபடி சூசையின் குடும்பம் வீட்டுக்குள் ஒடி வந்தது. சூசை தனது மகனின் உடலைப் பார்த்தான். வலது முழங்கால் துப்பாக்கியால் சுடப்பட்டுச் சிதறியிருந்தது. நெஞ்சிலும் வயிற்றிலும் சூடுபட்டிருந்தது. முகத்தில் கட்டையால் அடித்ததுபோல் பெரிய காயங்களிலிருந்து பெற்றமனம் பற்றி எரிந்தது. ஓடிப்போய் வீட்டுமுற்றத்திலிருந்த எலுமிச்சை மரத்தினடியில் குந்தியிருந்து தலையிலடித்து அழத் தொடங்கினான்.

காட்டுசூசையின் குடும்பம் இயக்கத்தவர்களால் எச்சரிக்கப்பட்டது. வந்தவர்களில் முதன்மையானவன்போல் தோன்றியவன் காட்டுக்கத்தல் கத்தினான். 'யாரும் சத்தம் போடக்கூடாது. இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மரணச் சடங்குகளை முடித்து பிரேதத்தை எடுத்துவிடவேண்டும். பிரேத ஊர்வலத்தில் வீட்டுக்காரர்களைத் தவிர யாரும் வரக்கூடாது" எனக் கட்டளை இட்டுக்கொண்டிருந்தான். மனதிற்குள் குமுறிக்கொண்டிருக்கும் கோபத்தை வெளியில் கொட்டவேண்டும் போல் காட்டுசூசைக்கு இருந்தது@ அடக்கிக் கொண்டான். 'இவர்கள் கொடுமையானவர்கள்@ இரக்கமற்றவர்கள். தான் ஏதாவது சொல்லப்போய் அதையே மனதில் கறளாய் வைத்து நாளைக்கு ஒரு நாள் தனது மகள்களில் யாரையாவது பிடித்து இராணுவத்துக்கு தகவல் கொடுத்தால் அல்லது வேறு இயக்கங்களுடன் தொடர்பிருந்தது எனச்சொல்லி கிணற்றிலோ குளத்திலோ சுட்டுப்போட்டார்களானால் என்ன செய்வது என எண்ணினான்.

இயக்கப்பொடியளில் ஒருவன் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதுகொண்டிருக்கும் காட்டுசூசையின் மனைவியை அழைத்து 'களைப்பாக இருக்கிறது. எங்களுக்குத் தேநீர் போட்டுத்தா" என மிக சாவகாசமாகக் கேட்டான்; 'அட கொலைகாரப் பாவியள். உங்களுக்கு எதுக்கடா தேத்தண்ணி" எனக் கத்திய மனைவியைத் தள்ளிக்கொண்டு போய்விட்டுவிட்டு தான் தேநீர் போட ஓடினான் காட்டுசூசை. அவனது மனம் அந்தளவுக்கு பேதலித்திருந்தது - பயந்திருந்தது. காட்டுசூசையினால் கொண்டுவரப்பட்ட தேநீரில் நஞ்சிருந்தாலும் என்ற சந்தேகத்திலோ என்னவோ காட்டுசூசையை முதலில் குடிக்கும்படி கேட்டு அவன் குடித்தபின்பே வாங்கிக் கொண்டார்கள் இயக்கவீரர்கள்.

இயக்கக்காரர்களால் விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்தது@ உடலை எடுக்கும்படி கட்டளையிடப்பட்டது. காட்டுசூசையின் குலக்கொழுந்தின் உடல் தூக்கப்பட்டது. இயக்கக்காரர்களின் உத்தரவைமீறி காட்டுசூசை குடும்பம் கதறி அழுதது. மரணஊர்வலம் புறப்பட்டது. பிரதானவீதியில் வந்தபொழுது என்ன நினைத்தானோ தெரியவில்லை காட்டுசூசை வீதியில் வீழ்ந்து கதறினான். 'அடப்பாவிகளா.... இவங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா" என, தான் இதுவரை காத்த மௌனவிரதத்தைக் கலைத்தான். மிகவேகமாக வந்த இயக்கக்காரன் ஒருவனின் கை சூசையின் பிடரியில் தாக்கியது. தாக்கியவன் இரத்தமாகச் சிவந்து போயிருந்த சூசையின் முகத்தைப் பார்த்தான். 'டேய், வாயைப் பொத்திக்கொண்டு வாடா" எனக் கத்திய அவனை நேரெடுத்துப் பார்த்த காட்டுசூசை 'என்றோ ஒரு நாள் இவன்கள் தட்டிக் கேட்கப்படுவான்கள். நிச்சயமாக தட்டிக்கேட்கப்படும்" அவன் மனம் சொல்லிக்கொண்டது. காட்டுசூசை தன்மகனைப் பின்தொடர்ந்தான்.