நீ.... தீ....
சஜீ
அவனிடமிருந்ததை அவர்கள் பறித்துக்கொண்டார்கள். ஆனால் அதற்கு முதலே அவன் நடைப்பிணம்தான்.
அவர்களது அகராதியில் அகாலவேளை என்ற ஒன்று இல்லை. இருப்பினும் சிறியண்ணா அவ்வேளையில் வந்ததும் முகாம் (ஊயஅp) விறைத்துப் போயிருந்தது.
அவன் கட்டி ஆண்ட முகாம், இன்னொருவனின் கைக்கு மாறியது. எந்த உணர்வுகளுமற்று சித்தப்பிரமை சிக்கெனப் பிடித்தவனாக மண்தரையில் மல்லாக்கப் படுத்திருந்தான்.
முகட்டின் சில ஓட்டைகளால் பொந்தல் வானம்.
உழவுக்குப் பெயர் போன, உடனே நீங்கள் தொழிலுக்கும் என்று முணுமுணுக்கக் கூடாது. இது வேவு.
அவர்களின் தலைமைக்குப் போகவேண்டிய விதத்தில் போய்ச்சேர்ந்தது.
இப்படித்தான் ஒருமுறை, அந்த முகாமில் மாவட்டத்திலுள்ள அனைத்து முகாம் பொறுப்பாளர்களும் வந்திருந்தார்கள். யமனுக்கு ~பொடிகாட்| நிக்கக்கூடிய மூன்று பேருடனும், சிறுவனொருவனுடனும், சிறியண்ணா வந்திருந்தார் சிம்மசொப்பனத்தில். அவர்களல்லாத நீங்கள், சிறுவனை செல்லமாக ~தவ்வல்| என்றழைப்பது, அவர்களுக்குத் தெரியாததொன்றல்ல. இதற்கு முதலே கூடிய அனைத்து முகாம் பொறுப்பாளர்களின் ஆயுதங்கள் வாசலில் வைத்து வாங்கப்பட்டுவிட்டது.
உங்களுக்கு வேண்டுமென்றால் பறிக்கப்பட்டதாக இருக்கலாம்.
முழங்கால் குத்துண்ண ஒருவனை மண்ணில் இருத்தினார்கள். கைகட்டி அனைவரும் சுற்றி நின்றார்கள்.
சிம்மசொப்பனத்தில் காலுக்கு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, கண்கள் சிவந்திருக்க கைவிரலைச் சுண்டி,
'சொல்றா நாவேசமேன, என்ன செய்தனியெண்டு"
சுற்றி விறைத்திருந்த முகங்களுக்கிடையில், ஒரு ஜீவனின் ஈனசுரம் சுரந்தது. அது நம்பிக்கையிழந்த உயிர்தல் வேண்டி!
'பக்கத்துவீட்டக்கா பாத்ரூமில குளிக்கேக்க நான் போய் சோப் போட்டனான், வேற எந்தத் தப்பும் நடக்கேல்ல"
'டே வாய மூடுறா! தப்பேதும்........! என்ன தண்டன தெரியுமோ? "
அதிர்ந்தது. கட்டுப்பாட்டுக்குப் பேர்போன அவர்கள். ஊரிலல்ல. உலகத்தில்.
அந்தப் பலிக்கடாவின் பார்வை நிலத்திலேயே, நிலைகுத்தியிருந்தது. அது விட்ட மூச்சினால், மண்ணும் சிறு துணிக்கைகளும் சிதறிக்கொண்டிருந்தன.
எழுந்த சிறியண்ணா, தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை பிடுங்கி சிறுவனிடம் கொடுத்தார்.
பாரம் தாங்கமுடியாத அவனது கைகள் தொங்கின மட்டுமல்ல@ நடுங்கின. விழிகள் மிரண்டு ஓடுப்பட்டன. காற்றுக்காடும் சீலைபோல அங்குமிங்கும் ஆட்டம் கண்டது.
'வையடா"
எங்க வைக்கிறது. பொறுமையிழந்த சிறியண்ணா, தட்டிப்பறித்து, பின்பக்கம் நின்று அதன் பிடரிக்கு குறிவைத்தார்.
சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, எட்டியிருந்த செவிகளுக்குள்ளாலும் கூவிச்சென்றது.
'எல்லாருக்கும் இது பாடம்"
எழுந்து போய்விட்டார்.
சுற்றியிருந்தவர்களும் கலைந்து போனார்கள். அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்த அவனும், நிதிக்கு பொறுப்பாக இருந்த அவனுடைய உற்ற நண்பன் நிதியும் சிறிது நேரம் மௌனம் காத்தனர்.
இந்த விடயம் அவர்களின் காதில் போய்ச்சேர்ந்ததெப்படி என்பது இருவருக்கும் புரியாமல் இருந்தது.
தண்டிக்கப்பட்டவன் எவ்வளவு நம்பியிருப்பான்.
இருவரும் அறிந்தவுடனே இரகசியமாக அவனுக்கு 1000 ரிப்ஸ் அடிக்கும்படியும் 1000 இலையான்கள் பிடிக்கும் படியும் ~பணிஸ்மன்ற்| கொடுத்து விட்டுவிட்டார்கள்.
தப்பினோம் பிழைத்தோம் என்றொரு ஜீவன் பிழைத்தது. தப்பவில்லை.
இப்படியான ஒரு ஏற்பாட்டில், சிறியண்ணா இருவரையும் எச்சரித்தார்.
வெட்கத்துக்குள் வெட்கம் புகுந்து கொண்டதில் புதினமேதுமில்லை. பொட்டு வெளிச்சத்தை முகாம் மூடியிருந்தது. நிசப்தம்.
ரயர்களின் இடையில் உடல் வளர்த்தப்பட்டிருந்தது மல்லாக்க. நிதி அவனிடம்,
'மச்சான் நீ போய் அலுவலைப் பார்." என்றான்.
இயந்திரமாக அவன் மனம் விரைந்து தீ மூட்டியது. 'ஆராரோ ஆட்டுவிக்க, ஆராரோ ஆடவந்தார்"
சில நொடிக்குள் பட்டணத்தார் எட்டிப் பாத்துவிட்டு போய்விட்டார். ஆண்டனுபவித்தவன், சொல்லிவிட்டு போய்விட்டான்.
தடியெடுத்து, மண்டையோட்டை தட்டியெரித்தான். ஈரல் கருகி வெண்ணெய் துளித்துளியாய்....
தீ முகம் மலர்ந்து ஒளி வீசியது.
இருவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு அகன்று கொண்டான்.
காலை, ரயர்களின் கம்பி வளையங்களுடன் சாம்பல் மட்டும் எஞ்சியிருந்தது.
அருகிலேயே சிறு குழி ஒன்று தோண்டப்பட்டது. சாம்பலை விறாண்டி அதற்குள் தள்ளி மூடியாகிற்று.
முதல் நாள் மாலை யாரும் சாப்பிட்டுவிடாத சாப்பாடு அப்படியே இருப்பதைக் கண்டு திருப்தி அடைந்தவனாக ~இன்று காலைச் சாப்பாடு| ஆயத்தமானதை உறுதிப்படுத்திக்கொண்டு, புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டிருந்த நிதியையும் ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிள் காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தது.
தலைமயிர்களெல்லாம் அறுந்துவிடும் துடிப்பில். காதோடு உரசும் காற்று கன்னங்களை சூடாக்கியது. கண்ணில் மோதி வழி தவறிய காற்று@ கண்ணிலிருந்து காது இடைவெளிக்கு நீர் கோடு நீண்டது.
நிதி ஒரே ஒரு செல்ல மகன். செல்வத்திலும் அவன் வறிய குடும்பம் ஒன்றின் பிரதிநிதி.
ஆனாலும் இருவரும் படிப்பில் ஒன்றில் ஒன்றியிருந்தார்கள்.
தரப்படுத்தல் என்றொரு விளையாட்டில், நிதி அனுமதி பெற்றான். விரக்தியுற்ற அவனுக்கு வறுமையின் தோற்றுவாய் தரப்படுத்தலாக்கும் என்றெண்ணி விடுதலை மந்திரத்தில் கட்டுண்டான்.
நிதி, நண்பனின் எதிர்பாரத முடிவால், தானும் எதிர்பாராத முடிவை எடுத்துக்கொண்டான்.
இருவருமாக இணைந்து கொண்டார்கள். ஆரம்பத்தில் திறிலாகவும் இலட்சியமாகவும் இருந்த இலக்கு மறையத் தொடங்க சலிப்பு பற்றிக்கொண்டது.
நிதி மென்மையானவன். சிறு அசம்பாவிதமென்றாலும் கலங்கிப்போவான். ஆரம்பத்தில் வாய்விட்டே அழுதுவிடும் சுபாவம். போகப்போக அவனால் வடிவமைக்கப்பட்டது.
இருவருடைய நினைவஞ்சலிப் போஸ்டர்கள் அவர்களின் மனதின் கண்களில். ஒன்றாகவே இருவருடைய படங்களும். அவ்வாறே போடவேணுமென்று சொல்லியும் வைத்தார்கள்.
தேனாகவினித்த ~சா| வேப்பெண்ணைக் கச்சல்.
எதிரியிடமிருந்து வரவேண்டிய சாக்குறி, தன்விரலிலிருந்தே தனக்கு ஆகும் நிலையில், நிலைத்தது.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் சுடலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. இதிலெப்படி உரையாடல். தகவல் வெளிவந்ததில் - அவனுக்கு இவனாக இருக்கலாம்@ இவனுக்கு அவனாக இருக்கலாம். இருந்தும் இருவரின் நெருங்கிய உறவில், சுடலையில் தனிமையில்.
எத்தனையோ சித்திரவதைகள், மரணங்கள் என்று கண்முன்னால் நடந்தவை தான்.
தண்டிக்கப்பட்டவனை தண்டித்தது தாங்கொணா வேதனையை அவனுக்குள் இருந்திருந்தெழுப்பியது.
இது முதற் தடவையாக ஏற்பட்டமையாலோ என்னவோ அவனுள் பூகம்பம் புகுந்துகொண்டு!
நிதி முழங்கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவன் அவனருகில் வந்து ஆதரவாக தோள்களில் கையை ஊன்றினான்.
'கடிதம் கொடுக்கப்போறன்;;."
அவனுக்கும் அதே எண்ணம்தான் ஊறிக்கொண்டிருந்தது. அவன் முந்துவான் என்று அவனுக்கெப்படித் தெரியும். இருவருமாக விலத்தக்கூடிய சிறுதுளி சாத்தியப்பாடுகளில்லை.
'நீ முதலில குடு மச்சான்"
வெய்யில் சூடு எகிறியது. அவர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்று போனார்கள்.
சந்தர்ப்பம் வரும்போது, அல்லது சந்தர்ப்பத்தை வரவழைத்துக்கொண்டு கடிதத்தைக் கொடுக்க வேண்டும்.
நிதிச்சேகரிப்புக்காக நிதி புறப்பட்டுப் போனான். இவன் தனது முகாம் பொறுப்பு வேலைகளை அட்டவணையிடும் வேலையில் மூழ்கிப்போனான்.
_ _ _ _ _ _ _ _ _ _ _
விசாரணை. முகம் கறுக்க கைகட்டி நின்றான் நிதி.
'எப்படி வசந்தியக்காவிடம் நிதி பெறமுடியும்? " என்று கேள்வியெழுப்பியிருந்தான்? தன்னால் அவ்வாறானதொரு செயலை செய்ய முடியாதென்றும் வசந்தியக்கா எம்மால் விதவையாக்கப்பட்டவள் என்பதையும், அதுகூட அவருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் காரணங்களாக நிறுத்தியிருந்தான்.
விசாரணை ஆரம்பித்த வேகத்திலேயே முடியவில்லை.
நிதியின் காரணங்கள் நம்மைப்போல ஒரு சாராருக்கு ஏளனமானது. இன்னொரு சாராருக்கு நியாயமாகியது. அவனுக்கு வலுவற்ற நியாயத்தை நிதி வென்றேயாகவேண்டும்.
முயற்சி வினை திருவினையாகியது. நிதி விலத்தலாம். ஆனால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட சகல பொறுப்புக்களையும் ஒப்படைக்கும்வரை அவர் முகாமிலேயே இருக்க வேண்டும்.
அவன் உடைந்து வீழ்ந்தான். நிதியின் கையிலிருந்த பொறுப்புக்கள் இன்னொருவன் கைக்கு
மாறியது. இன்னொருவனுக்கும் அவனுக்குமான உறவு தொடங்கப்பட வேண்டும். அதற்கிடையில்
அவனுக்கெதிராவே மாறுதல்கள் வந்து நின்று விடக்கூடும்.
நிதியை ஒரு மூலையில் தூக்கி போட்டுவிட்டார்கள். மற்றவர்களுடன் குதூகலித்தான். ஆனால்
அவனுடனான உரையாடல் விறைத்துப்போயிற்று. ஒருவேளை நன்மையாகவே இருக்கலாம்.
நிதியின் பொறுப்பை கையேற்ற இன்னொருவன், அவனுக்கும் நிதிக்குமான உறவின் நீள, அகலத்தை, கனஅளவை அறிவதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம். இதனுடைய பெறுமானங்கள் ஒன்றும் இல்லை என்றால் தான் திருவினையாக அமையலாம்.
காலம் காய்த்ததோ என்னவோ பேச்சுவார்த்தையில் எதிரியணி படைகள் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வாபஸ் ஆகியது.
மழைவெள்ளம் போட்டு ஆறாகப் பாய்ந்தோடிய அடையாளங்கள் முழுமையாக இன்னும் மறையவில்லை.
அடித்த மழைவெள்ளத்தில் அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகளும் அள்ளுண்டு போயிற்று.
இவர்கள் பின்வாங்கும் போது அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியை மண்ணுக்குள் பவுத்திரமாக மறைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். இன்று அதனை நிதி எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு, விடைபெற்று போய்விடலாம்.
வீட்டில் தாய், தந்தையர் மட்டும் தானா குதூகலிப்பார்கள்! ஏன் நீங்கள்?
இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
'வெட்டுங்கோ"
மனநிறைவு கொள்ளும் தறுவாய். அவனிடமிருந்து வரும் ~டா, டோ| என்பவையெல்லாம் மறைந்து ~கோ| ஆனது.
மண்வெட்டிகள் ~பொத்துப்பொத்|தென்று பூமிக்குள் இறங்கின. மண் குவியலாகிக் கொண்டிருப்பதைக் கண்டு நிலைதடுமாறினான் நிதி.
கிடைத்தே தீருமென்ற வைராக்கியத்தில் அவன். கண்கள் மங்கிமங்கி ஒளிவீசின, மண் மலையாக ஆகிக்கொண்டிருந்தது.
வட்டமாக வெட்டிய குழியில் எந்த அசுமாத்தமுமில்லை.
நிதி எவ்வாறு? எங்கே? எப்படிப் போனது? வியர்த்து விறைத்து விறுவிறுத்துப் போனார்கள் - அவன், நிதி பன்மடங்கு குழம்பி கூழாகி தடுமாறி பூமி சுற்றும் வேகம் அவன் மனக்கண்ணில்.
நிதியின் பொறுப்பை ஏற்றிருந்த இன்னொருவன் அவனைப் பிடித்து உலுக்கி ~வோக்கியை| அவன் கையில் கொடுத்தான்.
'ஆளப் போடு"
'......."
'டே"
'இல்லயண்ண, கொஞ்சம் பொறுத்து, விசாரிச்சு...."
'போடுறா பிண்டமேன"
~வோக்கி|யின் கட்டளை காற்று வழி வந்து, செவி வழி புகுந்து கண்கள் இரத்தச் சிவப்பாக, கருவிழி கரைந்தொழுக ~பிஸ்டலை| கை பற்றிக்கொண்டது.
இனியென்ன திருவினை வினையாகியதில் நிதியின் கண்களை காணும் சிறுதுளி துணிவற்றவனாய் அவன் நிமிர, ஒரு மின்னலின் வேகத்தில் பார்வைகள் கலந்து ஆயிரம் கேள்விகளை சிந்திவிட தலைகுனிந்தான் நிதி. இறுதியாக நாவே எழவில்லை, கதை எங்கே!
ஆவிபிரியும் நிலையில் அவன் தன்னை நிறுத்தினான். நிறுத்தியே ஆக வேண்டும்.
குவிந்துகிடந்த மண்குவியலில் நிதி உறங்கினான். விழிகள் குத்துண்டு நிக்க. மண்ணுக்கென்ன தாகமோ அவன் தலையிலிருந்து சொட்டுச் சொட்டாய் விழும் வியர்வையை உறிஞ்சிக்கொண்டிருந்தது.
குழிக்குள் கிடத்தி மூடிவிடும் முயற்சியில் தோற்று, வட்டவடிவமான குழியை நிதியின் நீட்டத்திற்காக நீட்டிக்கொண்டிருக்கும் போது, ஓங்கி இறக்கிய மண்வெட்டி போன வேகத்தில் பன்மடங்காக எகிறிப்பாய்ந்தது.
~பிஸ்டலை| தரையில் விட்டெறிந்து குழிக்குள் குதித்து மண்வெட்டியை வேண்டி ஓங்கி இறக்கினான் அவன். தடுமாறிப் புதைந்த மண்வெட்டியை முழுப்பலமும் கொண்டு அள்ளி எத்தினான்.
காற்றின் குதூகலிப்பில் பண நோட்டுக்கள், பவுண்கள் இங்குமங்குமாக ஆடி ஆடி தரை நோக்கி!
வாய் பிளந்து கதறிக் கதறிக் கண்கள் குழிக்குள் அவன்
நீங்களும்
நிதி
நீதி
|