ஜெரெனியம் செடிகளின் துயரம்
ஜேர்மன் மூலம்: வோல்ஃப்காங் போர்ஷட்
தமிழில்: சந்துஷ்
(வோல்ஃப்காங் போர்ஷட்: கவிஞரும் சிறுகதையாளனும் நகைச்சுவையாளருமான 1921ல் ஜேர்மனி Hamburg இல் பிறந்த Wolfgang Borchert, 26 வயதில் முடிந்துபோன தன் குறுகிய வாழ்வில் காத்திரமான சின்னஞ்சிறு படைப்புகளால் முக்கியமானவர். சிறிய ஆனால் ஆழமான பல படைப்புகள் வாழ்வின் அர்த்தங்களை, துயரங்களை, மர்மங்களை சிலாகிக்கின்றன. வாழ்வின் ஆழங்களை விசாரிப்பது Borchert இன் எழுத்துகளின் தனித்துவம். அவரது படைப்புகள் குறுகியவை, ஆழமானவை.)
அவர்கள் முதலில் சந்தித்துக்கொண்ட பொழுது இருட்டிவிட்டிருந்தது.
அவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள், அவனும் அவள் வீட்டிற்குச் சென்றான்.
அவனுக்கு அவள் தனது வீட்டைக் காண்பித்தாள். தனது மேசை விரிப்பை, படுக்கை விரிப்பை, கோப்பைகளை, முள்ளுக்கரண்டிகளைக் காண்பித்தாள்.
ஆனால் அவர்கள் அந்தப் பகல் வெளிச்சத்தில் எதிரெதிரே அமர்ந்தகொண்டபோது, அவன் அவளது மூக்கினைக் கண்டான்.
அவளது மூக்கு தைக்கப்பட்டிருக்கிறது என அவன் நினைத்தான். அது மற்றைய மூக்குகளைப் போலல்லாமல் இருந்தது. ஒரு தோட்டத்துக்கனியைப் போல. ஓ. . அந்த மூக்குத்துவாரங்கள் அவை ஒரு சமச்சீராக இல்லையே. அவைகளின் இடையில் ஒற்றுமை இல்லை. ஒன்று ஒடுக்கமாகவும் முட்டைவடிவமாகவும் மற்றையது ஒரு பாதாளம் போல. அவன் தனது கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்தான்.
'வெக்கையாக இருக்கிறது இல்லையா?" அவள் ஆரம்பித்தாள்.
'ஓம்" என்றவன் அவள் மூக்கைப் பார்த்தான்.
அது தைக்கப்பட்டிருக்கவேண்டுமென மீண்டும் நினைத்துக்கொண்டான். முகத்தில் அந்த மூக்கு அந்நியமான ஒன்றாகவிருந்தது. அதன் நிறம் அவள் தோளின் நிறத்திலும் மிக்க வேறாகவிருந்தது. அந்த மூக்குத் துவாரங்கள் மெய்யாகவே ஒற்றுமை அற்றிருந்தன அல்லது ஏதோவொரு புதுவிதத்தில் ஒற்றுமை கொண்டிருந்தன. பிக்காசோவினுடையவைபோல்.
அவன் அதைச் சொன்னான்.
'யாரைச் சொல்கிறாய் பி-கா?"
'இல்லை அவனில்லை" என்று முணுமுணுத்தான்.
அவளுக்கு விபத்து ஏதும் நடந்ததா என வினவினான்.
'ஏன் கேட்கிறாய்?"
'ஆகா. இந்த மூக்கிற்காக அப்படி நினைக்கிறாயா?"
'ஓம் ஓம். மூக்கிற்காகத்தான் கேட்கிறேன்."
'இல்லை. அது எப்பவும் இப்படித்தான்."
'அடக்கடவுளே" எனச் சொல்ல நினைத்தவன் சொல்லவில்லை.
'உண்மையாகவா?" என்றான். வியந்தான்.
நான் உண்மையில் ஒரு ஒற்றுமையான ஒரு மனுசி. அவள் காதோடு கிசுகிசுத்தாள். நான் சமத்தன்மையை எப்படி நேசிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. என் ஜன்னல்கட்டில் உள்ள ஜெரெனியம் செடிகளைப் பாருங்கள், வலப்புறத்தில் ஒன்று இடப்புறத்தில் ஒன்று. ஒரு சமச்சீராக. என்னை நம்புங்கள். எனக்குள் நான் வேறுவிதமானவள். நிறைய வித்தியாசமானவள்.
அவள் அவனது கைகளைப் பற்றினாள். அவளின் மிரண்ட விழிகளின் நெருக்கம் பிடரிவரை உருகி ஓடுவதை அவன் உணர்ந்தான்.
நான் குடும்பவாழ்வை விரும்புகிறேன். ஒருவருடன் சேர்ந்து வாழ்தலை ஏற்றுக்கொள்கிறேன். மெல்லிய குரலில் இதைச் சொன்னாள்.
சங்கடப்பட்டாள்.
'அவற்றிலுள்ள சமத்தன்மைக்காகவா?" என்று வினவியவனை,
'அவற்றிலுள்ள ஒற்றுமைக்காக"என்று திருத்தினாள்.
'மெய்யாகவே அதிலுள்ள ஒற்றுமையை விரும்பலாம்" என்றான்.
அவன் எழுந்து கொண்டான்.
'நீங்கள் போறீங்களா? "
'ஓம்"
அவள் வாசற்கதவுவரை வந்தாள்.
'உண்மையில் உள்ளுக்குள் நான் வேறு விதமானவள்" அவள் மீண்டும் அந்தப் பேச்செடுத்தாள்.
'உள்ளுக்குள் நீ அந்த ஜெரெனியம் செடிகளைப் போலச் சமச்சீரானவள், நிறைய சமத்துவமானவள், அதைத்தானே சொல்கிறாய்? "
அவன் படிகளில் இறங்கிச் சென்றான். திரும்பிப் பார்க்கவில்லை.
அவள் ஜன்னலருகில் நின்று அவனைப் பார்த்தாள்.
அவன் கீழே நின்று கைக்குட்டையால் தன் நெற்றியைத் துடைப்பது தெரிந்தது. ஒருமுறை. இருமுறை. இன்னொருமுறை. ஆனால் அவன் துடைத்;துவிட்டு நிம்மதியாகச் சிரித்ததை, கண்களை நீர் மறைத்திருந்ததால் அதை, அவள் காணவில்லை. அந்த ஜெரெனியம் செடிகளும் சோகமாக நின்றன. அவற்றின் வாசம் மட்டும் மாறாதிருந்தது.
|