உன்னால் என்ன செய்ய முடியும்?

செந்திரு - தமிழ்நாடு

 

பேராசையின் பெருஉருவமே!
உன் செயல்கள் ஒவ்வொன்றும்
ஆதிக்க அருவருப்பை
உந்தன் அறியாமையை
ஆணியடித்துச் சொல்கின்றன.
பழிவாங்கி விட்டதாய்
கல்லறைகளை எண்ணி
கர்வப்படாதே.
கல்லறைகளே
எங்கள் கருவறைகள்
நாங்கள் உயிரணுக்கள் என்றுமே!
உருக்குலைக்க முடியாது.
உன்னால் என்ன செய்ய முடியும்?
உயிரைப் பறிக்கும் நீ
உணர்வைப் பறிக்க முடியுமா?
யாதென் ஊர்? யாவர் கேளிர்? என
அகதியாக்கலாம் அநாதையாக்கலாம்
ஒருபோதும் அடிமையாக்க முடியாது.
தண்ணீர் பிரித்தாலும்
செந்நீர் இணைக்கும்
தன்மான நெஞ்சங்களை...
தரம் தாழ்ந்து விடவில்லை.
தலை சாய்த்து விடவில்லை
இன்றைய இழப்புக்கள்
நாளை உயிர்ப்புக்களாகுமென
உரமேற்றிக் கொள்கிறோம்.
நீயும் மனிதகுலம் என்பதையும்
மறந்தால்...
உன்னை இனி
நாங்கள் மறக்கவேண்டி வரும்.
உன்னைப்போல வெடிகுண்டல்ல
எரிமலை நாங்கள்
எச்சரிக்கையாய் இரு...