அதனால் தான்...

சேரிமின்னல் - பெருங்குடி-22


நாங்கள்
கடவுளின் குழந்தைகள்
அதனால்தான்
இன்றும் கருவரைக்குள் நுழையமுடியவில்லை

அசுத்தம் என்னும்
சொல்லுக்கு சொந்தக்காரர்கள்
அதனால்தான்
தெருக்களைச் சுத்தம் செய்கிறோம்

உழைப்பு எங்களுக்கு
ஊதியம் அவர்களுக்கு
அதனால்தான்
வறுமையில் வாடுகின்றோம்

மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்
அதனால்தான்
தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

தொலைந்த முகவரியைத்
தேடுகிறவர்கள் நாங்கள்
அதனால்தான்
இன்றும் தீவிரவாதிகள்

இரத்தத்தை வேர்வையாக்கினோம்
நாங்கள்
அதனால்தான்
அவர்கள் அகராதியில் காட்டுமிராண்டிகள்

தேசப்பற்று எங்களுக்கு
உரிமை மட்டும் அவர்களுக்கு
அதனால்தான்
தியாகிகளானோம்

சகிப்புத்தன்மைக்காரர்கள்
நாங்கள்
அதனால்தான்
இன்னும் ஒடுக்கப்பட்டுள்ளோம்

மற்றவர்கள் உயர
பாடுபட்டோம் நாங்கள்
அதனால்தான்
இன்றும் தாழ்த்தப்பட்டோர்...