காற்றடித்து விழுந்த கொப்பில்
பூவும் பிஞ்சுகளும்
இளந்தளிர்கள் வெயிலுக்கு முகம் வாடி
மெல்லமெல்ல நிலத்தில்
உதிர்ந்து ஓடி விளையாடும் பிள்ளைகளின் கால்களுக்கு
ஒட்டும் பொட்டாகிச் சிதையும்
தாய்மரத்தில் சீழ் ஒழுக
யாரிவன், மாட்டைக் கூட்டிவந்து மேயவிட்ட பூமனத்தாபன்
அடிமரத்தில் அணில் இருந்து
குதித்தோட முடியாமல்
விக்க, பதிலுக்கு கத்துதல்போல் பசிதீர்ந்த
மாடு சத்தமிடும்
'மா"
மா மா மா
என் பொன் அணிலே
சற்று கவனமாய் இறங்கு மரம் சறுக்கும்
தாவக் கிளையில்லை
என் வீட்டிற்குள் நிறைய ஒட்டறைகள் கவிந்து
பார்க்க ஒரே அசிங்கம்
வந்து துடை உன்னுடைய வாலால்
சின்ன ஓலைக் கூந்தல்
என் இல்லத்தின் ஒட்டறையை
அப்படியே அப்பும்
அந்த மரம் தளைக்க நாளாகும்
உலகம் மொட்டை மயம்