மாக்சியத்தினூடு இலக்கியம்

தமிழரசன்

மனிதகுலம் முதன்முதலில் கலைஇலக்கியம் ஊடாகத்தான் தன்னைத் தரிசித்துக்கொண்டது. மனிதர்கள் இயற்கைச் சக்திகளை கற்பனையாக அடிமைப்படுத்த முயற்சித்தபோதும் அதன் புதிர்களை மர்மங்களை விளங்கிக்கொள்ளப் போராடியபோதும் அதிலிருந்து எழுந்ததே மனித இனத்தின் தொன்மை இலக்கியச் செல்வங்களாகும். இவை மனிதகுலத்தின் இளமைக்காலத்தின் வாழ்வு, அனுபவம், போராட்டம், கற்பனை இவைகளின் தொகுப்பாகும்@ வெளிப்பாடாகும். மனிதன் என்றால் உழைப்பு என்று பொருள். உழைப்பின்மூலமே மனிதன் தன்னை நிறுவிக்கொள்கிறான். மறுஉற்பத்தி செய்துகொள்கிறான். இந்த உழைப்பானது வெறும் பொருளியல்வகைப்பட்டதல்ல. உயிர்வாழ்வின் அடிப்படையில்மட்டும் கோரப்படுவதல்ல. கலாச்சாரமடைவதின் விளைவாய் மனிதன் தன் சிந்தனையை அழகுணர்வை இலட்சியங்களாய் பலசமயங்களில் கற்பனைகளால் பதிவுசெய்து கொள்கிறான். எனவேதான் மாக்ஸ், இலக்கியம் மனிதகுலத்தின் தாய்மொழி என்றார். பண்டைய கலைச்செல்வங்களை அன்றைய மனிதனின் ஆளுமைக்கு அழகுணர்வுக்கு அடையாளமாய்க் கொள்வதோடு பிற்கால அரசியல் சித்தாந்த, சமூக, கலைவடிவங்களுக்கும் அடித்தளமிட்டன என்ற வரலாற்றுண்மையிலிருந்தே மாக்சியம் புறப்பட்டது. மனிதர்கள் வர்க்கங்களாக, இனங்களாக, மதக்குழுக்களாக வேறுபட்டு இருக்கும் அதேசமயம் மனிதர்களுக்குரிய பொது அம்சங்களையும் கொண்டிருக்கிறார்கள். இங்கு மாக்சியம் வர்க்கமனிதனைமட்டும் பேசுவதில்லை. பொதுவான மனிதகுல வளர்ச்சிகளையும் போக்கையும் பேசுகின்றது. கலைகளும் இன, மத, வர்க்க அடிப்படைகளில் வேறுபடுகின்றன. இக்கலைகள் இந்தியக்கலைகளாய அரபு, எகிப்து, சீன கிறீஸ் என்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து, பௌத்தம் என்றோ, முதலாளிய, நிலப்பிரபுத்துவ, பாட்டாளி வர்க்கக்கலைகள் என்று வேறுபட்டாலும் அவையாவும் கலைகள் என்ற பொதுக்குணாம்சத்தில் அடங்குகின்றன.

பண்டைய கலைவடிவங்கள் முதல் இன்றைய கலைவடிவங்கள்வரை ஆயும்போது அவற்றின் வர்க்கச்சார்பை மட்டுமல்ல. அவை சமூகமுன்னேற்றத்தின் விதிகட்கு ஏற்ப வளர்வதையும் இருக்கும் சமூகஅமைப்பை கேள்விக்குள்ளாக்குவதையும் அதனோடு முட்டிமோதுவதையும் முரண்படுவதையும் கண்டுகொள்ளாமலும் அவற்றின் அழகியலை கண்டுணராமலும் நுகராமலும் நகரமுடியாது. வெறும் வர்க்கப்பார்வையைப் பொருத்தி பாட்டாளிகளைப் பாடாத இலக்கியம் யாவும் பிற்போக்கு என்பது ஒருபோதும் மாக்சியமல்ல. 'ஒரு கலைப்படைப்பு தன்சொந்த அழகியல் விதிகளால் படைக்கப்படவேண்டும்" ஆனால் மாக்சியம் மட்டுமே ஒரு கலையின் தோற்றத்துக்கான சமூகக்காரணிகளை விளக்கமுடியும் என்பதே சரியான பார்வையாகும். கலை ஒரு வர்க்கக்கண்ணோட்டத்துடன் மட்டுமே இயங்குகின்றது பிரச்சாரம் செய்கின்றது. சார்புநிலையோடு இயங்குகின்றது என்ற நேர்கோட்டுத் தத்துவங்கள் ஸ்டாலின்காலம் உற்பத்தி செய்த கொச்சை மாக்சியப்போக்காகும்.

மாக்சின் எழுத்துக்கள் இலக்கியத்துடன்தான் தொடங்கின. இறுதிக்காலம்வரை அவரின் சகல எழுத்துக்களிலும் அவரின் பரந்த இலக்கிய அறிவின் பரப்புகளைத் தரிசிக்கலாம். கலையை ஏனைய உழைப்புத்துறைகளைப்போன்று ஒரு மனித உழைப்புத்துறையே என்று மாக்ஸ் மதிப்பிட்டார். மாக்சிய சிந்தனையை, சமூகம், பொருளாதாரம், அரசியல் தத்துவம் இவைகளை உள்ளடக்கியதாகவோ அல்லது இவற்றின் கூட்டுக்கலவையாகவோ காண்பவர்கள் மாக்சின் இலக்கியச் சிந்தனையையும் இரசனையையும் தவறவிட்டுவிடுகிறார்கள். இயற்கைவிஞ்ஞானம், வரலாறு, அரசியல் வரலாறு, சட்டம், விஞ்ஞானம், கலையின் வரலாறு, மதத்தின் வரலாறு என்று சகலதையும் உள்ளடக்கும் மனிதவரலாற்றையே மாக்ஸ் பதிவு செய்தார். கலைக்கும் உழைப்புக்குமிடையேயான உறவு, கலைகளின் சமூக மற்றும் அரசியல் அனுபவங்கள், கலையின் வர்க்க அடிப்படை, வர்க்கம் கடந்த நிலை, கலையின் காலம்கடந்த மற்றும் காலம் சார்ந்த நிலை, முதலாளிய சமூகத்தில் சந்தைப் பொருளாகும் கலை இவைபற்றி விரிவாக மாக்ஸ் ஆராய்ந்துள்ளார். மனிதவாழ்வின் அழகியற் கூறுகளோடும் மனிதனை மனிதனாக்கும் கலை குறித்தும் மாக்ஸ் தீவிரம் காட்டினார்.

மாக்ஸ் இலக்கியத்திடம் தத்துவத்தை எதிர்பார்த்தவரல்ல. 'பொருட்கள்பற்றிய மனிதஉணர்வு மனிதனின் புலங்களில்மட்டுமே தங்கி நிற்கின்றது. இசைவயப்படாத காதுக்கு மிக இனிமையான இசைகூட அர்த்தமற்றது. பொருள்வயமான உலகின் புலன்கள் மனிதனின் தன்னறிவுக்கும் இருப்புக்கும் உதவுகின்றன." புலன்கள் நமது செயற்பாடுகளின் நேரடியான தத்துவஞானிகளாக மாறியிருக்கின்றன. மனிதனின் சுயங்களின் போராட்டத்திலிருந்தே அழகியல் உணர்வு எழுகின்றது" என்கிறார் மாக்ஸ். கெகல் மனிதனை சிந்திக்கும் உயிரி என்று குறுகத் தறித்துக்கொண்டபோது 'புலனுணர்வுகள் கொண்ட உயிரினம் என்ற அடிப்படையிலும் மனிதன் உயர்ந்தவன்" என்பார் மாக்ஸ்.
மாக்ஸ் இளமைக்காலத்திலேயே ஹோமர், பிளாட்டோ, தூசி டெடிஸ், சிசரோ சோபாக்கிளிஸ், டாசிடெஸ், சேக்ஸ்பியர் ஆகியோரில் மூழ்கி எழுந்தவர். இலக்கிய விடயங்களில் பள்ளியில் முதல் மாணவராக இருந்த மாக்ஸ், டீழnnஇ டீநசடin பல்கலைக்கழகங்களில் பயின்றகாலை சட்டம், தத்துவம், வரலாறு இவைகளோடு இலக்கியத்தையும் சேர்த்தே கற்றார். கவிஞன், இரவுக்காதல் போன்ற கவிதைகளையும் ஜென்னிக்கு எழுதிய கவிதையையும் மாக்ஸ் இளம்வயதில் இயற்றினார். மனிதப்பெருமையில் புகழ்பெற்ற கிறீசின் இலக்கியப் பாத்திரங்களை உதாரணம் காட்டுகின்றார்.

பாறையில் கட்டுண்டு கிடந்த புரோமத்தியூஸ் கடவுளின் சேவகனான ஹெர்மிசிடம் 'ஒன்றை உறுதி செய்துகொள். என்னுடைய இந்தத் துயரநிலையை உன்னுடைய அடிமைத்தனத்துக்கு மாற்றீடு செய்துகொள்ள மாட்டேன். பிதாவான சிசியூசின் நம்பிக்கைக்குரிய வேலையாளாக இருப்பதைவிட இந்தப்பாறையின் அடிமையாக இருப்பதேமேல்."என்ற புரோமத்தியூசின் தன்னுணர்வையும் சுதந்திர அவாவையும் வெளிக்கொணர்கின்றார். நெருப்பைக் கடவுளிடம் இருந்து திருடி மனிதர்கட்கு வழங்கிய புரோமத்தியூஸ் மனிதஅறிவின் அடையாளமாயும் அடிமைத்தனத்துக்கு எதிராய்ப்போரிட்ட ஸ்பார்ட்டகோசையும் மாக்ஸ் பலதடவை நினைவு கூர்கின்றார். ரூசோ, வால்டேர், ஹோல்பாக், லெஸ்சிங், கென்றிச்கெயின், கான்ட், விங்கிள்மான், கதே, சில்லர், ஷ்லெகல் திதரோ, தாந்தே இவர்களைப் புலமையோடு கற்று தன் முழுப்படைப்புகளிலும் படரவிட்டவர். 1844இல் எழுதிய பொருளாதாரத்துவம் சம்பந்தமான கையெழுத்துப்பிரதிகள், அரசியல் பொருளாதார விமர்சனம் முதல், உபரிமதிப்பு, மூலதனம் ஈறாக அவரின் சகல எழுத்திலும் இலக்கிய ஆளுமையின் சுவடுகளைக் காணலாம். கிரேக்க ஆன்மீகச் சிந்தனையிலிருந்துதான் அரிஸ்டோட்டிலின் தத்துவச்சிந்தனையும் கான்ட, பொயபார்க், கெகல் போன்றவர்களின் கருத்துமுதல்வாதப்போக்கிலிருந்துதான் மாக்சியமும் தோன்றின என்பதை இன்றைய தீவிர இடதுசாரிக் காய்ச்சலில் கிடந்து உழல்பவர்களும் ஸ்டாலினின் அரசியல் பாரம்பரியங்கட்கு தம்மை ஒப்புக்கொடுத்தவர்களும் உணர்ந்துகொள்ள பிடிவாதமாய் மறுக்கின்றார்கள். மாக்ஸ் தம் வௌ;வேறு படைப்புகளில் அவர் பாண்டித்தியம் பெற்றிருந்த ஜெர்மன், பிரெஞ்சு, ரஸ்ய, ஸ்பானிய, இத்தாலிய, கிறீஸ், லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் தலைசிறந்த இலக்கியங்களின் மேற்கோள்களை எங்கும் காணமுடியும். நாடகம், கவிதை, நாவல், பழம்பெரும் காப்பியங்கள் என்பன மாக்ஸ் இறுதிவரை நேசித்த விடயங்களாகும். அவரின் தனிவாழ்விலும் அழகியல் மிகப்பெரும்பங்கு வகித்ததை அவரின் மகள் உட்படப் பலர் குறித்துள்ளனர்.

மாக்சியத்தை வெறுமனே ஒரு இயந்திரக் கோட்பாடாயும் உயிரற்ற போக்காயும் மறுபுறம் சமரசவாதமாயும் சீர்திருத்தவாதச் சதிராட்டங்களிலும் வழிதவறவிடப்பட்டுள்ள இக்காலத்தில் மனித இருப்பின் எந்தத்துறையும் மாக்சியத்துக்குப் புறம்பானதல்ல. கவிதை, நாடகம், இலக்கியம், நவீனஓவியம், திரைப்படம் ஆகிய சகல கலைவடிவங்களையும் தத்துவரீதியில் அதன் உயர்மட்டங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். இன்றைய கலை கலைக்காகவே என்ற சித்தாந்தக் கோவணாண்டிகளையும் அரசியல் சூனியத்தில் உலாவுவோரையும் மறுபுறம் கலைகளை முற்போக்கு பிற்போக்கு வெட்டொன்று துண்டு இரண்டாகப் பிளந்தெறிவோரையும் விலத்தி இலக்கியத்தை மிகச் சரியாகக் கண்டுயிர்த்து மனிதத்தினதும் உலக கலாச்சாரத்தினதும் படிகளாக மாற்றவேண்டும்.

மனித அறிவுடனும் தார்மீகத்துடனும் மட்டுமின்றி கண்ணுடனும் காதுடனும் கோரிக்கை வைக்கும் காட்சி, ஒலி வடிவங்களே இலக்கியம் எனும் மாக்ஸ் 'பிரான்சில் வர்க்கப் போராட்டத்தில் விவசாயிகளை கற்பனாவாதப்படுத்திய கிராமிய வாழ்க்கையை இலட்சியமயப்படுத்திய தோமர், ஓவர்பார்க் போன்ற கிராமியம் சார்ந்த எழுத்துக்களை விமர்சிக்கின்றார். ஜெர்மனிய சில்லருக்கு எதிராக சேக்ஸ்பியரின் பாத்திரச் சித்தரிப்பை பாராட்டும் மாக்ஸ், சேக்ஸ்பியரிடம் வர்க்கப்பார்வை இல்லை@ எனவே அவர் ஒரு சரியான கவிஞரல்ல என்றவர்களை மரமண்டைகள் என்று மாக்ஸ் நையாண்டி செய்தார். சேக்ஸ்பியரின் பாத்திரங்கள் யதார்த்த மனிதர்களுக்கும் அவர்களின் பௌதீக அக்கறைகட்கும் இடையேயான போராட்டச் சித்தரிப்பு என்பதை அடையாளம் காண்கின்றார். கதேயின் எழுத்துக்களில் மத்தியதரவர்க்கத்தின் பதட்டத்தினை டாரதி தோன்றும் கிராமியம் சம்பந்தப்பட்ட சித்தரிப்புக்களில் உள்ளதைச் சுட்டுகிறார். இத்தாலிக் கவிஞன் தாந்தேயின் நரகம்பற்றிய வர்ணனையை விக்டோரியா அரசிகாலத்து தீப்பெட்டித்தொழிற்சாலை நிலைமைகளோடும் ஹோமரின் ஓடிசில் வரும் பாதாள உலகப் பயணத்தில்கண்ட ஆவிகளின் துன்பப்படும் நிலையை தமது காலத்து உழைக்கும் மனிதனின் துன்பத்தோடு ஒப்பிடுகின்றார். ஓவியக்கலையைப்பற்றிப் பேசும் மாக்ஸ் ராபேலின் கலையை ஃபிளாரண்டைன் செல்வாக்குக்குட்பட்ட ரோமாபுரியுடனும் லியனார்டோவின் கலையை ஃபிளாரன்சின் போக்குகளுடனும் தொடர்புகொண்டு காட்டுகிறார். இலக்கியத்தில் நிதானமாகவும் மென்மையான படிமங்களின் ஊடாகவும் செல்லும் பழைய கவிஞர்களின் போக்கு முடிவடைந்து புதிய நவீனமான யதார்த்த நிலைமைகளை வெளிப்படுத்த அதற்கு வலுவான புதிய மொழிநடை வேண்டுமென்கிறார் மாக்ஸ்.

இலக்கியம் அதன் காலத்திய அதிகாரவர்க்கத்தின் மேல் வர்க்கங்களின் சிந்தனையின் பிரதிபலிப்பு என்ற கருத்தை மாக்ஸ் முழுமையாய் ஏற்கவில்லை. ஒரு உண்மைக் கலைஞன் வர்க்கக்கட்டுமானங்களையும் தன்னுணர்விண்றித் தாண்டமுடியும். அப்பால் செல்லமுடியும். மனித அவலங்களை ஒடுக்கப்படும ;மக்களின் துயரங்களை வெளியிடமுடியும் என்று கண்டார். தூய அழகியல்வாதிகளின் பொய் அழகுகளை எரிக்கவும், வெறும் பிரச்சாரத்துக்காக எழுதப்படும் இலக்கியத்தைத் தோலுரிக்கவும், அதேசமயம் திறனும் உண்மையுமுள்ள எழுத்தை விமர்சித்து முன்னெடுக்கவும் மாக்ஸ் முயன்றவர். கென்றிச் கெயின், கியார்க், ஹேர்வேர் போன்ற மக்கள்கவிஞர்களிடம் சோசலிசப் பண்பாட்டின் ஒளிக்கீற்றுக்களைக் கண்டார். கென்றிச் கெயினயின் நெசவாளியின் பாடல்கள் பழைய நாட்டுப்புறப்பாடல்களின் வீரியத்தோடு புதிய தொழிலாளர் பண்பாட்டின் மூலஊற்றுக் கொண்டுள்ளதாய் பாராட்டினார்.

முதலாளித்துவம் கண்டதையெல்லாம் விற்பனைச் சரக்காக்கியது. இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. இலக்கியம் இலாபம் தரும் பொருளாகிவிட்டதையும் சுரண்டும் ஒடுக்கும் வர்க்கங்கட்கு நேரடியாகவே தொண்டுசெய்யும் நிலைக்கு இறங்கிவிட்டதையும் அதனால் இயற்கையோடும் மனிதவாழ்வோடும் கொண்ட கலையின் உறவுகள் அலங்கோலமாயின. சமூகத்தில் பணத்தின் ஆதிக்கம் வளர வளர கலைகளின் மேல் வெறுப்பு அதிகமாகி மனிதனை அவனின் கலை மரபுகளிலிருந்து முதலாளித்துவம் விலக்குகின்றது. எனினும் உண்மைக்கலைஞன் நவீன சமூகத்தில்கூட ஆளும் வர்க்கத்தின் அடிமையாகாமல் நாடுகடத்தலையும் சிறைவாழ்க்கையையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொண்டு இலக்கியம் படைக்கமுடியும். முதலாளியத்தில் வர்த்தகத்தேவையையொட்டி கலைஞர்கள் பிறக்கின்றார்கள். ஆனால் தரமான கலைஞர்கள் அநீதிகட்கு ஒப்புக்கொடுக்க மறுக்கின்றார்கள். சமூகத்தை ஊடுருவி உணர்ந்து நோய்க்குணத்தையும் முரணையும் அவலத்தையும் கண்டறிந்து அறிவிக்கின்றார்கள். போர்ப்பிரகடனம் செய்கின்றார்கள். தம் சுயங்களையும் சிந்தனைகளையும் நிலவும் அமைப்பின் நிர்ப்பந்தங்கட்கு விட்டுக்கொடுக்க மறுக்கின்றார்கள். ஆனால் சராசரி எழுத்தாளன் அதிகாரவர்க்க நடைமுறைகளைக் கேள்விகேட்கமாட்டான். சந்தேகிக்கமாட்டான். மாறாய் போற்றியே எழுதுவான். எனவே இங்கு உழைப்புப்போலவே கலையும் விற்பனைக்கானதாகிறது. எழுத்தன் தன்னையே எதிர்ப்பவனாயும் விற்றுக்கொள்பவனாயும் தம்சுயங்களை தொலைத்துவிட்டவனாயும் காணப்படுகின்றார்கள். கலையின் சாரமும் போக்கும் எதிர்த்தடிக்கப்பட்டுச் சீரழிகின்றது. கூலி எழுத்தர்கள் பொருளியல் சார்ந்த சமூக நிர்ப்பந்தங்கட்கு தம்மை அறியாமலே அடிபணிந்து சுரண்டும் வர்க்கங்கட்கு சித்தாந்தத்தொண்டு செய்பவனாகிவிடுகின்றார்கள்.

முதலாளித்துவம் மனிதர்கள் தமக்குள் போட்டியிடவும் வஞ்சித்துக்கொள்ளவும் கொள்ளையிடவும் பேராசையும் கணக்குப் பார்க்கும் குணமும் கஞ்சத்தனமும் கொண்ட விலங்குத் தன்மையுள்ள புதிய புதிய வழிகளில் பொருட்களையும் தேவைகளையும் பெருக்கிக்கொள்ளும் உயிரியாக மனிதனைக் குறுகச்செய்துவிட்டது. இந்த நிலைமைகளை எதிர்கொள்ளமுடியாமல் போலியான சமூகஉணர்வுகொண்ட அற்ப இலக்கிய வடிவங்கள் மனிதவிரோதத்திலும் சித்தாந்த விரோதத்திலும் தலையைப் புதைக்கும்போது உயர்ந்த கலைவடிவங்கள் சமூகவரலாற்றின் தேவைகளைஒட்டி வளர்ந்து எழுந்து முன்னேறும். இவைகள் யாவும் கட்டாயமாக சித்தாந்தங்களின் கட்டுத்திட்டத்துள் தம்மை அடக்கிக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் மனிதனின் அதிஉயர் சிறப்பான தேவைகளிலிருந்தே பிறக்கும். அது பொருளாதார பௌதிகத் தேவைகளையும் கடந்து மனித ஆவல்களைத் தேடல்களை பிரகடனம் செய்யும். முதலாளியம் உண்மையான கலையின் எதிரி என்ற மாக்ஸ் கலையை பொருளியல் ஆர்வங்களில் இருந்து விடுதலை செய்யும்போதுதான் அது தனக்கேயுரிய முழுமையான மனித ஆன்ம வெளிப்பாட்டினதும் இயற்கையினதும் மனிதனதும் செயல்களது தன்னியல்பான வெளிப்பாடாய் அமையுமென்றார்.

கலை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றோ சித்தாந்தத்தையும் தீர்வுகளையும் சொல்லவேண்டுமென்றோ மாக்சும், ஏங்கெல்சும் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவ்வாறு அமைவதை எதிர்த்தார்கள். அதை வாழும் அமைப்போடு மனித அறிவு நடாத்தும் போராட்டமாகவே கண்டனர். கலைஞன் கலையைப் படைத்தாலும் தனிமனிதன் சமூகம் சார்ந்தவனாயிருப்பதால் அவன் கலையும் சமூகம் சார்ந்ததே வரலாற்றுத்தன்மை வாய்ந்ததே. மாக்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் இலக்கியப்படைப்புக்கள்பற்றிக் கூறுகையில்,

1. இலக்கியம் இயன்ற அளவு யதார்த்தத்தை ஒட்டியிருக்கவேண்டும்.
2. அதற்கு உருவ அமைதியும் உள்முகத்தன்மையும் வேண்டும்.
3. வார்த்தை வித்தைகள் கவிதைக்கு பதிலீடாகாது.
4. வெற்று உருவவாதம் கலையின் எதிரி.
5. மகத்தான படைப்புகளை புதிய படைப்புகட்கு முன்னோடியாக்கலாம்.

தூயகலைவாதிகளின் கலை மனிதனின் ஆழ்மனத்தேடல், தெய்வீக உத்வேகம் என்ற கற்பிப்புகளைக் கடந்து போலியுணர்வுகளைத்தாண்டிச் செல்ல வேண்டியதை வழிநடாத்திய மாக்ஸ் இறந்தகாலத்தின் இலக்கியக் கலாச்சார மரபுகளை மறந்து மறுத்து ஒதுக்கி புதிய சோசலிச மனிதனின் கலாச்சாரத்தைப் படைக்கமுடியாது என்று நம்பினார். அத்தோடு இலக்கியவாதிகளின் கனவை நனவாகமாற்ற இலக்கியத்தைவிட வலிமைவாய்ந்த கட்டுறுதிகொண்ட சித்தாந்தத்தின் தேவை இருப்பதை எதையும்விட முன்மொழிந்தார். இலக்கியம் உட்பட பல்வேறுபட்ட போக்குகளை இலைகளாய்த் தாங்கிநிற்கும் மரமாகவே அவர் சித்தாந்தத்தைக் கண்டார்.

இத்தனை தெளிவோடு மாக்சிய மூலவர்கள் இலக்கியக் கொள்கையைக் கொண்டிருக்கையில் சோவியத் யூனியனின் லெனின் மறைவு, ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் இவைகட்குப் பின்னர் ஸ்டாலினியத்தின் தோற்றத்தோடு மாக்சியம் சம்பந்தமான இலக்கியக் கொள்கைகட்கு ஏற்பட்ட கெதியையும் அதன்பின்பான உலக இடதுசாரி இயக்கங்களிடையே ஏற்பட்ட இலக்கியம் சம்பந்தமான கொச்சை மாக்சியக் கருத்துக்களையும் தத்துவக்கேடான பார்வைகளையும் சற்றுப் பார்வையிடுவது இன்றைய திரிசங்கு சொர்க்க நிலைமைகளை எதிர்கொள்ள உதவும்.

இங்கிலாந்தின் சார்லஸ் டிக்கன்சின் நாவல்கள் இங்கிலாந்தின் எந்தச் சமூக பொருளாதார நிபுணர்களையும் விட சிறப்பாய் அக்காலத்தை வெளிப்படுத்தியதை மாக்ஸ் காட்டுகின்றார். பால்சாக்கின் எழுத்துக்கள் அவரின் இராஜ விசுவாசத்தையும்மீறி நெருங்கிவரும் நிலப்பிரபுத்துவ அழிவை முன்னறிவிப்பதை ஏங்கெல்ஸ் கவனிக்கின்றார். இதையொத்த போக்கையே லெனின் டால்ஸ்டாய் பற்றிய தமது ஆய்வுகட்குத் திறமையாய்ப் பயன்படுத்தினார். நசிந்துவரும் நிலப்பிரபுத்துவ அமைப்பின் போலித்தனத்தையும் விவசாயிகளது துன்பத்தையும் வறுமையையும் அடிமைத்தனத்தையும் அற்புதமாய் டால்ஸ்டாய் வெளிப்படுத்தியதைக் காண்கின்றார். டால்ஸ்டாயின் எழுத்து அவரது ஆன்மீகவாதத்தையும் தாண்டி மாபெரும் ஒக்டோபர் புரட்சியின் முக்கிய இயல்புகளை வெளிப்படுத்தியது. புஸ்கின் லெனினின் மனம் கவர்ந்த கவிஞர். பாட்டாளிவர்க்கத்தின் புகழ்பூத்த கவிஞன் மாயாகோவ்ஸ்கியைவிட லெனின் புஸ்கினையே நேசித்தவர். புஸ்கின் கவிதைகளில் அரசுக்கும் தனிமனிதனுக்குமுள்ள முரண்பாடுகளை அவர் கவனிக்கின்றார். அதனால்தான் நிலப்பிரபுத்துவ இலக்கியவாதி டால்ஸ்டாய், புஸ்கின் முதல் பாட்டாளிவர்க்க எழுத்தாளன் மாக்சீம் கார்க்கிவரை லெனினால் ஏற்க முடிந்தது. இலக்கியத்தின் சமூகக்கடமையையும் பரந்துவிரிந்த மனிதப்பரப்பையும் லெனின் மதிப்பிட்டு இருந்தார். புஸ்கினோடு, நெக்ரசோவ், வெர்மந்தோவ், சால்டிகோவ், ஸ்செட்ரின், கதே போன்றோரின் எழுத்துக்களிலிருந்து பேசும்போதும் எழுதும்போதும் மேற்கோள்கள் காட்டுவார். தனது சைபீரிய சிறைவாசத்தி;ன்போது ஃபான்ஸ்சை ஜெர்மன் மொழியிலும் துர்கனெவின் 12 தொகுதிகளை ஜெர்மனிய - ரஸ்ய மொழிகளிலும் பயின்றார்.

சோவியத் புரட்சியின் இரட்டையர்களான ரொட்ஸ்கியும் லெனினும் இலக்கியம் சம்பந்தமான பரந்த பார்வையைக் கொண்டிருந்தனர். சோவியத் யூனியனில் பல்வேறுபட்ட இலக்கியப்போக்குகளின் தேவையை முன்வைத்தனர். புதிதாக உதித்துள்ள சோசலிச சமூகத்தில் உடனடியாக பாட்டாளிவர்க்கத்தின் பண்பாட்டையும் கலையையும் உருவாக்கமுடியும் என்ற மயக்கங்கள் எதுவும் ரொட்ஸ்கியிடம் இருக்கவில்லை. அது சோசலிசத்தின் வளர்ச்சிப்போக்கில் தோன்றுபவை. எதிர்காலத்தில் வளர்ச்சிபெற்ற சோசலிச சமுதாயத்திற்குரியவை என்ற கருத்தைத் தெளிவாய்க் கொண்டிருந்தார். உடனடியாகவே உழைக்கும் வர்க்கத்தின் கலை என்ற வரட்டுவாதத்தை ஒதுக்கிய லெனினும் ரொட்ஸ்கியும் சோசலிசத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய சகல எழுத்துக்களையும் ஆதரிப்பதைக் கொள்ளையாக்கினார்கள். ரஸ்யாவின் புரட்சிக்கு முந்திய இலக்கியப் படைப்புக்கள் புரட்சி இலக்கியங்களையும் அவைகளின் இலக்கியத் தரத்தையும் அரசியல், சமூக வேறுபாட்டுணர்வுகளையும் விமர்சிக்கவும் வளர்க்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சித்தனர். யாவுக்கும் மேலாய் ரஸ்யாவினதும் ஏனைய மக்களினங்களதும் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை உள்வாங்கி ஜீரணிக்காமல் உயர்ந்த இலக்கியத் தரத்தை அளந்தறியாமல் செழுமையான பாட்டாளிவர்க்க இலக்கியங்களைப் படைக்கமுடியாது என்றனர். ரொட்ஸ்கி சகலவகையான புத்தம்புதிய இலக்கியப் போக்குகளையும் புரட்சியின் விளைபொருளாயே கண்டார். பல்வகையான சிந்தனைப்போக்குகளில் முட்டிமோதிக் கற்றுத் தேறியே புதிய சோசலிச மனிதனின் உயர்கலாச்சாரம் எழும் என நம்பினார். அவர் புரட்சியின் ஆதரவாளர்களான சகல இலக்கியவாதிகளையும் ~சக பயணிகள்| என்று அழைத்தார். முற்போக்கு இலக்கியவாதிகள் புதியநிலைமைகளில் ஏனைய இலக்கியப் போக்குகட்கு மத்தியில் தம்மை எழுத்து வீரியத்தினூடு நிறுவிக்காட்டவேண்டும் என்று எதிர்பார்த்தாரே தவிர விசேடசலுகைகள் ஊடாக அவர்களை செயற்கையாக உருவேற்றிவிட விரும்பவில்லை. இது தொலைநோக்கப் பார்வையின்பாற்பட்டது என்பதை சோவியத் வரலாறு பின்பு நிரூபித்துக்காட்டியது. நாடகம், இசை, நாட்டியம், சினிமா போன்ற சகல கலைவடிவங்களையும் சாதாரண மக்களுக்கு எட்டச்செய்வதும் கல்வியை சகலருக்கும் வழங்கி மக்களின் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதே மக்களின் இலக்கிய உணர்வை வளர்ப்பதற்கான முன்நிபந்தனை என்று லெனின் கருதினார்.

~புரோலிகல்ட்| என்ற கொம்யூனிஸ்டுகளை மட்டும் உள்ளடக்கிய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அமைப்பையிட்டு லெனின் அதிருப்தி அடைந்தார். இனவிருத்தி முறையில் எழுத்தாளர்களை உருவாக்கமுடியாது. புரட்சியின் இலட்சியத்துடன் ஒத்துழைக்கும் எல்லா அறிவாளிகளையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவர் ஆதரித்தார். இந்த நிலைப்பாட்டையே மாக்சிம் கோர்க்கி, மாயாகோவ்ஸ்கி உட்பட புரட்சி பெற்றெடுத்த பெரும்பகுதி கலைஞர்கள் கொண்டிருந்தனர். தன்னுடைய எண்ணப்படி சுதந்திரமாய் புறநிர்ப்பந்தம் எதுவுமின்றி எழுத ஒவ்வொரு இலக்கியவாதிக்குமுள்ள உரிமை உறுதிசெய்யப்பட்டது. கொம்யூனிஸ்டுகளும் கொம்யூனிஸ்டுகள் அல்லாத இலக்கியவாதிகளும் தத்தம் சொந்த அமைப்புகளை நிறுவிக்கொண்டனர். பத்திரிகை மற்றும் வெளியீடுகளைக் கொண்டு வந்தனர். புரோலிகல்ட், சிவப்புக் கன்னிநிலம், சகபயணிகள், பழைய எழுத்தாளர்கள், வெளிநாட்டிலுள்ள ரஸ்ய எழுத்தாளர்கள் என்று பலரின் பல படைப்புகள் வெளிவந்தன. மக்களிடையே இலக்கிய ரசனையும் வாசிக்கும் ஆர்வமும் இலக்கியங்களிடையே போட்டியும் எழுந்தன. இவை முற்போக்கான இலக்கிய வளர்ச்சிக்கும் மக்கள் தழுவிய எழுத்துக்கும் செழிப்பு மிகுந்த நிலமாயிருந்தன. புதிய உலகம், அக்டோபர் பதாகை, தாரகை உட்பட ஏராளமான வெளியீடுகள் தோன்றின. முதன்முறையாக வரலாற்றில் உழைக்கும் மனிதர்களுக்கு புதிய கலாச்சாரத்தின் வீரியத்தோடு இணைந்த எழுத்துக்கள் சென்றடைந்தன. எனினும் தவிர்க்கமுடியாமல் எளிமைப்படுத்தலும் கொச்சைப்படுத்தலும் பண்பட்டவையும் உயர்ந்த கலைத்திறனும் புரட்சியின்பால் விசுவாசம் என்று பல்வகைப்போக்குகள் வந்து முட்டிமோதின. இவை புரட்சி உறங்கிக் கிடந்த சமூக அமைப்பின்மீது உச்சந்தலையடியாய் இறங்கியபோது ஏற்பட்ட அதிர்வலைகளின் பிரதிபலிப்புமாகும்.
ஆனால் ஸ்டாலினிய சகாப்தம், பாட்டாளிவர்க்க இலக்கியம், சோசலிச யதார்த்தவாதம் என்ற பெயரில் சகல சுதந்திரமான இலக்கியப் போக்குகளையும் வேட்டையாடியது. எழுத்தாளனும் கலைஞனும் மனித மனங்களின் ஆன்மாவின் பொறியியலாளர்கள் என்ற வரட்டு வேதாந்தம் உருக்கொண்டு ஆடியது. கலை மற்றும் பண்பாட்டுத்துறைகளில் சர்வாதிகாரத்தையும் சித்தாந்த ஆசாடபூதித்தனத்தையும் படைத்துவிட்டது. ஐசக்பேபல், கிர்ஷோன் மெயர்ஹேஸ்ட், ஐவான்கதயேவ், கிரிலேவ், யாசெசென்கி, கோலட்ஸோச் ஆகிய புரட்சிபெற்றெடுத்த இலக்கியவாதிகள் ஸ்டாலினிச கொடுங்கோன்மைக்குப் பலியாகினர். ஒக்டோபர் புரட்சியின் கடும்பகைவரும் லெனின், ரொட்ஸ்கி ஆகியோரை அவதூறு செய்து கதை எழுதியவருமான அர்க்கடி அலெர் செங்கோவின் படைப்புகளைக்கூட வெளியிட்ட லெனின், ரொட்ஸ்கி கால சோவியத்யூனியன் பொய்மாற்றுக்கருத்துகள் கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் எதிர்ப்புரட்சி பிரச்சாரமென்று தூற்றப்படும் சித்தாந்தக்கேடு வந்தது. ஸ்டாலின் கால, அதிகாரவர்க்கம் சகல தன் சர்வாதிகாரத்துக்கு எதிரான சக்திகளையும் ஒடுக்கியது. இரகசியப் போலிஸ் உளவுத்துறையின் கண்மூடித்தனமான கைதுகள், விசாரணைகள், கட்டாய உழைப்பு முகாம்கள், படுகொலை என்பன அதன் இயல்பாயிற்று. கட்சியாட்சி பின்பு மத்தியகுழுவாகி பின்பு பொதுச் செயலாளர் தனிமனிதரின் ஸ்டாலின் என்ற சர்வாதிகாரியின் ஆட்சியாகவும் மாபெரும் புரட்சி ஊனப்பட்டது. உன்னதமான இலட்சியங்களும் உயர்ந்த அறநெறிமுறைகளும் கொண்ட போல்சுவிக் கட்சியின் லெனின் கால நடைமுறைகளை பொய் மிருகத்தனமான அவநம்பிக்கையும் சந்தேகமும் காழ்ப்புணர்வும் கொண்ட சித்தாந்த வெற்று ஆரவாரங்களில் தன்னை மறைத்துக்கொண்ட ஸ்டாலினியம் பலம் பெற்றது.

புரட்சியின் எதிரிகளான வெண்படையின் எதிர்ப்புரட்சியில் பங்கேற்ற எழுத்தாளர்கள் பேராசிரியர்களைக்கூட எப்படி நடத்தவேண்டும் என்பதில் சோசலிச நடைமுறைகளை லெனின் பேணியவர். பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோரின் எழுத்துமூல அபிப்பிராயத்தின் அடிப்படையிலன்றி விசாரணையின்றி எதிர்ப்புரட்சியாளர்கள்மீதுகூட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று லெனின் உறுதியாக இருந்தவர். ஆனால் ஸ்டாலினிசம் பொருளாதாரத்துறையில் மட்டுமல்ல கலாச்சாரத்துறையிலும் கொம்யூனிஸ்ட் அறிவாளிகள், கொம்யூனிஸ்ட் அல்லாதவர் என்ற பேதமின்றி வன்முறையை ஏவியது. முதலில் வலதுசாரிப் போக்குள்ளவர்களை ஒடுக்க கொம்யூனிஸ்டுகளைப் பயன்படுத்திக்கொண்டு பின்பு கொம்யூனிஸ்டுகளையும் தன் பயங்கரவாதத்துக்குத் தீனியாக்கியது. இரகசியப் பொலிசாரின் தலைவராகவும் ஸ்டாலினின் வலது கரமாகவும் விளங்கிய கொலைஞன் யகோடாவின் மைத்துனரான லியோபோல்ட் அவர்பாக். இவர் ஸ்டாலின் கால இலக்கிய சர்வாதிகாரியானார். சகல சுதந்திரமான இலக்கிய அமைப்புகளும் நிர்மூலமாயின. இலக்கியத்தில்கூட இராணுவ மொழியிலான நடைகள் பிறப்பெடுத்தன. தாக்குதல், முற்றுகை, எதிர்த்தாக்கு, கவிதையில் நடைமுறைத் தந்திரத்தவறு, இலக்கிய விமர்சனத்தில் போர்த்தந்திரம், பீரங்கித்தாக்குதல், பின்வரிசைத்தாக்குதல் என்பன போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. உயர்ந்த சுதந்திரமான இலக்கியத்தரம் போய் சோசலிச யதார்த்தவாதம் என்ற பெயரில் அதிகாரவர்க்கத்தின் ஆர்வங்களைப் பிரதிபலிக்கும் போக்குகள் பிறப்பெடுத்தன. அரசியல்ரீதியில் நம்பத்தகாதவர்கள், உருவவியல் பிறழ்வு, மனிதாபிமானக் கண்ணோட்டம், அரசியலற்ற அணுகுமுறை என்ற திரிபுகளில் இறங்கினார்கள். உண்மையான மக்கள் இலக்கியத்துக்குமாறாய் முதலாளியத்திலிருந்து சோசலித்துக்கு மாறிச் செல்லும் காலகட்டங்களில் நிகழக்கூடிய சமூகமுரண்பாடுகளை எழுச்சிகளை அதிர்வுகளை பிரதிபலிப்பிற்குப் பதிலாய் செயற்கையான புரட்சிகரவேடம் புனைந்துகொண்ட போக்குகள் அதிகாரத்தால் ஊக்குவிக்கப்பட்டன. நெருக்கடிக்கும் அடக்குமுறைகட்கும் ஆளான கலைஞர்கள் வேடம் கட்டவும் ஆன்மாவை இழக்கவும் துதிபாடவும் தொடங்கினர். அதிகாரத்துவம் காலால் இடுவதை தலையால் செய்வது புரட்சிகரக் கட்டுப்பாடு என்று போதிக்கப்பட்டது. உயர்ந்த கொம்யூனிச ஒழுக்கங்களும் தோழமையும் போல்சுவிக் கட்சியுள் லெனின் கட்டி வளர்த்த பண்பாடுகளும் ஸ்டாலினிசத்தால் சிதறடிக்கப்பட்டன. அவற்றின் அழிவிலிருந்தே ஸ்டாலினிசம் மூர்க்கத்தோடு எழுந்தது.

புரட்சியை நேசித்த உண்மையான படைப்பாளியான ஜாமியாடின் எழுதினான். 'ஏதோ சன்மானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலோ அல்லது சவுக்கடிக்கு அஞ்சியோ நிமிர்ந்து உட்காரக் கூடிய நாய்கள் புரட்சிக்குத் தேவையில்லை. இப்படிப்பட்ட நாய்களுக்கு பயிற்சி தருபவர்களும் தேவையில்லை. எதற்கும் அஞ்சாத புரட்சியைப்போலவே எதற்கும் அஞ்சாத எழுத்தாளர்களே புரட்சிக்குத் தேவை. புரட்சியானது உடனடியாகப் பலன்களைத் தேடாதது போல் உடனடியான பலன்களைத் தேடாத எழுத்தாளர்களே புரட்சிக்குத் தேவை"

தொழிற்சாலைகளைப்பற்றியும் பண்ணைகளைப்பற்றியும் எழுதும்படி கட்டளைகள் பிறந்தன. ஜாரிசத்தின் பழைய உலகமும் பிற்போக்குப் பிரமாண்டங்களும் புதிய புரட்சியின் வெப்பத்தினால் கருகி நசிந்து அழிந்துபடுவதை அழகியலோடு சொல்ல கலைஞன் அனுமதிக்கப்படவில்லை. சோசலிசப்புரட்சியின் மகத்தான வரலாற்றுக்கட்டத்தில் வாழப் பாக்கியம் பெற்ற இலக்கியவாதிகள் புரட்சியின் குழந்தையையும் அதைப் பெறுவதற்காக நடந்த மரணப்போராட்டங்களையும் பேச அனுமதிக்கவில்லை. முற்போக்கும் பிற்போக்கும் பழமையும் புதுமையும் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கையில் புதிய தூயசோசலிச மனிதன் படைக்கப்பட்டுவிட்டதான மாயையை ஸ்டாலினிசம் ஊட்டியது. பிற்போக்கான சமூக அமைப்பிலிருந்து புரட்சிகர சோசலிசக் கட்டத்துக்கு மாறும் ஒரு சமூகம் அதன் மக்களும் அனுபவிக்கும் துன்பதுயரங்கள், வீரம், தியாகம், துரோகம், சுயநலம், உளவியல், இவைகளை யதார்த்தமாய் சொல்ல எழுத்துக்குச் சுதந்திரம் மறுக்கப்பட்டது. தியாகத்தையும் வீரத்தையும் சொல்ல உள்ள உரிமைபோன்று சோம்பலையும் துரோகத்தையும் சுயநலத்தையும் தன் கவிதைகளில் வடித்தமைக்காக புரட்சியின் சத்துராதிகளை அம்பலப்படுத்தியமைக்காக லெனினின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான கவிஞர் டெமியோன் பெட்னியும் நேரடியாக ஸ்டாலினாலேயே விமர்சிக்கப்பட்டு கவிதை தடைசெய்யப்பட்டது. புரட்சியின் தீயசக்திகளை அம்பலப்படுத்தி புரட்சியை செப்பனிட முயன்றவர்கள் கலகம் செய்பவர்களாயினர். பழைய உலகின் அழிவையும் புதிய புரட்சிகர சோசலிசத்தின் வரவையும் பாடிய மாபெரும் பாட்டாளி வர்க்கக் கவிஞன் மாயாகோவ்ஸ்கியும் ஸ்டாலினிசக் கொடுமையால் மூச்சுவிடமுடியாத எழுத்துக்களோடு தற்கொலை செய்துகொண்டான். குடும்ப வாழ்க்கையில் தோல்வி, விவாகரத்து, ஏமாற்றம், காதல் தோல்வி, சட்டபூர்வமற்றுப் பெற்றெடுக்கும் குழந்தை, கணவனுக்குத் துரோகம் இழைக்கும் மனைவி, மனைவிக்கு துரோகம் இழைக்கும் கணவன், பாலுறவுப் பிரச்சனைகள், தனிமனித உணர்வுகள் போன்றவை சோவியத் இலக்கியத்தில் தடைசெய்யப்பட்டன. சோவியத் சமுதாயமானது உடனடியாய் சகல சமுதாயச் சீர்கேடுகளையும் தீமைகளையும் ஒழித்துக்கட்டி தூயசோசலிச மனிதனைப் படைத்துவிட்டதாய் போலிப்பாவனை நிலவியது. பல்நூற்றாண்டு கால சமூகப் பிரச்சனைகளையும் துயரங்களையும் மாற்றுதல் முடிவுக்குக் கொண்டுவரல் என்பதை சோசலிசம் வந்த அடுத்தநாளே பல தலைமுறைக்குக்கூட நீடிக்கக்கூடியவற்றை மறைந்துவிட்டதாய் காட்டும் கற்பனைகள் உலவவிடப்பட்டன. சோசலிச சமூகத்தில்கூட பழைய சமூகத்தின் குறைபாடுகள் சமூகத்தீமைகள் என்பன முழுமையாய் அழிந்துவிடாது. அவை ஒரு வரலாற்று மரணத்தை எய்த நீண்டகாலத்தைக் கோரும் என்பதை நிராகரித்தனர். புரட்சிபற்றியும் சோசலிசம்பற்றியும் எளிமைப்படுத்தப்பட்ட கருத்துக்களையும் வரட்டு முழக்கங்களையும்பற்றி லெனின் 'பாட்டாளிவர்க்கக் கலாச்சாரம்பற்றிப் பேசும்போது இதை நாம் மனதில் கொள்ளவேண்டும். மனித குலத்தின் முழுவளர்ச்சிபற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக்கூடிய ஆற்றலும் சாத்தியமானால்தான் பாட்டாளிவர்க்கக் கலாச்சாரத்தைப் படைக்கமுடியும் என்பதைத் தெட்டத்தெளிவாக உணராவிட்டால் இப்பிரச்சினைக்கு நம்மால் தீர்வுகாணமுடியாது. பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம் ஆகாயத்திலிருந்து குதிப்பதல்ல. பாட்டாளிவர்க்கக் கலாச்சாரத்தின் நிபுணர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களின் கண்டுபிடிப்புமல்ல. அவை எல்லாம் சுத்த அபத்தம்" என்கின்றார். மேலும் லூனாசால்ஸ்கியுடன் நடந்த வாதத்தில் 'இது இன்னமும் நில பிரபுக்களின் கலாச்சாரமே இந்த உண்மையை மறக்கமுடியாது" என்கிறார் லெனின். புதிய கலைகளை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கும் பிரச்சனை வந்தபோது லூனாசால்ஸ்கியிடம் 'கிறுக்கர்களையும் அரைவேக்காடுகளையும்பற்றி நீங்கள் சொல்வது மெத்தச்சரி. வெற்றிபெற்ற ஒருவர்க்கம், தனது சொந்த அறிவுஜீவிகளை மிகக் குறைவாகவே கொண்டுள்ள ஒரு வர்க்கம் இத்தகைய பேர்வழிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் அது அவர்கட்கு பலியாவது தவிர்க்கமுடியாததாகும்". இங்கு லெனின் புரோலிகல்ட் என்ற தீவிர இடதுசாரிவாதத்தில் இருந்த அமைப்பை கருத்தில்கொண்டே இவ்வாறு சொன்னார். பிற்காலத்தில் புரோலிகல்ட் ஸ்டாலினிசத்தின் தூணாகியதோடு மற்றைய சகல இலக்கியப்போக்குகளையும் ஒடுக்கியது.

'இலக்கியத்தை யாந்திரீகமாக்குவது, ஒரே மட்டமாக்குவது, பெரும்பான்மையோர் ஆட்சியை சிறுபான்மையோர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நியதிக்கு இலக்கியத்தை உட்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல இத்துறையில் தனிமனித முன்முயற்சி, தனிமனித விருப்பம், சிந்தனை, கற்பனை உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு மேலதிக வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படவேண்டும். இவையாவும் மறுக்கமுடியாதவை. இவை யாவும் காட்டுவது என்னவெனில் பாட்டாளிவர்க்கக்கட்சியின் இலக்கியப்பகுதியை அதன் பிற பகுதிகளுடன் யாந்திரீகமாக ஒன்றுபடுத்திப் பார்க்கக்கூடாது என்பதுதான்;" என்ற லெனின் கருத்தை ஸ்டாலினிசம் நிராகரித்த அதேவேளை அவர் இறப்பின்பின் அவரை வானளாவப் புகழ்ந்து சாமி படமாக்கி மாட்டிவிடுவதன்மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர். ஸ்டாலினின் அதிகாரவர்க்கக்கூட்டம் மாக்சியத்தின் பெயரால் எதேச்சாதிகார விளக்கங்களைக் கொடுத்தனர். உலகை உலுக்கிய சோவியத் புரட்சியின் இலட்சியங்கள், ஒவ்வொன்றாய்க் கைவிடப்பட்டு கட்சியும் அரசும் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலை சிதைத்தழித்து அதை அடிமை கொண்டனர். உலகின் மாபெரும் சோசலிசப் புரட்சியை நடாத்தி முடித்த சோவியத் தேசம் உயிர்ப்பை இழந்தது. ஸ்டாலினிசம் மனிதனை வெறும் அரசியல் விலங்காக்கியது. வெறும் சமூக பொருளாதார நிலைமைகட்கு அடிபணியும் ஜீவியாக மாற்றியது.

இலக்கியப் போக்குகள்பற்றி பழம்பெரும் போல்சுவிக்கும் லெனினால் கட்சியின் கோட்பாட்டாளன் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவரும் 1930களின் இறுதியில் ஸ்டாலினிசத்தால் படுகொலையானவருமான புகாரின் புரட்சியின்பின் பல்வகை இலக்கியப்போக்குகள் நிலவுவதை அங்கீகரித்தார். இடதுசாரித் தீவிரவாதப் போக்கில் கிடந்து வெந்தவர்கட்கு அவர் பின்வருமாறு புத்தி சொன்னார் 'முதலில் சிறந்த படைப்புகள் மூலம் உங்கள் தகுதியை நிலைநாட்டுங்கள். பிறகு அங்கீகாரம் கோருங்கள். மற்றைய எழுத்தாளர்கட்கு கல்வி புகட்டி அவர்களை வென்றெடுக்க பாட்டாளிவர்க்க இலக்கியம் முயலவேண்டும் அன்றி குண்டாந்தடி மூலமாக அல்ல" கட்சி எழுத்தாளர்கட்கு ஆணைகள் விடுப்பதையோ எந்த இலக்கியப்போக்குக்கும் பிரத்தியேக ஆதரவு கொடுப்பதையோ அவர் ஆதரிக்கவில்லை. இலக்கியம்பற்றி ஜெர்மனியின் மிகப்பெரும்புரட்சியாளனான ரோசா லுக்சம்பேர்க் ரஸ்ய இலக்கியத்தை மதிப்பிட்டார். 'மனிதஇனத்தின்மீது அளவற்ற நேசம். சமூக அநீதிக்குப் பொறுப்பேற்கும் ஆழமான உணர்வு ஆகியவற்றால் அவர்கள் உந்தப்பட்டார்கள். உண்மையில் ஓர் உண்மைக் கலைஞனுக்கு அவன் தரும் தீர்வு இரண்டாம் பட்சமானதே. அதிமுக்கியமானவை அவனது கலையின் ஊற்றுக்கண்ணும் அதன் ஆன்மாவுமே@ அவன் தனக்கென உணர்வுபூர்வமாக வகுத்துக்கொண்ட குறிக்கோள்" என்கிறார். எனவே இன்றைய பல இடதுசாரிப் போக்குகளில் உள்ள குறைபாடான பார்வை மாக்சிய விரோதம் கொண்டதாகும். ஸ்டாலினிச சம்பிரதாயங்களால் உருவாக்கி முற்போக்கு உலகின்மீது திணிக்கப்பட்டதாகும்.

'காற்றுவெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்" என்ற பாரதியின் பாடலை நிலப்பிரபுத்துவக் காதலைப் பாடுகின்றது பாட்டாளி மனிதனைப் பாடவில்லை என்று ஒதுக்கமுடியுமா? பிற்போக்கு என்று துணியமுடியுமா? கம்பனைக் கொழுத்து மகாபாரதத்தை நீறாக்கு என்று முழக்கம் எழுந்துள்ள வேளையில் பண்டைய இலக்கியங்கள் எழுத்துக்கள்பற்றி தீவிரவாதத்தில் விழுந்து கால்முறிந்து போகாத சிந்தனைகளை முன்வைப்பது அவசியம். மாக்சியம் கலையின் வர்க்க சார்பை மட்டுமே பார்ப்பதில்லை. அதன் அரசியல் அம்சங்களைமட்டும் பரிசீலிப்பதில்லை. அதன் சமூக, வரலாற்று, அழகியல் அம்சங்களையும் காண்கிறது. இன்றைய முன்னேறிய கருத்துக்களின் மூலவேர்கள் அவற்றிலுள்ளதையும் இலக்கியம் மற்றும் சமயநூல்களில்கூட மனித ஆற்றல்கள், தொன்மைச் சிந்தனைகள், மானுடவியல் சிந்தனைகள், வரலாற்றுத் தகவல்கள் என்பன நிரம்பிக் கிடக்கின்றன. ஒடுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தாயான மனிதகுலத்தையும் அதன் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சிகளை மாற்றங்களை அங்கு நாம் தரிசிக்கமுடியும். மனிதனுக்குள் உள்ள மனிதனை கலைஞனை துடிப்பும் அழகுணர்வும் கொண்ட உயிரியை ஆழ்ந்து தரிசிக்காதவர்கள் மனிதனின் பல்வேறுபட்ட நூதனங்களை முரண்படும் வர்க்கங்களின் ஆர்வங்களை காணத்தெரியாதவர்கள், பகுத்துணரத் தெரியாதவர்கள் ஒருபோதும் மாக்சியவாதிகளல்ல வெற்று ஆரவாரங்களும் மாக்சியச் சொற்றொடர்களுள் தம் வெற்றுத்தனங்களை மறைத்துக்கொண்டு கிளித்தட்டு மறிப்பவர்களும் மனிதகுல விடுதலைச் சித்தாந்தமான மாக்சியத்தை சிதைப்பதையும் அதன் இயக்கவியல்போக்கை நிராகரிப்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.