Old but Gold

தொகுப்பு: தரங்கிணி

துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.
- சி. சிவசேகரம் -

மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச் சென்று
புதைகுழி விளிம்பில்
வைத்துச் சுட்டுப்
புறங்காலால்
மண்ணைத் தள்ளி
மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியுறைந்து
நியாயம் சொல்லுகிறார்கள்
நியாயம்!
- சேரன் -

அந்தப் பரந்த வெளியில்
அழகான குழந்தைகளும்
கன்னிகழியா இளைஞர்களுமாக
ஆயிரக்கணக்கில் செத்துக்கிடந்தனர்.
இந்த அழகான உடல்களைவிட்டு
அசிங்கமான ஆயுதங்களை
மிஞ்சியிருந்த வீரர்கள்
பாதுகாத்துப்போயினர்.
- சுகன் -

நண்பனே!
அன்று இன்றைய தினத்தில்
இரத்தவெறி பிடித்த தோட்டாக்கள்
உன்னைத் துளைத்த செய்தி எங்கள்
நெஞ்சங்களை சல்லடையாக்கியது.
அன்றிலிருந்து நாங்கள் வெறுப்பது
மரணவெறி பிடித்த துப்பாக்கிகளை மாத்திரமல்ல
உயிருக்குப்பயந்து மௌனமாகிப்போன
பேனாக்களையும்தான்.
- தி. உமாகாந்தன் -

கொழும்புத் தெருக்களில்
வெட்டியும் எரித்தும்
கொடுஞ்செயல் புரிந்த
உம்மவர் போலவே
அனுராதபுரத்து வீதிகளெங்கும்
எம்மவர் தீர்த்த வேட்டுக்கள் கேட்டு
பெருந்துயர் கொண்டோம்!
- சபேசன் -

மதத்தால் வேறுபடினும்
இனத்தால், மொழியால்
ஒன்றென்றுரைத்த
உமது மனிதரெல்லாம்
எங்கே ஒளிந்தனர்...?
என்ற
~நாசிம் காதரின்| கேள்விக்கு
~நல்லசிவம்| எந்த முகத்தோடு
பதிலை உரைப்பது?
- அருந்ததி -

எங்களை நெருங்கிவருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!
உண்மையை
மறுப்பவர்களிடம் கூறுங்கள்
எங்கள் மரணம்
அது -
ஒரு முடிவல்ல.
- செழியன் -

பெட்டியில் அடங்கும்
வாய்ப்பே அற்று
மயான மூலையில்
முகமறியா இருளில்
முகமிழந்து புதைந்த உடல்களை,
பாதி எரிந்து
மீதி அழிந்து
சிதைந்த உடல்களைச்
சுதந்திரத்திற்காய்க்
களத்திலிறங்கிச்
சுதந்திரம் இழந்தவர்களை
நாம் நினையாதிருந்தால்
மிகவும் கொடியது.
இது எதிரியின் வேலையல்ல
எம்மவர் கொலைக்கரம்
பதித்த சுவடுகள்.
- சேரன் -

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
- சிவரமணி -

குந்தியிருக்கவோர் நிலம்
குறித்துக்காட்டவோர் ப+மி
அள்ளியணைக்கும் உறவு
இழந்தவர் இங்கே
காற்சட்டை மேற்சட்டை போட்டு
நிர்வாணமாகத் திரிகின்றோம்
அந்நியரின் ப+மியிலே!
- செல்வம் -

காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்கள் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
~மனித|மும்
அன்றுடன் தொலைந்துபோனது.
- அருந்ததி -

மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அநாதைப்பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கின்றோம்
- செழியன் -