திருமாவளவனின் ஐந்து கவிதைகள்

கவித்திருப்பு

என்னுள் ஒரு கவிதை
கண்ணாமூச்சியாடுகிறது.

அடிக்கடி தோன்றுவதும்
விரிந்து படர்வதும்
ஆற அமரவிருந்து
பேனாவைக் கையிலெடுக்க
ஓடிஒளிவதுமாய்
என்னை அந்தரிக்கவைக்கிறது.

ஏதாவது
அலுவலில் இருக்கும்போதில்,
சனநெருக்கடியில்,
பஸ்ஸில் பிரயாணிக்கையில்,
வேலைத்தலக் கடமையிடை,
உணவருந்துகையில்,
நண்பர்களோடு உரையாடுகையில்
திடீரெனத் தோன்றி
என்னைப் பிடி பார்க்கலாம்
என சவால்விடுகிறது.

இன்று
தொழிலகக் கடமையிடை
மெல்ல நுழைந்து
முழுவதுமாய் வியாபித்து
சொற்களின் கட்டுமானத்தில்
எழுந்தாடிய கூத்தில்
எனையிழந்து
பவ்வியமாய் பதுங்கியிருந்து
பிடிக்க எத்தனித்த பொழுதில்....

எப்படியோ
இன்றும் எனை ஏமாற்றிவிட்டது
எசமானன்
திட்டிவிட்டுப் போனதுதான் மிச்சம்.

எப்படியும்
அதைப் பிடித்துவிட வேண்டுமென
உள்ளம் அவாவுகிறது

எப்படிப் பிடிப்பது
அதன் ஒரு எழுத்துக்கூட
ஊனமின்றி?

காத்திருக்கிறேன்.

 

மனிதக் காட்சி சாலை

கொடுங்கோடை
வெய்யில் கொழுத்த
தீக்கொழுந்தெறிந்த
தேசம்.

நாங்கள் முடிச்சுகளோடு
முகங்களை மாற்றினோம்.

கரடிகளுக்கும் மனிதமுகம்
கழுதைகளுக்கும் மனிதமுகம்
பன்றிக்கும் பூனைக்கும் குரங்கிற்கும்
பச்சோந்திக்கும் பறவைக்கும்
பல்லிக்கும்....

மனிதரும் கூட
தங்கள் தங்கள் முகங்களை
அழித்து
வேறு வேறு மனித முகங்களை
எழுதிக் கொண்டோம்.

புலம்பெயர்ந்து
நான்கு திசையிலும் படர்ந்தோம்

உலகு விரிந்தது பருத்து
சமநிலை கெட்டது
போலி முகங்களை கிழித்தெறிந்தோம்

இயல்பு தோன்றிற்று
பிறகென்ன?

கூட்டம் கொண்டாட்டம்
குழிபறிப்பு
குழையடிப்பு
கோவில் திருவிழா சூரன்போர்
குரங்காட்டம் கரடிவித்தை
பொதிசுமப்பு....

இப்பொழுது
பனிசொரிய மறுக்கிறது
துருவம்.
மடிபெருத்து பெருத்து
வீதியில் அலைகிறது
மிருகம்.

தப்பித்துக் கொண்டனர்
புத்தி தெளிந்தவர்
அகப்பட்டுக் கொண்டது
அப்பாவிகளும்
நானும்.

 

காலங்கடந்த
கவிதை

வெண்பனித் துகிலுள்
மோகித்துக் கிடக்கிறது
துருவம்.
நிலவு மெல்ல இறங்கி வந்து
பனிவயலில்
மேய்கிறது.

நான்
மோனத்துள் கிடக்கிறேன்
ஒரு கவிதைக்காய்.

நிலவும் அவளும் கூடிக்
கொலுவிருந்த
அன்றொரு பொழுதில்
எழுதொரு கவிதை
என்கிறாள் தோழி.

மொழியும் உணர்வும் ஊறிப்
பிரவாகித்த
அன்றைய இரவில்
மரபின் தளைகளுக்குள்
கட்டுண்டு அழிந்து போகிறது
என் கவிதை.

மரபின் தளைகளை மீறி
சுயமாய் கவிபுனையும்
இன்றைய பொழுதில்
நான்
மோனத்துள் கிடக்கிறேன்
ஒரு கவிதைக்காய்.

ஒருபத்து ஆண்டுகளை
இரைமீட்டு தள்ளிவிட்டு
காத்துக்கிடக்கிறது
காலம்.
துருவத்தின் உடல்மேல்
மெல்லமேய்ந்து வருகிறது
நிலவு.

எல்லாம் இருக்கிறது
ஆனால்
கவிதை கேட்ட அவள்?

 

யாத்திரை

களங்கட்டிக் கூட்டுக்குள் சிறைப்பட்ட
மீன்போலென் வாழ்வு நகர்கிறது.
பாறாங்கல்லெனக் கனக்கும்
இதயச்சுமையை
புறந்தள்ள முடியாத்துயரத்தில்
வீழ்கிறேன்.

ஆண்டாண்டாய் ஊர்ந்து
நகர்ந்து
குழிவிழுந்த வீதிகÙடே
நீளும்
என் யாத்திரை.

ஒவ்வொரு கிடங்கும்
பொறிவைத்துக்
காத்துக்கிடக்கிறது
மரபு.

தவறி வீழும்போதில்
விதியென விலக்கிடமுடியா
இயலாமையில் துடிக்கிறேன்.

மீளஎழும்பொழுதில்
மரபுக்கோட்டையின்
அடிக்கல்லிலொன்றை
பெயர்த்துக் கொணரும்
எத்தனம் என்னுள்.

ஆடுபுலியாட்டமாய்
என் யாக்கையின் யாத்திரை
நகர்கிறது.
இதைவிட்டால்
வேறு எதைச் சொல்ல.

 

மூன்று: பு
(புலவன் - புரவலன் - புகழ்)


அதோ!
அந்தப் பேனாமுள்ளை முறித்துவீசு.
அவன் குரல்வளையை
நெரி@ எல்லை போடு@
வெளியே நிற்பவனை மிதி@
துவம்சம் செய்@
நீ உள்ளே வா@ முதுகுசொறி@
என் உள்ளம் சுகிக்கும்
வரையில்....

விழா:
என் கன்னக்கோலுக்கு
பத்தாண்டு விழா.
இல்லை இருபதாண்டு... இதுவும்
போதாது.... முப்பதாண்டு....
ஆமாம் முப்பதாண்டு
இப்போதைக்கிருக்கட்டும்.

ஏய் புலவா!
என் ஆஸ்தான புலவா
பாடு@ புகழ் பாடு@ எட்டுத்திக்கும்
ஒலிக்கப்பாடு

பாடல்:
பெருமை கொள்வோம்
கல் தோன்றி
மண்தோன்றாக் காலத்து
முன்தோன்றிய குடிகளென்பதில்
பெருமை கொள்வோம்.

ஒலிவாங்கியில் தொங்கும்போதில்,
பதவிக்கதிரையுள் புதையும்போதில்,
மலர்மாலைக்குள்
தலை நுழைக்கும்போதில்,
விளம்பரத்தாள்களில்
எம்முகம் பார்க்கும்போதில்
வெற்றுத்தாளில் கையொப்பமிட்ட
ஜே. ஆர். காலத்து மந்திரி போல
விருதுக்காய்
கைகட்டிச் சேவகம் செய்யும்போதில்,
நாங்கள் பெருமைகொள்வோம்
துருவப்பூமியில்
தமிழ் வளர்வதாக.

நிறுத்து!
என் செவிப்பறை நுழைந்தது
அபசுரம்@ எவன் குரல்@
என்னவன் குரலா@
பிடுங்கி எறி@ தூர.

வெளியே வீழ்ந்த ஆத்மா சொன்னது:
காஞ்சோண்டிகளை அழி@
பனங்கொட்டைகளை விதை.