சரியும் சர்வாதிகாரிகளின் சாம்ராச்சியங்கள்

தி. உமாகாந்தன்

இருபதாம் நூற்றாண்டு இரக்கமற்ற பல சர்வாதிகாரிகளின் ஆட்சிகளைக் கண்டது. தாம் ஆட்சி செய்த நாடுகளின் மக்களை இரும்புக்கரங்களால் இறுக்கி கொலைகளும், கொள்ளைகளுமாய் பேயாட்சி செய்த இந்த சர்வாதிகாரிகள் தமது ஆட்சிக்காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்துடன் சொந்த நாட்டில் கொள்ளையடித்த பெரும்தொகை சொத்துக்களுடன் வேறு நாடுகளுக்குத் தப்பிச்சென்று அங்கு தமது சுகபோக வாழ்க்கையைத் தொடர்வது இருபதாம் நூற்றாண்டின் சகஜமான சம்பவங்கள். இதைவிடக் கொடுமை இந்தச் சர்வாதிகாரிகளில் சிலர் தமது ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும்கூட தமது சொந்த நாட்டிலேயே தெரிவுசெய்யப்பட்ட புதிய அரசாங்கங்களுடன் சமரசம் செய்துகொண்டு கனவான்களாக வாழ்ந்து வருவது.

இவர்களுக்கெதிரான போராட்டங்கள், இவர்களை நீதியின்முன் நிறுத்தவேண்டுமெனக் கோரும் போராட்டங்கள் சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களாலும் இச்சர்வாதிகாரிகளால் வதைக்கப்பட்டு, வாழ்விழந்து போனோரின் குடும்பத்தினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் சித்துவிளையாட்டுகளால் இப்போராட்டங்கள் பெருமளவில் அலட்சியப்படுத்தப்பட்டே வந்தன.

ஆனால் வரலாறு எப்போதும் ஒரே திசையில் செல்வதில்லை. அதிசயங்கள் வாழ்வில் மட்டுமல்ல, வரலாற்றிலும் வருவதுண்டு என்பதை நிரூபிப்பது போன்ற சம்பவம் ஒன்று இந்த நூற்றாண்டு முடியப்போகும் காலப்பகுதியில் நடந்து சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16ம் திகதி லண்டனில் உள்ள தனியார் வைத்தியநிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிலியின் முன்னாள் சர்வாதிகாரியும் இந்நாள் ஆயுட்கால செனட்டருமான ஜெனரல் ஒகஸ்ரோ பினாசெ, சர்வதேசப் பொலிஸ் அமைப்பான இன்ரபோலின் பணிப்பின்கீழ், ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட செய்தி உலகம் முழுதும் உள்ள மனித உரிமைவிரும்பிகளுக்கு மகிழ்வையும் முன்னாள் மற்றும் இந்நாள் சர்வாதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
சிலியின் முன்னாள் சர்வாதிகாரியான பினாசெ இங்கிலாந்துக்கு விஜயத்தை மேற்கொள்வது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னர் பல தடவைகள் இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார். முன்னாள் பிரித்தானியப் பிரதமர் திருமதி மார்க்கிரெட் தச்சருடன் மிகுந்த நட்புக்கொண்டவர். இதனைவிட குழடமடயனெ தீவுகள் தொடர்பான பிரித்தானிய-ஆர்ஜென்ரீனா யுத்தத்தின்போது தமது நட்பு நாடான ஆர்ஜென்ரீனாவை அலட்சியம் செய்து பினாசெ பிரித்தானியாவின் பக்கம் சார்பெடுத்து உதவி செய்தவர். இதனைவிடத் தனது படையினருக்கு பிரித்தானிய யுத்தவிமானங்களையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்து பிரித்தானியாவின் ஆயுதச் சந்தையை இலத்தின் அமெரிக்காவில் விஸ்தரிக்க உதவினார். பினாசெயின் இந்த விசுவாசத்தை பிரித்தானியா என்றும் மறக்கவில்லை. பினாசெ குற்றமற்றவர். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று பினாசெயின் விசுவாசிகள் நடத்திய சிறு ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் திருமதி மார்க்கிரட் தட்சர் கலந்துகொண்டது தமது விசுவாசியின்பால் கொண்ட அன்பினாலேயே. இதன்மூலம் தமது ஆட்சிக்காலங்களின்போது விஷஆட்சி நடத்திய இச்சர்வாதிகாரிகளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
ஆனால் இம்முறை எல்லாமே காலம் கடந்துவிட்டது. தமது விசுவாசியை பிரித்தானியாவாலேயே காப்;பாற்ற முடியவில்லை. பிரித்தானிய உடைகளை விரும்பி அணிந்து, 'வாழ்ந்தால் பிரித்தானியாவில் வாழவேண்டும். வாழ்வதற்கு உன்னதமான இடம் பிரித்தானியா. அந்த நாட்டின் பண்பாடு, நவீனத்துவம், மக்கள் ஒழுங்கு, அவர்கள் நீதிக்கு அழிக்கும் மதிப்பு இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தவை." என்று அடிக்கடி சொல்லும் பினாசெ இன்று அந்த நாட்டிலேயே அந்த நாட்டின் நீதிக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டிருப்பதும் தமது 83வது பிறந்த தினத்தை ஒரு கைதியாக கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதும் காலத்தின் கட்டாயமே. பினாசெயின் சர்வாதிகார ஆட்சிக்கால கட்டத்தில் 1973ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் திகதி தமது மகனான எத்தியன் பெஸ்லே கைதுசெய்யப்பட்டு காணாமல் போனபின் தற்போது பிரான்சில் வாழ்ந்து வரும் றொபேட்டோ பெஸ்லே மகிழ்ச்சியுடன் இப்படிக் கூறுகிறார், 'நான் நினைக்கிறேன் இது ஒன்றின் முடிவு. அதேவேளை இன்னுமொன்றின் ஆரம்பம்."

பினாசெயை மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் முன்னாள், இந்நாள் சர்வாதிகாரிகளை கலங்க வைத்திருக்கும் நிகழ்வு இப்படித்தான் நடந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5ம் திகதி பினாசெ பிரான்சுக்கு வருவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே பிரான்சில் வாழும் சிலிநாட்டு குடும்பங்களில் பலர், பினாசேயின் அரக்க ஆட்சியின் கீழ் வதைபட்டவர்கள், குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள். இவர்களில் பலர் பிரெஞ்சு நீதிமன்றங்களில் பினாசேக்கு எதிரான வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். எனவே சிக்கலில் சிக்கிக்கொள்ள விரும்பாத பிரெஞ்சு அரசு பினாசெயின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.

இதற்கிடையில் செப்ரெம்பர் 22ம் திகதி லண்டனுக்குச் சென்றுவிட்ட பினாசெ பிரான்ஸ் விசா நிராகரிக்கப்பட்டதால் லண்டனில் உள்ள தனியார் மருத்துவநிலையத்தில் சிகிச்சையைப் பெறத் தொடங்கினார். அவருக்கு அங்கு சத்திரசிகிச்சை முடிந்த ஒரு வாரத்தின்பின் அக்டோபர் 16ம் திகதி ஸ்பானிய நீதியரசர் ஹர்சோனின் பணிப்பின்பேரில் பினாசெ கைதுசெய்யப்பட்டார். இந்தக் கைதுக்கான காரணம் தற்போது 82வயதுடைய சிலியின் முன்னாள் இராணுவ ஜெனரலான ஒகஸ்ரோ பினாசெ தமது ஆட்சிக்காலமான 11 செப்ரெம்பர் 1973க்கும் 31 டிசெம்பர் 1983க்கும் இடையில் சிலியில் கொல்லப்பட்ட 79 ஸ்பானிய பிரஜைகளின் கொலைக்கு இராணுவ ஆட்சித் தலைவர் என்றவகையில் பொறுப்பேற்க வேண்டும். எனவே இவரைக் கைதுசெய்யும் ஆணையை ஸ்பெயினின் மட்ரிட்டிலுள்ள நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தங்களின் கீழ் இவரைக் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு ஸ்பெயின் அரசு பிரித்தானியாவைக் கேட்டது. இவரை ஸ்பெயினிடம் ஒப்படைப்பது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் பிரித்தானிய நீதிமன்றம், பிரபுக்கள் சபை என்று மாதக் கணக்காக தொடர்கிற போதிலும் நேற்றைய சர்வாதிகாரி பினாசெ இன்று கைதியாகவே இருக்கிறார். காப்பாற்றுவதற்கு சிலி அரசாங்கத்தைத் தவிர வேறு யாருமே இல்லாத நிலையில் கைவிடப்பட்டிருக்கிறார். சிலியின் ஜனாதிபதியான நுனுருயுசுனுழு குசுநுஐயும் இராணுவத்தின் மிரட்டல் காரணமாகவே பினாசெயை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால் பினாசெ தண்டிக்கப்படவேண்டும் எனக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் லண்டனிலும் சிலியிலும் தொடர்ந்து நடக்கின்றன. இத்தகைய ஆர்ப்பாட்டமொன்றில் 'உன்னுடைய குற்றச் செயல்களுக்கான தண்டனையை நீ அனுபவிக்க வேண்டிய காலகட்டம் இப்போது வந்துவிட்டது" என்ற பதாகை ஒன்று வெகு பொருத்தமாகத் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்ல ரொனி பிளயரின் தலைமையிலான தொழிற்கட்சி அரசு இக்கைதுக்கான பச்சைக்கொடியைக் காட்டியது என்று ஐNனுநுPநுNனுயுNவு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் இக்கைது குறித்து தாம் அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சோ இது ஒரு அரசியல் பிரச்சனையல்ல@ பொலிசும் நீதித்துறையும் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனக் கூறிவிட்டது. ~மிக முக்கியமான அரசியல் பிரமுகர்| என்ற நிலையைக் கொண்டவரை மதிக்க மறுத்து பிரித்தானிய அரசு அநீதி இழைத்துவிட்டது என்ற சிலி ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கு, 'எம்மைப் பொறுத்தவரை பினாசெ மிகமுக்கிய அரசியல் பிரமுகரல்ல" என்று பிரித்தானிய அரசு இறுக்கமாகப் பதிலளித்துவிட்டது. இவையெல்லாம் சர்வாதிகாரிகள் தொடர்பாக ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் சோசலிச அல்லது சமூக ஜனநாயக அரசுகளின் அணுகுமுறைகள் மாறத் தொடங்கிவிட்டதன் அம்சமாகும். இதற்கு இன்னுமொரு உதாரணம் பினாசெயின் கைதுபற்றி பிரான்சின் சோசலிச அரசின் பிரதமர் லியொனல் யொஸ்பன் இப்படிக் கூறுகிறார், 'இச்செய்தி ஒரு அதிசயம். இச் செய்தி மிக மகிழ்ச்சியானது. ஆனால் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு மோசமான செய்தி." என்கிறார். சோசலிச அரசின் கூட்டுக்கட்சியான பசுமைக்கட்சி 'சர்வாதிகாரிகளுக்கான மிக மோசமான காலகட்டம் இது" எனக் கூறியுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபை பினாசேயின் கைது குறித்து, 'இது வரலாற்றில் முதல் சம்பவம். இத்தோடு சர்வாதிகாரிகள் விசேட அரசியல் பிரமுகர்கள் என்ற போர்வையில் வலம்வருவது நிறுத்தப்படும். பினாசே போன்றவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்." என்று கோரியுள்ளது. 'மனிதஉரிமைமீறல்களுக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள மிகப் பிரதான வெற்றி இது" என ஜெனிவாவில் உள்ள சர்வதேச யூரிகள் சபை கூறியுள்ளது.

இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டு உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட சர்வாதிகாரிகளைச் சுமந்து நின்றது. குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா மோசமான சர்வாதிகார வரலாறுகளைக் கொண்டுள்ளது. இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் ஆர்ஜென்ரைனாவில், பொலிவியாவில், பிறேஸிலில், சிலியில், பராகுவேயில், உருகுவேயில் தமது விஷக் கரங்களைப் பதித்தார்கள். எதிர்க்கருத்துள்ளோரை வேட்டையாடினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் கொலை, கைது, காணாமல் போதல் என்பனவே அன்றாட வாழ்க்கையாயிற்று. இக் கொடுமைகளில் பிரசித்தி பெற்றவர்கள் சிலியினதும் பராகுவேயினதும் இரகசியப் பொலிசார். இவர்களது செயற்பாடுகளுக்கான ஆசீர்வாதமும் நிதியும் பயிற்சியும் ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி வாய் கிழியப்பேசும் அமெரிக்காவிலேயே வழங்கப்பட்டது. இதிலே இன்னுமொரு கேவலமான விடயம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட நாடுகளிலே இந்த இராணுவச் சர்வாதிகாரிகளின் ஆட்சிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும்கூட புதிதாகப் பதவியேற்ற ஜனநாயக அரசாங்கங்கள், தமது அரசாங்கங்கள் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு உட்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இந்தச் சர்வாதிகாரிகளுடன் சமரசம் செய்துகொண்டு அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, இச்சர்வாதிகாரிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் சட்டங்களையும் நிறைவேற்றிவிடுகிறார்கள். இதன்காரணமாக இந்தச் சர்வாதிகாரிகளால் பாதிக்கப்பட்டோர் நடத்திவரும் போராட்டங்கள் பலமிழந்து பயனிழந்து போய்விட்டன.

இலத்தீன் அமெரிக்காவின் இதர சர்வாதிகாரிகளைப் போலன்றி பினாசெ நாகரீகப் போர்வை போற்றிய நரித்தனமானவர் - இவர் தனது சொந்தத் திறமையால் இராணுவத்தில் ஜெனரலாகவில்லை. இவரது மனைவியின் குடும்பத்தின் உதவியினாலேயே இவருக்கு இப்பதவி கிடைத்தது. இக்காலகட்டத்தில்தான் 1970 செப்ரெம்பர் மாதம் சோசலிஸ்ட்டான சல்வடோர் அலண்டே சிலியின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அலை பரவிவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவின் அடிவயிற்றில் நெருப்பை மூட்டியது. வழக்கம்போல பொருளாதார அழுத்தங்கள்மூலம் சிலியின் உள்நாட்டு அமைதி நிலையை அமெரிக்கா சீர்குலைக்கத் தொடங்கியது. சி.ஐ.ஏ.யினூடாக அலண்டேயின் அரசைக் கவிழ்ப்பதற்கான காய்களை அமெரிக்கா நகர்த்த ஆரம்பித்தது. விளைவு பினாசெயின் பணிவைப் பாராட்டி சிலியின் உள் நாட்டமைச்சர் ஜெனரல் பிறாற்ஸ் தரைப்படையின் தலைவராக்கினார். அலண்டேயின் ஆட்சியைக் கவிழ்க்க முயலும் அமெரிக்கச் சதிக்கு பினாசெ துணைபோனார். 1973ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ம் திகதி பினாசெயின் தலைமையில் அலண்டேயின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அலண்டேயின் மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பெருமளவில் கைதுசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். நீதி விசாரணையற்ற கொலைகளும், கொடூரமான சித்திரவதைகளும் அன்றாட நிகழ்வுகளாயின. 1974ம் ஆண்டு யூன் மாதம் பினாசெ சிலியின் உயர் தலைவராக தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் பினாசெ சிலிக் குடியரசின் ஜனாதிபதி தானே என்று அறிவித்தார். ஒரு இராணுவ அதிகாரி இராணுவச் சர்வாதிகாரியாக மாறி அமெரிக்க மற்றும் மேற்குலக ஆசீர்வாதங்களுடன் 17 வருடங்கள் தமது இரும்புக்கர ஆட்சியால் சிலி மக்களின் சிரங்களை நெரித்தார். 1987ம் ஆண்டு பெரும்பான்மையான சிலி மக்கள் இராணுவ ஆட்சியை நிராகரித்ததனால் 1989ம் ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய நிலை பினாசெயிற்கு ஏற்பட்டது. மாறிவரும் உலக அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்காவினால்கூட தமது கைக்கூலி சர்வாதிகாரியின் ஆட்சியைத் தொடரச் செய்ய முடியவில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பற்றீசியோ அயல்வீன் சிலியின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இருப்பினும் இராணுவம் பினாசெயின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டே இருந்தது. ஆயினும் 1998ம் ஆண்டின் ஆரம்பத்தில் பினாசேயின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதே ஆண்டு மார்ச் மாதம் பினாசெ இராணுவத்தின் சகல பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். 1980ம் ஆண்டு தானே மேற்கொண்ட அரசியல் சட்ட சீர்திருத்தத்தின்கீழ் தமது எதிர்காலப் பாதுகாப்பு குறித்து வலதுசாரிகள் பலம் வாய்ந்த சிலியின் செனட்சபையில் ஆயுட்கால செனட்டர் பதவியை 1998இல் பினாசெ ஏற்றார். சிலி அரசின் முற்போக்கான அரசியல் சட்டச் சீர்திருத்தங்களை இச்சபையே தடுத்துவருவது குறிப்பிடத் தக்கது. அதிகாரபூர்வமான கணக்கீடுகளின்படி பினாசெயின் ஆட்சிக்காலத்தில் 3197பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1102பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் உண்மையில் இவ்வெண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகம் எனக் கருதப்படுகிறது. பினாசெயின் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்துக்கூறும்போது இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயம் இல்லை. சிலியும் பிரித்தானியாவும் தீர்த்துக்கொள்ள வேண்டிய விடயம் என்று நழுவிவிட்;டனர். வழமையாக தமது கைக்கூலிச் சர்வாதிகாரிகளைப் பாதுகாத்துவரும் அமெரிக்காகூட மாறிவரும் உலக அரசியல் காரணமாக பினாசெயின் பிரச்சனையில் நழுவிவிட்டது.
பினாசெயின் கைது உலகின் பல பாகங்களில் வாழ்ந்துவரும் முன்னாள் இந்நாள் சர்வாதிகாரிகளுக்கு கிலியைக் கொடுத்துள்ளது. இன்னும் தம் சொந்த நாட்டிலும், வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் மேலும் சில சர்வாதிகாரிகளின் கடந்தகால, நிகழ்காலப் பக்கங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் சற்று நோக்குவோம். ஆசியப் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் குடிசனத்தொகைமிக்க நாடான இந்தோனேசியாவின் சர்வாதிகாரியாகிய ஜெனரல் சுகார்த்தோ, இவருக்கு இப்போது வயது 76. 1965ம் ஆண்டு மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பின்மூலம். இந்தோனேசியாவின் ஜனாதிபதியானவர். கடந்த வருடம் மாணவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சிகளின் மூலமே இவரது பதவி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள் உயர் அரசபதவிகளில் இருந்துகொண்டு இந்தோனேசியாவின் வளங்களையும் சொத்துக்களையும் சூறையாடி இன்றைய இந்தோனேசியாவின் பொருளாதாரச் சீரழிவுகளுக்குக் காரணமாயினர். அதுமட்டுமல்ல, தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சுகார்த்தோ மூட்டி வைத்த இன மத முரண்பாடுகள், இன்று இந்தோனேசியாவில் 1965ம் ஆண்டுக்கும் 1966ம் ஆண்டுக்கும் இடையில் சுகார்த்தோ மேற்கொண்ட படுகொலைகளின் எண்ணிக்கை 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம்வரையிலானதாகும்; இத்துடன் சுகார்த்தோவின் கொலைக்கரங்கள் ஓயவில்லை. 1975ம் ஆண்டு கிழக்குத் தீமோரை ஆக்கிரமித்த சுகார்த்தோவின் படைகள் தீமோர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை அடக்கி இதுவரை 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளனர். இவ்வளவு படுகொலைகள், கொள்ளைகள் புரிந்தும் தமது பதவி முடிவுக்கு வந்தபின் தமது ஆதரவாளர் ஒருவரையே ஜனாதிபதியாக்கிவிட்டு தமக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் குறித்தோ, நீதி விசாரணைகள் குறித்தோ அலட்டிக் கொள்ளாமல் சர்வாதிகாரி சுகாரத்தோ இந்தோனேசியாவில் தம் சுகபோக வாழ்க்கையைத் தொடர்கிறார். ஆனால் நிகழும் அரசியல் மாற்றங்கள் விரைவில் சுகார்த்தோவைக் கூண்டுக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சுகார்த்தோவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் தற்போது இந்தோனேசிய அரசின்மீது பாரிய அளவில் பிரயோகிக்கப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தின் இன்னுமொரு இராணுவச் சர்வாதிகாரி பர்மாவின் ஜெனரல் நெவின். இவருக்கு இப்போது வயது 87. 1988ம் ஆண்டில் பர்மாவில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் 3000 பேரை நெவின்னின் அரசு படுகொலை செய்தது. இவரது அரசுக்கும் அமெரிக்கா அனுசரணையாக இருந்தது. 1988 யூலை மாதத்தின்பின் இவர் எந்தப் பதவியையும் வகிக்காதபோதும் பர்மா இராணுவ அரசிடம் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார். பர்மிய மக்கள் தொடர்ந்தும் ஊழலும், கொடுமையும் நிறைந்த இராணுவ ஆட்சியாளர்களிடமே சிக்கித் தவிக்கிறார்கள்.

தென் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆர்ஜென்ரீனாவின் இராணுவச் சர்வாதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளே அதிகம். 1976க்கும் 1983க்கும் இடையே இந்த இராணுவ ஆட்சியாளர்களால் 30ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். இக் கொடுமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஒரு கறுப்புப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. கடத்தல், கைது செய்தல், கொலை, காணாமல் போதல், குழந்தைகள் கடத்தப்படல் இவை அனைத்துமே ஆர்ஜென்ரைனாவில் இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் நடத்திய அராஜக ஆட்சிமுறை. சர்வதேச நிர்ப்பந்தங்களும் ஆர்ஜென்ரீனா மக்களின் தொடர் போராட்டங்களும் புதிய அரசாங்கங்கள் இந்த இராணுவ ஆட்சியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தொடர்ச்சியாக வழி கோலியுள்ளது. இதன் காரணமாகவே ஜோர்ஜ் விடேலா, முன்னாள் அமிரல் மஸேரா போன்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிரதேசத்தின் இன்னுமொரு மோசமான சர்வாதிகாரி பராகுவேயின் அல்ஃபிரடோ ஸ்ரோஸ்னர். இவரே உலகின் மிகநீண்ட கால சர்வாதிகாரி. 35 வருடங்கள் இவரது இரும்புக் கரங்கள் பராகுவே மக்களின் சிரங்களை நெரித்தன. 1989ம் ஆண்டு இவரது சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின் இவர் இப்போது பிறேஸிலில் அகதியாக ஆனால் அரச வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் பினாசெயின் கைது இவரது அடிவயிற்றிலும் புளியைக்கரைத்திருக்கும்.

இந்த சர்வாதிகாரிகள் வரிசையில் இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் சர்வாதிகாரி ~பேபி டொக்| என அழைக்கப்படும் ஹெயித்தியின் யேன் குளோட் டுவாலியே. உலகின் மிக ஏழ்மைநாடான ஹெயித்தியிலிருந்து சூறையாடிய 200 மில்லியன் டொலர்கள் சொத்துக்களோடு 1986ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறிய டுவாலியேக்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கி பிரான்ஸ் 8 நாட்கள் விசா அளித்தது. இவரது அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. 12ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸில் செல்வந்தர்கள் வாழும் பகுதியான ஊôவந ன'யுணரச பகுதியில் மாளிகையில் வாழ்ந்து வரும் இவரது சரியான முகவரி தமக்குத் தெரியாது என பிரெஞ்சு வெளிநாட்டமைச்சும், பிரான்சில் உள்ள ஹெயித்தி தூதரகமும் இதுவரை சொல்லி வந்தது. ஆனால் பினாசேயின் கைதினால் மனிதஉரிமை அமைப்புகள் பெற்ற புதிய உந்துசக்தி இப்போது இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துள்ளது. பிரான்சில் வதிவிடப் பத்திரமற்றிருக்கும் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டுமக்கள் அரசாங்கத்தால் நாடு கடத்தப்படும்போது வதிவிடப் பத்திரமற்றிருக்கும் டுவாலியேயை நாடு கடத்தவேண்டும் என்ற வழக்கை மனிதஉரிமை அமைப்புக்கள் கிறஸ் நகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இது குறித்த நீதிவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரெஞ்சு உள்நாட்டு அமைச்சர் யேன் பியர் செவன்மா கருத்துக் கூறுகையில் பொலிசாரின் கையில் டுவாலியே சிக்குண்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனக்கூறியுள்ளார். இது சர்வாதிகாரிகள் தொடர்பாக அரசாங்கங்களின் புதிய அணுகுமுறையைக் காட்டும் இன்னுமொரு சம்பவமாகும்.
சர்வாதிகாரிகளின் பட்டியலில் அடுத்துவரும் எல்சல்வடோரின் பாதுகாப்பு அமைச்சரான ஜோஸ் கில்லர்மோ கார்ஸியாவும் பல ஆயிரக்கணக்கான படுகொலைகளின் சொந்தக்காரன். இவனது படுகொலைகளுக்கும் இடதுசாரி எதிர்ப்பு என்ற போர்வையில் அமெரிக்கா பக்கபலமாக இருந்தது. அது மட்டுமல்ல இவர் இப்போது அமெரிக்காவில் வளமாக வாழ்கிறார். இச் சம்பவங்களின்மூலம் இந்தச் சர்வாதிகாரிகளின் ஆட்சிகளுக்கு அமெரிக்கா எப்படிப் பக்கபலமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆபிரிக்காவும் சர்வாதிகார சாம்ராச்சியங்களுக்குள் மிகமோசமாகச் சிக்கித் தவித்த பிரதேசங்களில் ஒன்று. ஆபிரிக்காவின் முன்னாள் சர்வாதிகாரிகளில் இப்போது எஞ்சியுள்ளவர்கள் நான்குபேர். எண்ணற்ற கொடுமைகளுக்கு, கொலைகளுக்கு காரணமான இவர்கள் தமது குற்றச் செயல்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்படாது தமது சொகுசு வாழ்க்கையைத் தொடருகின்றனர். 14வருட சர்வாதிகார ஆட்சியின்பின் எதியோப்பியாவில் மென்கிஸ்து ஹெய்லே மரியம் 1991ம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் 1 இலட்சத்திலிருந்து 2 இலட்சம்வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர். எரித்திரிய மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் மிலேச்சத்தனமாக நசுக்கப்பட்டது. தற்போது ஸிம்பாவெயில் அரசுக்குச் சொந்தமான ஆடம்பர வாசஸ்தலமொன்றில் சொகுசு வாழ்க்கை நடத்திவரும் மெகிஸ்துவுக்கு கடந்த ஆண்டே அடிஸ் அபாவிலுள்ள நீதிமன்றம் ஒன்று தண்டனை விதித்தது. ஆனால் அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆபிரிக்கப்பிரதேசத்தின் இன்னுமொரு மூர்க்கமான சர்வாதிகாரியின் பெயரைக் கேட்டாலே இரத்தம் உறைந்துவிடும். அவர்தான் உகண்டாவின் இடிஅமின் டாடா. இவரது எட்டுவருட சர்வாதிகார ஆட்சி பெரும் பயங்கரங்கள் நிறைந்தது. எதிர்ப்பாளரின் இரத்தத்தைக் குடித்து மனிதமாமிசத்தை உண்ணும் வழக்கமுள்ள இடிஅமின் எண்ணக் கணக்கற்ற பெண்களை மனைவிகளாக்கிக் கொண்ட ஒரு பாலியல் வெறியன். உகண்டாவின் வளங்களை மாத்திரமல்ல, அங்கு குடியேறி காலம் காலமாக வாழ்ந்து வந்த ஆசியமக்களை விரட்டியடித்து அவர்களது சொத்துக்களையும் சூறையாடினான். இப்போது இவர் சவூதி அரேபியாவில் தனது பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருக்குப்பின் உகண்டாவின் ஆட்சியைக் கைப்பற்றிய இன்னுமொரு சர்வாதிகாரி மில்ரன் ஒபடே இப்போது லுஸாகாவில் தனது ஆடம்பர வாழ்வைத் தொடர்கிறார். தென்னாபிரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான நிறவெறி ஆட்சிக்கும், கறுப்புஇன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்களுக்கும் காரணமான தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பீற்றர் பொதா தென்னாபிரிக்காவிலேயே ஒரு சுதந்திர மனிதனாக வாழ்கிறார்.

எது எப்படியிருப்பினும் பினாசெயின் கைது நேற்றைய மற்றும் இன்றைய சர்வாதிகாரிகளின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்திருப்பது உண்மை. சர்வாதிகாரிகளின் கொடிய ஆட்சிக்காலகட்டங்களின்போது கொல்லப்பட்ட, காணாமல்போன தமது உறவுகளுக்காக அப்பாவி மக்கள் ஓய்வில்லாமல் நடத்திவரும் வீதியோரப் போராட்டங்கள் வீண்போய்விடவில்லை. அதைப்போலவே நேற்று பிலிப்பைன்சின் மார்க்கோசையும், நிக்கரகுவாவின் சமோசாவையும், பாகிஸ்தானின் யாக்கியாகான், மற்றும் ஸியாவல்ஹக்கையும் ஈரானின் ஷா போன்றவர்ளை பாதுகாத்ததுபோல இன்றோ நாளையோ பாதுகாக்கமுடியாது என்ற நிலைக்கு அமெரிக்காவும் அதன் சகபாடிகளும் வந்துவிட்டன. இந் நிகழ்வுகள் இந்த நூற்றாண்டுக்கான முடிவுரை எழுதப்படும்போது சர்வதேச சர்வாதிகாரத்திற்கான முடிவுரையும் எழுதப்பட்டுவிடும் என்ற நல்லநிலையே இன்று தோன்றியுள்ளது. இது சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்துக்கும் மனிதஉரிமைகளுக்கான போராட்டத்துக்கும் கிட்டியுள்ள நல்ல சமிக்ஞையாகும். மக்களின் ஜனநாயக உரிமைகளை மிதித்தவர்கள்.... மிதிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்ற நிலை இன்று தோன்றியிருப்பது இருபத்தோராம் நூற்றாண்டுக்கான ஒரு நல்ல ஆரம்பமுமாகும்.