அது வரவேண்டும்தான்-
மிருதுவாக-
ஒரு மெல்லிய இறகு
தடவி பறப்பதேபோல்-
ஒரு சினேகிதனின்
இதமான பேச்சு
இழுத்துச் செல்வதேபோல் -
பூவின் வாசத்தில்
கரைந்து புறப்படுவதுபோல்
அது வரத்தான்வேண்டும் -
இயற்கையின்
சொந்தக்காரர்கள்
என்பதால்
அதுவும் அதுபோல
அமைவதுதான் நியாயமானது -
அது
வாழ்க்கையின் நேர்த்திகளில்
நியாயங்களில் ஒன்றாக
உருக்கொள்வது உத்தமமானது
ரகஸ்யமாய்
ஒரு கோழையின்
அர்த்தமற்ற சவடால்போல்
அது வருவது
ஒவ்வாதது - ஆனாலும்
என் சினேகிதமே
உனக்கும் உனக்கானதாய்
எனக்கும்கூட
அப்படி நேராதது சோகம்தான்
எப்படி நேர்ந்தது-
செயற்கையாய் ஆச்சர்யமாய்-
ஒவ்வொரு துளி குருதியும்
அர்த்தத்தோடுதான்
பூமியில் சிந்தவேண்டும்
என்ற லட்சியம் பேசினது
நினைவிலிருக்கிறது.
பூவின் இதழை
கிள்ளியெடுக்கக்கூட
ஒப்பியதில்லை-
பார்த்தே சந்தோஷித்த
காலங்கள் ஞாபகத்திலிருக்கிறது.
மென்மையைக் களவாடுவது
வெளிச்சத்தைத் திருடுவது
புன்னகையைச் சிதைப்பது
அவ்வப்போது நேரத்தான்
செய்கிறது-
பின்னால் திரும்பினால்
தெரிகிறது தொடர்ச்சி-
அர்த்தமற்ற காரியங்கள்
எவ்வளவோ
அதிலொன்று இதுவென
இப்போதைக்குச் சொல்லிக்
கொள்ளலாம்-
மென்மையையும்
மேன்மையையும்
முகத்துச் சிரிப்பையும்
பறித்துப் போனவர்கள்
திரும்பவருவர்
கனம் சுமக்கமுடியாமல்-
நீயும் உன்னோடு நானும்
விட்டுச் சென்ற
நினைவுகள்
வழித்தடமாகவும் கூடும்-
அவர்கள் திரும்ப வருவர்
எடுத்துச் சென்றதைத்
திரும்பக் கொடுக்க-
புன்னகையோடு பெற
நீயும் உன்னோடு நானும்
இருந்த இடத்தில்
ஆயிரம் பேர்களுக்கு மேல்
இருப்போம்
புன்னகை தொலைக்காமல்
பெற்றுக்கொள்ள-